Tuesday, February 20, 2007

சுஜாதாவின் சுயசாதிப் பற்று

சுஜாதாவின் சுயசாதிப் பற்று
விடுதலை ராசேந்திரன்
அயோத்தியா மண்டபம் - பார்ப்பனர்களுக்கு மட்டுமே கதவு திறக்கும் வர்ணாஸ்ரமத் திமிரின் கோட்டை! பஞ்ச கச்சம், பூணூல் திருமேனிகளோடு, பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத மக்களை ‘சூத்திரர்கள்’ என்று இழிவுபடுத்தும் பார்ப்பனியச் சடங்குகள் - ஒவ்வொரு நாளும் அரங்கேற்றப்படும், அக்கிரகார அகங்காரத்தின் பீடம்! “மண்டபத்துக்குள்ளே பிராமணரல்லாதார் எவருக்கும் அனுமதி கிடையாது” என்று ஒலி பெருக்கி வைத்து, அறிவிப்பது அங்கே வழக்கம். திருவரங்கத்தில் பெரியார் சிலையை திட்டமிட்டு சூழ்ச்சி செய்து உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அயோத்தியா மண்டபத்தில் பார்ப்பனத் திமிரின் அடையாளமான பூணூல்கள் - இரண்டு பார்ப்பனர்களிடமிருந்து அறுக்கப்பட்டதை, பார்ப்பன எழுத்தாளர் சுஜாதாக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘குமுதம்’ ஏட்டில் (3.1.2007) புத்தாண்டு சிறப்புக் கதை ஒன்றை ‘அயோத்தியா மண்டபம்’ என்ற பெயரில் எழுதி - தனது பார்ப்பனியத்துக்கு, இலக்கியம் படைத்திருக்கிறார், கதை இதுதான்:

அயோத்தி மண்டபத்துக்கு அருகே - ‘பூணூல்’ விற்பனைக் கடை நடத்தும் வைதீகப் பார்ப்பனரின் மகன் - தன்னோடு அய்.அய்.டி.யில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, இருவரும் அமெரிக்காவில் வேலை கிடைத்து, பயணத்துக்குத் தயாராகிறார்கள். புரோகிதப் பார்ப்பனர், இந்தத் திருமணத்தை ஏற்கவில்லை. வெளிநாடு போவதற்கு முன், தனது மாமனாரிடம் நேரில் சொல்லி விடைபெற விரும்புகிறார், பிற்படுத்தப்பட்ட பெண். கணவன், இதை தனது தந்தையிடம் கூறுகிறார். தனது வீட்டுக்கு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துப் பெண் வரக்கூடாது; வேண்டுமானால், அயோத்தியா மண்டபத்துக்கு அருகே தனது பூணூல் கடைக்கு வரச்சொல் என்கிறார். மகனும், மருமகளும் அயோத்தியா மண்டபத்துக்குப் போகும் போது - புரோகிதப் பார்ப்பனரின் பூணூலை - ஆட்டோவில் வந்த சிலர் அறுத்து, அவரைத் தாக்குகிறார்கள்.

மருத்துவமனையிலே பார்ப்பனர் அனுமதிக்கப்படுகிறார். பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த பெண், தனது அமெரிக்க பயணத்தையே ரத்து செய்துவிட்டு, மாமனாருக்கு மருத்துவ உதவி புரிய முன் வருகிறார். ஆனால் அமெரிக்காவில் கிடைத்த வேலையோ கணவன், மனைவி இருவரும் இணைந்து செய்ய வேண்டிய வேலை. மருமகள் தன்மீது காட்டிய பரிவால், மனம் உருகிய புரோகித மாமனார், மருமகளை ஏற்றுக் கொண்டு, நீங்கள் இருவருமே அமெரிக்காவுக்குப் போங்கள் என்று கூறுகிறார். அப்படி விடை கொடுக்கும்போது, புரோகிதப் பார்ப்பனர் இவ்வாறு கூறகிறார். அத்துடன் கதை முடிகிறது.

“கலிபோர்னியாவுல அம்மாவசை தர்ப்பணம் பண்ணி வெக்கறவா யாராவது நம்மவா இருக்காளா? விஜாரி. தர்ப்பையைத் தூக்கிண்டு வந்துர்றேன். என்னால இனிமே அடி தாங்க முடியாது” - சுஜாதாவின் பார்ப்பனப் பாசத்தையல்ல; பார்ப்பன வெறியையே வெளிப்படுத்துகிறது இக்கதை!

