Thursday, February 15, 2007

இதழ்களின் பாலியல் வன்முறை

இதழ்களின் பாலியல் வன்முறை பூவிழியன்

ஊடகங்கள் ‘கருத்தியல் பரிமாற்றக் கருவிகள்' என்ற நிலையிலிருந்து மாறி வியாபாரம் லாபம் முதலிய இரண்டு சுயநலப் புள்ளிகளை மையப்படுத்தி இயங்கத் தொடங்கி உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு உத்தியைக் கையாள வேண்டும் என்று திட்டமிட்ட ஊடகம் இறுதியாக செக்ஸ் என்கிற தளத்தில் சிந்தனையைச் செலுத்த ஆரம்பித்ததுபொதுக் கண்ணோட்டத்தில் பாலியல் மருத்துவம், செக்ஸ் விழிப்புணர்வு, மருத்துவத் தொடர் என்கிற அடையாளங்கள் இருந்தாலும் உள்ளீடான பார்வையில் உணர்வுத் தூண்டலை ஏற்படுத்தி விற்பனையை அதிகரிப்பதற்கான ஒரு நுட்பமான செயலாகத்தான் இது தென்படுகிறது. இன்றைய நிலையில் வெகுஜன இதழ்களாக இருந்தாலும் சரி அல்லது குறைந்த எண்ணிக்கையில் விற்பனையாகக் கூடிய சிறிய இதழ்களாக இருந்தாலும் சரி அவை செக்ஸ் தொடர் எழுதுவதைக் கட்டாயமாக வைத்திருக்கிறன. இதன் எதிர்விளைவான இளைய தலைமுறையின் பண்பாட்டுச் சீரழிவு பற்றி இவ்விதழ்கள் கொஞ்சமும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.நவம்பர் 10, 2004 இந்தியாடுடேயின் அட்டையில் ‘இன்டர்நெட் செக்ஸ்' இந்திய ஆபாச அலை, என்று பெரிய எழுத்துக்களிலும் அதன் கீழே சிறிய எழுத்துக்களில் இன்டர்நெட்டில் இந்தியப் பெண்களின் ஆபாசப் படங்களுக்கு உலக அளவில் கிராக்கி கூடுகிறது என்று கவர்ஸ்டோரியின் தலைப்பும், ஆபாசமாக ஒரு பெண்ணின் படத்தையும் வெளியிட்டிருந்தது. அதில் சில இணைய தளங்களின் பெயரைக் குறிப்பிட்டு எல்லா இணைய தளங்களுமே, இந்தியப் பெண்களை ஒட்டுத் துணியில்லாமல் காண்பிப்பதாக தம்பட்டமடித்துக் கொண்டது. இந்தத் தளங்களுக்கு சந்தாதாரராகி அவற்றைப் பேரோடும், புகழோடும் வளமாக வாழ வைப்பதும் இந்தியர்கள் என்று அந்த இதழ் இந்தியர்களின் பெருமையை வேறு வெளியிட்டது.இணைய தளங்கள் எப்படி இளைஞர்களை ஈர்க்கிறது என்பதைக் கூறி, எங்கோ சிலரால் மட்டும் பயன்படுத்தப்பட்ட செக்ஸ் இணையத் தளங்களுக்கு கவர் ஸ்டோரி எழுதுவதன் மூலம் பரவலாக்குகிற இந்தப் போக்கு இளைஞர்களை எந்தவிதமான மாற்றத்துக்கு உட்படுத்தும் என்பதை அந்த இதழ் அறியாதா என்ன? வணிகநோக்கு பெரிதாகும்போது சமூகப் பொறுப்பு காணாமல் போகிறது. நக்கீரன் நவம்பர் 13-16-2005 இதழில் ‘அதில்.. யார் முதலிடம்? கலக்கும் சர்வே' என அட்டையில் ஒரு தலைப்பு பாலியல் விழிப்புணர்வு பற்றிய கணக்கீடாம் அது. அதில் யார் முதலிடம் என்று போடுவதைத்தான் விழிப்புணர்வாகக் கருதுகிறது. மேலும் இங்கே செக்ஸ் பற்றிய தவறான புரிதலோடு வாழ்பவர்களே அதிகம் எனும் இந்தக் கட்டுரை எத்தனை பேருடன் உறவு? என்கிற கொச்சைத்தனமான சிந்தனையைப் பரவலாக்க முயற்சித்தது.நக்கீரன் இதழைப் பொறுத்தவரை செக்ஸ் தொடர்களின் வழிகாட்டி என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு தொடர்ந்து ஏதாவது ஒரு பாலியல் பிரச்சனை மையப்படுத்தி கதை எழுதுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அரசியல் இதழ்கள் என்றால் பொதுவாக வயதானவர்கள் படிக்கிற ஒரு நிலையை மாற்றி இளைஞர்களையும் படிக்க வைக்கத் தூண்டிய மாற்றம் அரசியல் ஏடுகளில் எழுதப்பட்ட செக்ஸ் தொடர்களுக்கும் பொருந்தும். நக்கீரன், ஜீனியர் விகடன் போன்ற வார இதழ்களை வாங்கும் இளைஞர்கள் அதிகமானோர் செக்ஸ் தொடர்களைப் படிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அப்படியொரு சூழலுக்குள் இந்த இதழ்கள் இளைஞர்களைத் தள்ளியிருக்கிறது. அரசியல் இதழ்களைக் கூட பதுக்கி வைத்துப் படிக்கிற பழக்கத்தை இது போன்ற தொடர்கள் உருவாக்கி வருகிறது.தொடக்கத்தில் நக்கீரன் மாத்ருபூதத்தையும் ஜீனியர் விகடன் நாராயண ரெட்டியையும் வைத்து செக்ஸ் தொடர்கள் எழுதத் தொடங்கின. அதனால் விற்பனை கூடவே நக்கீரனில் தொடர்ந்து பாலியல் சம்பவங்கள் இடம் பெற ஆரம்பித்தது இரண்டாயிரத்து இரண்டாமாண்டில் திரையுலகில் நடிகைகள் நடிகர்களுடன் உல்லாசமாக அலைந்தது பற்றியும் நடிகைகளுக்கு வாய்ப்பு தருவதாகக் கூறித் தயாரிப்பாளர்கள் செய்த பாலியல் சம்பவங்களையும் தொகுத்து ‘நடிகையின் வாக்குமூலம்' எனும் தலைப்பில் தொடராக பல மாதங்கள் வெளிவந்தது. நடிகைகளின் பாதிப்பை வெளிப்படுத்தக் கூடிய தொடர் என்பதற்கு மாறாக சமூகச் சீரழிவை ஏற்படுத்தக் கூடிய தொடராக அது இருந்தது. 2005ல் மீண்டும் "நடிகைகளின் கதை'' என தலைப்பில் கட்டுரைகளை வெளியிட்டது. இதற்கு நடிகைகளோ அல்லது நடிகர் சங்கமோ எந்தவிதமான எதிர்ப்பையும் சிறிது கூடக் காட்டவில்லை."ஆண் பெண் கவர்ச்சியின் ஆதி மூலத்தைக் தேடி ஆக்கப்பூர்வமான ஓர் அறிவியல் பயணம்'' எனும் வரிகளுடன் டாக்டர். நாராயணரெட்டி தற்பொழுது உயிர் எனும் தொடரை வார இதழ் ஒன்றில் எழுதி வருகிறார். அத்தொடரில் வெளியிடப்படும் படங்கள் அறிவியல் உண்மைகளை அறிந்து கொள்வதற்கு பதிலாக இளைஞர்களின் உணர்ச்சி மீறலுக்கே வாய்ப்பாக அமைகிறது.வீட்டில் இருக்கும் பெண்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் வார இதழாக ராணி இருந்தது. அதிலும் கூட இப்போது மன்மத இரகசியம் எனும் பாலியல் தொடரும், அது தொடர்பான பாலுறவுக் காட்சிப்படங்களும் அதிக அளவிலான ஆண்களையும் அவ்விதழை விரும்பி வாங்க வைத்திருக்கிறது. இதழின் வணிக நோக்கும் நிறைவேறிவிட்டது. வார இதழ்களின் நிலை இவ்வாறிருக்க தினத்தந்தி, தினமலர் போன்ற நாளிதழ்களும் இதற்கெனப் பக்கங்கள் ஒதுக்கத் தொடங்கிவிட்டது. தினத்தந்தியின் ஞாயிறு இணைப்பில் ‘அந்தரங்கம் இது அந்தரங்கம்' ஒரு பெண்ணின் ரகசியங்கள் எனும் கேள்வி-பதில் தொடரும், தினமலரின் சைக்காலஜி பகுதியில் ‘குழந்தை எப்படி பிறக்குது?' என்ற தொடரும் ஆரம்பிக்கப்பட்டு வணிகப்போட்டியில் சமூக அக்கறையைத் துறந்து நிற்கின்றன. இதே வரிசையில் ஏராளமான வார இதழ்களையும் பட்டியலிட முடியும். இதில் சர்வே என்கிற பெயரில் இந்தியா டுடேவின் அத்துமீறல் எல்லைதாண்டி விட்டது.செக்ஸ் விழிப்புணர்வு மருத்துவம் என்பது அறிவியல் கோட்பாடுகளை உண்மைகளை தெளிவுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அதுபற்றிய பயத்தை நீக்குவதாகவும் அமைய வேண்டும். மாறாக, இளைஞர்களை உணர்ச்சிகளின் தளத்தில் உசுப்பி விடக் கூடியதாக இருக்கக் கூடாது. மனிதனைத் தவறுசெய்யத் தூண்டக் கூடாது. ஆனால், இன்று வரக்கூடியவை எல்லாம் இளைஞர்களை முடக்கக் கூடியதாகவும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் செக்ஸ் என்ற சொல்லுக்குள் அடிமையாகக் கிடக்க வைப்பதாகவும் இருக்கிறது.கணினியுகத்தின் இணையத் தளங்களோடு போட்டியிடும் வண்ணம் பாலியல் வன்முறை தற்போது இதழ்களிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதமாக மாறி வருகிறது. செக்ஸ் விழிப்புணர்வு தேவைதான் மறுக்கவில்லை. ஆனால், அது வாசகர்களைப் பாலியல் ரீதியாகக் கவருவதற்கான சூத்திரமாக அமையக் கூடாது. வியாபாரத்திற்கும் லாபத்திற்காகவும் செக்சை விற்பனைக் கருவியாகப் பயன்படுத்துகிற தன்மை இதழ்களின் கேவலமான போக்காகத்தான் வெளிப்படும். ஊடகங்கள் கருத்தியல் பரிமாற்றக் கருவி என்கிற நிலையில் இருந்து காமக்கருவியாக மாறுவது கண்டிக்கத்தக்கது.

No comments: