Monday, February 5, 2007

கலைஞரும் சாயி பாபாவும்

சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் பொதுத் திட்டத்திற்கு தனியொரு மனிதனாக ஒருவர் பெரும் தொகையை அளிக்க முன் வருகிறார் .அரசின் சார்பாக அவருக்கு நன்றி பாராட்டப்படுகிறது .அதற்கான விழாவுக்கு வந்த அம்மனிதன் முதல்வர் கலைஞரை அவரது இல்லத்தில் சென்று சந்திக்கிறார். இது தான் செய்தி.

பாபா என்ற மனிதர் சிலரால் கடவுளாக நினைக்கப்படுகிறார். பலர் அவரை போலி என்கின்றனர். எப்படி இருப்பினும் பொதுக் காரியத்துக்காக இவ்வளவு பெரிய தொகையை அளிக்க முன்வந்தவர் பாராட்ட படவேண்டியவர். பயன் பெறும் மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் என்ற முறையில் முதல்வர் அவரைப் பாராட்ட கடமைப்பட்டவர். இதில் என்னைய்யா பெரிய வெங்காயத்தை கண்டுபிடித்து விட்டார்கள் இப்போது கலைஞரை தூற்றுவோர்?

பாபா ஆன்மீகவாதி. கலைஞர் ஆன்மீக மறுப்பாளர். இருவரும் சந்திக்கப்போகிறார்கள் என்ற செய்தி வந்த உடன் பலரும் எதிர்பார்த்தது கலைஞர் பாபாவை தேடிச் சென்று சந்திப்பார் என்றுதான். கால்கரி சிவா போன்றவர்களுக்கு இருப்பு கொள்ளவில்லை. கருணாநிதிக்கு வெட்கமில்லையா ? மானமில்லையா? என்று குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏதோ கலைஞர் இவரிடமிருந்து பணம் வாங்குவதற்காக தன் நாத்திக கொள்கையை காற்றில் பறக்க விட்டு பாபாவிடம் தஞ்சம் அடைந்து விட்டது போல குதியாய் குதிக்கிறார்கள் (அப்படியே நடந்திருந்தாலும் இவர்கள் நியாயப்படி மகிழ்ச்சியல்லவா கொள்ள வேண்டும் ?கருணாநிதி இவர்கள் வழிக்கு வந்துவிட்டதாக கொண்டாடித் தானே இருக்க வேண்டும்?) .

ஆனால் நடந்தது என்ன? பிரதமர்களும், கவர்னர்களும், முதல்வர்களும் தேடிச்செல்லும் பாபா கலைஞரை அவர் இல்லத்துக்கு தேடிச் சென்று சந்திக்கிறார். அவரோடு அளவளாவுகிறார். இதற்காக பாபா தனது கொள்கையை காற்றில் பறக்கவிட்டு கலைஞரை தேடிச் சென்று சந்திப்பதற்கு மானமில்லையா ? வெட்கமில்லையா ? என்று கால்கரி சிவாக்கள் கேட்கவில்லை. அப்போதும் கலைஞர் மீதே காழ்புணர்ச்சி பொழிகிறார்கள். இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. காஞ்சி சங்கராச்சாரியை ஜெயலலிதா கைது செய்த போதும், அதற்கும் ஜெயலலிதாவுக்கு பதில் கலைஞரிடம் காழ்புணர்ச்சியை காட்டியவர்கள் இவர்கள்.

இப்போது சந்திப்புக்குப் பிறகு இந்த கூட்டத்துக்கு பல விதத்திலும் கிலி அடித்திருக்கிறது. ஆகா ! இது நாள் வரை கருணாநிதியை 'இந்துக்களின் எதிரி' என்று பரப்பிவிட்டு குளிர்காய நினைத்தோமே. இப்போது பாபாவே நேரடியாக சென்று இந்த ஆளை சந்தித்து விட்டாரே. ஏற்கனவே பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டை வாங்கி முதல்வராக இருக்கும் இந்த மனிதனை, ஏதாவது காரணம் சொல்லி மீண்டும் மீண்டும் 'இந்துக்களின் எதிரி' என்று எடுத்துக்காட்டி நம்மை வளர்த்துக்கொள்ளலாமே என்ற எண்ணத்தில் மண் விழுந்து கிடக்கிறதே என்று மனதுக்குள் புலம்புகிறார்கள்.