“என்னால இனிமே அடி தாங்க முடியாது” என்று எழுதியிருப்பதன் மூலம் - பார்ப்பனர்கள் எல்லாம், ஏதோ தமிழ்நாட்டில் நாள்தோறும் அடிவாங்கி அடிவாங்கி, பொறுமையின் கடைசி எல்லைக்கு வந்துவிட்டதைப்போல ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குகிறார் சுஜாதா!

‘தர்ப்பை’, ‘தர்ப்பணம்’, ‘பூணூல்’ - இவை எல்லாம், பார்ப்பனர்களின் கலாச்சார அடையாளங்கள். அந்த அடையாளங்களைப் பேணுவது ‘அவாளின்’ உரிமை; இதை எதிர்ப்பதோ சிதைப்பதோ, குற்றம் என்பது, சுஜாதா உட்படப் பார்ப்பனர்களின் வாதமாக இருக்கிறது. எந்த ஒரு இனமும், தனது கலாச்சார அடையாளங்களைப் பேணவும், பின்பற்றவும் உரிமை இருக்கிறது. ஆனால், அந்த அடையாளங்கள் ஏனைய பிரிவினரை இழிவுபடுத்துவதாகவும், அடிமைப்படுத்தக்கூடிய ஆயுதமாகவும் இருக்கக் கூடாது.

பார்ப்பனர்கள் - ‘காயத்திரி மந்திரம்’ ஓதி - ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ளும் பூணூல் உணர்த்துவது என்ன? பார்ப்பனரல்லாத மக்களை “சூத்திரர்கள்” - பார்ப்பனர்களின் அடிமைகள் - அவர்களின் ‘தேவடியாள் பிள்ளைகள்’; பார்ப்பனருக்கு அடிமை சேவகம் செய்யக் கூடியவர்கள் என்பதைப் பிரகடனப்படுத்துகிறது. பார்ப்பன குலத்தில் பிறந்தவர்களை, “பிராமணனாக” உயர்த்தும் குறியீடுதான் பூணூல்! ‘பூணூலை’ப் போட்டவுடன் ‘பிராமணனா’கி விடுகிறான்! அப்போது - அவன், கடவுளைவிட மேலானவனாக விடுகிறான் என்பதே “பிராமணன்” என்பதன் தத்துவம். “தெய்வாதீனம் ஜகத்சர்வம்; மந்த்ரா தீனம் து தெய்வதம்; தன் மந்திரம் பிரம்மணாதீனம்; தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத் என்கிறது - ‘ரிக்வேதம்’ (62வது பிரிவு - 10-வது சுலோகம்)

இதன் பொருள் என்ன? “உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது. மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. பிராமணர்களே நமது கடவுள்கள்” என்பதுதான்!

“ஸ்மகானேஷ்வபி தேஜஸ்வீ பாவகோனநவ துஷ்யதி ஹீயமானஸ்ச யஜ்னோஷீ பூய ஏவாபி வர்த்த”
- மனுஸ்மிருதி, சுலோகம் 317

இதன் பொருள்: அறிஞனாயிருப்பினும் அறிவிலியாயிருப்பினும் ‘பிராம்மணன்’ மேலான தெய்வம். அக்கினியானது - அதாவது நெருப்பானது, பிணத்தை எரிக்கப் பயன்படுத்தினாலும், அதுவே யாகத்துக்கும் பயன்படுத்தப்படுவதைப்போல் - “பிராமணர்கள்” எந்த இழிதொழிலை செய்பவராக இருந்தாலும், எல்லா நற்காரியங்களிலும் வழிபடத்தக்கவர்கள். காரணம் அவர்கள் மேலான தெய்வங்கள்.

இப்படிப் பிறவியின் அடிப்படையில் தங்களை உயர்ந்தவர்களாகவும், கடவுளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தவர்களாகவும், ஏனைய மக்களை இழிமக்களாக அடிமைப்படுத்தும் அதிகாரம் படைத்தவர்களாகவும் - பார்ப்பனர்களைப் அடையாளப்படுத்துவதுதான் பூணூல்! எனவேதான், “சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக் கூடாது என்றால், மற்ற வருணத்தினர் மட்டும் அதைப் போட்டுக் கொள்ள என்ன உரிமை இருக்கிறது?” - என்று காந்தியே கேட்டார்.

“பூணூல் என்பது அகங்காரச் சின்னம். நான் எல்லோரையும்விட உயர்ந்தவன்; பிராமணன் என்பதன் சின்னம்” என்றார், இந்து மதவாதிகளாலேயே ஏற்றிப் போற்றப்படும் இராமகிருஷ்ண பரமஹம்சர்.

‘தர்ப்பைப் புல்’ பார்ப்பனர்களின் சக்தி மிக்க ஆயுதம்! அதுதான் - பூமியிலிருந்து வானத்திலிருக்கும் “பிதுர்களுக்கு” பொருள்களைக் கொண்டு போய் சேர்க்கிறதாம்! அந்த சக்தியும் அப்படி அனுப்பக்கூடிய உரிமையும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்பதன் அடையாளம்தான் ‘தர்ப்பை’. எனவே தான் குத்தூசி குருசாமி - தர்ப்பைக்கு ‘பரலோக தபால்பெட்டி’ என்று பெயர் சூட்டினார். சுஜாதாவும் தனது கதையில், இந்த இறுமாப்பை பெருமையோடு பூரித்துக் கூறுகிறார். சுஜாதாவின் கதையில் வரும் புரோகிதப் பார்ப்பனர் இவ்வாறு கூறுகிறார்.

“பூணூல் தர்ப்பை சமாச்சாரங்கள் (என்று) ‘பிராமின்’சுக்கு ஏகப்பட்ட கடமைகள்... இதெல்லாம் சாமி (கடவுள்) சமாச்சாரம் மட்டும் இல்லை. பித்ருக்களை அப்பப்ப கூப்ட்டு சிரார்த்தம் பிண்டதானம் செய்ய வெக்கறது. இது எங்க (பிராமணர்களது) பேமிலியோட பரம்பரைத் தொழில்” - என்று ‘பூணூலும், தர்ப்பையும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிய பரம்பரைச் சிறப்பு என்று சிலாகிக்கிறது சுஜாதாவின் கதை.

எனவே, பூணூலும், தர்ப்பையும், சிரார்த்தமும், வேதமும், யாகமும் - பார்ப்பனக் கலாச்சாரம், குறியீடு என்ற எல்லைக்குள் சுருங்கிடவில்லை, பார்ப்பனரல்லாத மக்களாகிய “சூத்திரர்களுக்கு”, அவர்கள் ‘இழி பிறவிகள்’ என்பதால் மறுக்கப்பட்டு, பார்ப்பன பிறவி இறுமாப்பைப் பறைசாற்றும் கலாச்சாரங்கள் என்பதுதான் மிக முக்கியமானது. காலம் காலமாக இந்த ஆதிக்க ஒடுக்குமுறைக் கலாச்சாரத்தைப் பேணி வரும் பார்ப்பனர்கள் - தங்களது, ‘சுயநலம்’ என்று வரும்போது மட்டும், அதை மீறவும் தயாராகிறார்கள். இந்தப் பரம்பரைத் தொழிலில் - தனது மகனை ஈடுபடுத்த கதையில் வரும் புரோகிதப் பார்ப்பனர் தயாராக இல்லை. வேதம் படிக்க வைக்காமல் மகனை அய்.அய்.டி.யில் படிக்க வைக்கிறார். இதில் பார்ப்பன பரம்பரை சம்பிரதாயத்தை மீறுபவர் அய்.அய்.டி.யில் தன்னோடு படிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த கலைச்செல்வியைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும்போது மட்டும் அங்கே ‘பார்ப்பன பரம்பரை’யை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த கலைச்செல்வி - அய்.அய்.டி.யின் படிக்கட்டுகளை மிதித்ததே, பார்ப்பன இறுமாப்பு - ஆதிக்க கலாச்சாரத்துக்கு எதிராக - தமிழ்நாட்டில் பெரியார் நடத்திய போராட்டத்தினால் தான்! சுஜாதாக்கள் - தங்களது கதையில் உயர்த்திப் பிடிக்கும் ‘பார்ப்பனக் கலாச்சாரங்கள்’ தொடர்ந்திருக்குமானால் - கலைச் செல்விகள் எங்கேயாவது கல்லுடைத்துக் கொண்டிருப்பார்கள்; கல்விச் சாலைக்குள் நுழைந்திருக்க முடியாது! வேதம் படிக்க வேண்டிய ‘பிராமணன்’ அய்.அய்.டி. படிப்பதும், அய்.ஏ.எஸ். ஆவதும் தங்களது ‘கலாச்சாரத்துக்கு’ எதிரானது என்று எந்தப் பார்ப்பனனும் எதிர்த்ததாக வரலாறு கிடையாது. அவாளின் ஆதிக்க நலனுக்காக அவர்கள் தங்களது ‘தர்ப்பை’ - ‘பூணூல்’ தத்துவங்களை மீறத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் - பார்ப்பனரல்லாதார் மீது மட்டும் ‘பூணூல் - தர்ப்பை’ கோட்பாடுகளைத் திணிப்பதற்காக, விடாமல் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

அமாவாசை தர்ப்பணம் பண்ண - தர்ப்பையைத் தூக்கிக் கொண்டு, பூணூல் மேனியோடு அமெரிக்காவுக்கே போகத் தயாராகி விடுகிறார், சுஜாதாவின் ‘கதாநாயக’னான புரோகிதப் பார்ப்பனர்! கடல் தாண்டிப் போவதே அவாளின் ‘சாஸ்திரத்துக்கு எதிரானது தான்! தங்களின் சுயநலனுக்காக ‘சாஸ்திர மீறலை’ செய்வதற்குத் தயாராக இருப்பவர்கள் தானே! அதைத் தான் கதையின் ‘முடிப்பிலும்’ நிலை நிறுத்தியிருக்கிறார் சுஜாதா.

‘கம்ப்யூட்டர்’, ‘ஏரோனேட்டிக்’, ‘யூனிர்வர்ஸ்’ என்று, எவ்வளவுதான் விஞ்ஞானத்தைப் பேசியும் எழுதியும் வந்தாலும், சுஜாதாக்கள் அயோத்தியா மண்டபத்தையும், பூணூலையும், தர்ப்பையையும், தர்ப்பணத்தையும், யாகத்தையும், வேதத்தையும் விடத் தயாராகவே இல்லை. அதற்குள்ளே தான் அவாளின் ஆதிக்கத்தின் ‘சூட்சமம்’ அடங்கிக் கிடக்கிறது. என்பது சுஜாதாக்களுக்கும் தெரியும். சுஜாதாக்களைப் போலவே - பெரியார் கொள்கைக்காக உண்மையாகவே களத்தில் நிற்கும் லட்சியப் போராளிகளுக்கும் இது தெரியும்.

2 comments:

Unknown said...

Raji Madu
👉இந்துக்களின் நான்கு வேதங்களில் ஒன்று ரிக் வேதம் ? - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்:

"தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்".

மந்த்ரம் - பிரார்த்தனை
பிரம்மணம் - வழிபாடு
பிரபு - கடவுள்
ஜெயத் - ஆசி
பிராமணன் - வழிபாடு செய்பவன்

👉"இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது; கடவுள் நம் பிரார்த்தனைக்கு கட்டுப்பட்டவர்; பிரார்த்தனைகள் வழிபாட்டு முறைக்குள் அடக்கமானவை. எனவே வழிபாடே கடவுளின் ஆசியை வழங்குவது ". இதுவே அந்த ஸ்லோகத்தின் பொருள்.

👉ஒவ்வொரு வேதத்துக்கும் பிரம்மணம், ஆரண்யகம் மற்றும் உபநிடதங்கள் உண்டு.

1. பிரம்மணம் எனப்படுவது வழிபாட்டு வழிமுறைகள்

2. ஆரண்யகம் எனப்படும் காட்டில் தவம் புரியும் முனிவர்களின் உரைகள்

3. உபநிடதங்கள் என்பவை வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்.

👉ஆனால் இந்த திருட்டு திராவிட எச்சைகள் "பிரம்மணம்" என்ற வார்த்தைக்கான "வழிபாடு" என்ற அர்த்தத்தை "பிராமணர்கள்" என்று திரித்து

👉"இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது; கடவுள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணனுக்கு கட்டுப்பட்டவை. எனவே பிராமணனே கடவுள்".

என்று அதன் பொருளை அபத்தமாக திரித்து பிராமண எதிர்ப்பு சதி வேலையை செய்து வருகின்றன.

👉இதுவும் கிருஸ்தவ மதமாற்ற கம்பெனிகளின் அசைன்மெண்டுகளில் ஒன்று.
மதமாற்ற கம்பெனி ஏஜென்ட்டுகள்
திருட்டு திராவிட எச்சைகள்

Anonymous said...

நல்ல உருட்டு