இதோ பார்! இஸ்லாமியரோடு சேர்ந்து கஞ்சி குடிக்கிறார். கிறிஸ்தவ சாமியார்களை சந்திக்கிறார்.. ஆனால் இந்து சாமியார்களை மதிக்கிறாரா பார் என்றெல்லாம் சொல்லி இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாமல் போய்விட்டதே என்று மருகுகிறார்கள். ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ,கலைஞர் கொள்கை தவறிவிட்டதாகவும் ,ஆன்மீக வாதியை சந்தித்து விட்டதாகவும் சொல்லி அவரை தோலுரிக்கிறார்களாம்.. நல்ல தமாசு! ஏன்! பச்சை நாத்திகனை நீங்கள் வீடு தேடிச் சென்று பார்க்கலாமா என்று சாய் பாபாவை கேட்க வேண்டியது தானே?

முன் அனுமதியின்றி வீட்டுக்கு சென்று வீம்புக்காக 'பகவத் கீதை'யைக் கொடுத்த ராமகோபாலனையே வரவேற்று அதனை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு ஒரு புத்தகத்தை கொடுத்தனுப்பியவர் கலைஞர்.

சரி! பாபாவை சந்திக்க கலைஞர் மறுத்திருந்தால் மட்டும் இம்மகா அறிவாளிகள் அவரை போற்றவா போகிறார்கள் ? இல்லை.. இதோ பார். நாட்டு நலனில் அக்கறையின்றி பொது நலனுக்காக தேடி வந்த உதவியை உதாசீனப்படுத்தி , இந்து சாமியார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை சந்திக்க மறுத்து , தன் சொந்த கொள்கைக்காக நாட்டு நலனை அடமான வைத்து விட்டார் கருணாநிதி என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது மட்டுமில்லாமல் , கருணாநிதியை இந்து விரோதியாக காட்டிக்கொள்ள இன்னொரு காரணம் கிடைத்து விட்டதாக உள்ளுக்குள் புழங்காகிதப்பட்டிருப்பார்கள். அது நடவாமல் கலைஞர் தன் மதிநுட்பத்தால் தவிர்த்தது , இவர்களுக்கு எரிச்சலை கொடுத்திருப்பதோடு , சாதாரண மக்கள் மனதில் இதனால் கலைஞருக்கு நன்மதிப்பு வந்து விடுமே என்ற பயமும் சேர்ந்து கொண்டிருக்கிறது

விகடனில் கீழ்கண்ட செய்தி வந்திருக்கிறது..."கேரள பூமியில் தோன்றி, மளமளவென உலகப் புகழ் பெற்று வரும் மாதா அமிர் தானந்தமயி அமைப்பின் பொதுச் சேவைகளுக்கும் ஆதரவுக் கரம்! சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தந்தது அமிர்தானந்தமயி அமைப்பு. அதற்கான விழா இம்மாத இறுதியில் நாகப்பட்டினத்தில் நடக்கிறது. அதில், அமிர்தானந்தமயி யோடு முதல்வரும் மேடையில் தோன்றுவார் என்கிறார்கள்."

"மனிதனுக்குச் செய்யும் சேவையை விட உயர்வானது வேறு எதுவும் இல்லை. அதற்குக் கைகொடுக்க வருபவர்கள் ஆள்பவர்கள் பேரைச் சொல்லி வந்தால் என்ன... ஆண்டவன் பேரைச் சொல்லி வந்தால் என்ன? வருகிற உதவியை உதாசீனப்படுத்தலாமா?"என்பதுதான் முதல்வர் கருணாநிதி தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் கேட்ட கேள்வி.

மதிநுட்பத்தோடு செயல்பட்டு , நாட்டுக்கு நன்மை கொணர்ந்தோரை பாராட்டி ,அதே நேரத்தில் எப்போதும் தன்னை ஒழிப்பதையே குறியாக கொண்டு செயல்படும் மிகச்சில காழ்புணர்வு சக்திகளுக்கு ஆப்பும் வைத்த கலைஞருக்கு இந்த சிறுவனின் வணக்கங்கள்!

படம் :நன்றி -விகடன் மற்றும் பூங்கா வலைத்தளம்

No comments: