Sunday, February 25, 2007

குற்றவாளி பாபாவுக்கு வெண்சாமரமா?

குற்றவாளி பாபாவுக்கு வெண்சாமரமா?
மீனா மயில்
இங்கு, கடவுளாகவும் கடவுளுக்கு நெருக்கமானவராகவும் இருந்தால், நீங்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்... ‘எதை வேண்டுமானாலும்'! புட்டபர்த்தி சாய்பாபா ‘சாதித்தது' அப்படித்தான். கோடிக்கணக்கான மக்களைத் தனது பக்தர்களாகக் கொள்ள சாய்பாபா அப்படியொன்றும் சிரமப்படவில்லை. பயிற்சி எடுத்தால் உங்களுக்கும் எனக்கும்கூட சாத்தியப்படும் தந்திரங்களைக் கற்றுக் கொண்டு, அதை ஆன்மிக லீலையாக மாற்றியதுதான் சாய்பாபாவின் தொழில். காற்றிலிருந்து மோதிரம், சங்கிலி, திருநீறு வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது என அவருடைய திறமைகளைக் காட்டி மக்களை வியப்பில் ஆழ்த்தினார். சாய்பாபா மட்டும் காவி உடைக்கு பதில் சார்லி சாப்ளின் மாதிரியான உடை அணிந்து, பம்பை முடியை வெட்டி தொப்பி அணிந்து, கையில் கோலோடு ஒரு மேடையில் இத்தகைய தந்திரங்களை நிகழ்த்தியிருந்தால் - சிறந்த ‘மேஜிக் மேனாக' அறியப்பட்டிருப்பார். ஆனால், இவ்வளவு செல்வத்தையும் செல்வாக்கையும் அடைந்திருக்க மாட்டார்.கடவுள் என்ற கருவே தந்திரமானதாகவும், ஆய்வுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கையில் - தன்னுடைய மாய தந்திரத் திறமையை அதோடு இணைத்ததுதான் இன்று சாய்பாபா அடைந்திருக்கும் நிலைக்குக் காரணம். குடும்ப பாரங்களை சுமக்கும் துணிவற்று வீட்டை விட்டு ஓடிப்போய் சந்நியாசம் புகும் சாதாரண சாமியார்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மக்களைக் கொண்ட ஒரு சமூகத்தில், சாய்பாபா போன்ற மோசடிப் பேர்வழிகளுக்குக் கிடைக்கக்கூடிய வரவேற்பு அளப்பரியது.

பதினான்கு வயதில் ஒரு சிறுவன் ‘நான் கடவுள், இவ்வுலகைக் காக்க அவதாரம் எடுத்தவன்' என்று பிதற்றினால், அவன் முதுகில் நாலு போடு போட்டு ஒழுங்காகப் படியென்று பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி வைக்காமல், அவன் உளறல்களை ஊக்குவித்ததன் விளைவு சாய்பாபாவாக, சமூகத்தின் சீரழிவாக வளர்ந்து வேரூன்றி விட்டது. இந்த மாதிரி தன்னை கடவுளாக அறிவித்துக் கொண்டவர்கள் இந்தியாவில்தான் அதிகம். அதாவது சுமார் அய்நூறு பேர். அவர்களில் சாய்பாபா அளவுக்குப் பணமும் புகழும் பெற்றிருப்பவர்கள் வெகு சிலரே! அந்த வெகுசிலர்தான் இந்தியாவின் நான்கு தூண்களுக்கும் அடித்தளம். இவர்கள் விரும்பினால் நான்கு தூண்களும் சரியும்... எழும்...உலகம் முழுக்க 165 நாடுகளில் சாய்பாபாவின் பக்தர்கள் என்ற பெயரில் ஏமாளிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தியா என்பது மண்ணில் இருக்கும் ‘சொர்க்கம்'; சாய்பாபாவோ மனித உருவில் உள்ள தெய்வம்! வேற்று மத - பண்பாட்டைச் சேர்ந்தவர்களே இப்படி ஏமாறுகின்றனர் எனில், இந்து மதத்தின் பிடியிலிருக்கும் இந்தியர்களை கேட்க வேண்டுமா?! பிள்ளையார், முருகன் படத்தோடு சாய்பாபா படமும் இல்லாத வீடுகளைப் பார்ப்பது அரிது. குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், நீதிபதிகள், காவல் துறையினர், உயர் அதிகாரிகள் என சாய்பாபாவைப் பார்த்து சிலிர்க்காதோர் இல்லை. இவர்கள் சாய்பாபாவின் மேஜிக் நிகழ்ச்சிகளுக்கு போவதையும் அவர் மோதிரம் வரவழைத்துத் தருவதைப் பார்த்தும் வாய்பிளந்து நிற்கின்றனர். அது எப்படி சாத்தியம் என்று ஆராய, இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகள்கூட துணிவதில்லை.சாய்பாபா தரும் நவரத்தினக் கற்கள் பதித்த மோதிரத்தை அணிந்தால், தனக்கு கிடைத்திருக்கும் பணம், புகழ், பதவி எதுவும் தன்னை விட்டுப் போகாது என அவர்கள் நம்புகின்றனர். அதற்கு கூலியாக மக்களைச் சுரண்டி அரசாங்கத்தை ஏய்த்து சம்பாதித்த பணத்தில் கோடிக்கணக்கில் சாமியாரின் காலடியில் கொட்டுகின்றனர்.

அளவற்ற பணமும், புகழும் சட்டத்துக்கு கட்டுப்படாத சுதந்திரமும் - ஒரு மனிதன் தொடர்ந்து குற்றமிழைக்கத் துணை போகின்றன. சாய்பாபா மீது அவ்வப்போது எழும் குற்றச்சாட்டுகளை அவரது பக்தர்களான அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. பல சாமியார்களைப் போலவே சாய்பாபா மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சாய்பாபா ஓரினச் சேர்க்கையாளர் என்றும் அவர் இளம் வயது சிறுவர்களை தனது பாலியல் இச்சைக்கு பலியாக்குகிறார் என்றும், பாதிக்கப்பட்டவர்களே புகார் அளித்தும் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. புகார் கூறப்பட்டது இங்கல்ல, அமெரிக்காவில்.பி.பி.சி. தொலைக்காட்சி, சாய்பாபா பற்றி தயாரித்த ஆவணப்படத்தில் பாதிக் கப்பட்டவர்களை பேட்டி கண்டு வெளியிட்டிருக்கிறது. அலாயா என்பவர் தன்னை 17 வயதிலிருந்தே சாய்பாபா பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாகக் கூறியுள்ளார். ‘குணப்படுத்தும் மருந்து என்றும், இதை வெளியில் சொன்னால் வலியும் வேதனையும் உன் வாழ்க்கை முழுவதும் வந்தடையும்' எனவும் மிரட்டியதால், அலாயா இதைத் தன் பெற்றோரிடம்கூட சொல்லாமல் மறைத்திருக்கிறார்.

இதனால் கடும் உளைச்சலுக்கு ஆளாகி மனோ ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தவரை, பெற்றோர் வற்புறுத்திக் கேட்க உண்மையை உடைத்திருக்கிறார். இத்தனை ஆண்டு காலம் சாய்பாபாவுக்காக உழைத்ததற்காக வெட்கப்பட்டதோடு, மகனைத் தீரா துன்பத்தில் தள்ளிய குற்ற உணர்வோடு சாய்பாபா சர்வதேச நிறுவனத்தின் அதிகாரியை சந்தித்து அவர்கள் புகார் அளித்தனர். ஆனால், புகார் பரிசீலனைக்குக்கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை.ஓரினச் சேர்க்கை சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட அந்நாட்டிலேயே, ஒரு சிறுவன் இத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும்போது, அதை கேவலமாகவும் குற்றமாகவும் மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்டதாகவும் பார்க்கும் இந்தியாவில், பாதிக்கப்படும் சிறுவர்களின் மனநிலையை எண்ணிப் பாருங்கள். சாய்பாபாவை புனிதக் கடவுளாகவும் மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவராகவும் வணங்கும் பெற்றோர், இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்து, தங்கள் பிள்ளைகளோடு ஆசிரமமே கதியென்று கிடக்கின்றனர்.

சாய்பாபா விருப்பப்பட்டு எந்த சிறுவனை கைகாட்டி தனது தனியறைக்கு அழைக்கிறாரோ, அவனை பாக்கியம் செய்தவனாகக் கருதுகின்றனர். உள்ளே என்ன நடக்கிறது என்று விசாரிக்கும் அறிவு பெற்றோருக்கும் இல்லை; அதைச் சொல்லும் துணிவு சிறுவர்களுக்கும் இல்லை. உண்மை - சுவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக உறைந்து போகிறது.சில ஆண்டுகளுக்கு முன் ஆசிரமத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்களே சாய்பாபாவைக் கொலை செய்ய அவரது அறைக்குள் கத்தியோடு பாய்ந்தனர். அவர்களை காவல் துறையினர் சுற்றி வளைத்து சமூக விரோதிகளைக் கொல்வதைப் போல சாதாரணமாக சுட்டுக் கொன்றனர். ஒருவேளை அந்த சிறுவர்கள் நீதிமன்றக் கூண்டில் ஏறியிருந்தால், ஆசிரம மர்மங்கள் வெளி வந்திருக்கக்கூடும்.

சாய்பாபாவுக்கு சிக்கல் வருவதைத் தடுக்கவே அந்த காவலர்கள் சற்றும் தாமதிக்காமல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இன்றுவரை அந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை. எதற்காக அந்த சிறுவர்கள் சாய்பாபாவைக் கொல்லத் துணிந்தனர் என்ற மர்ம முடிச்சு அவிழ்க்கப்படவில்லை.இந்தியாவில் ஓர் ஆன்மிகவாதிக்கு இருக்கும் செல்வாக்கு வேறு யாருக்குமே கிடையாது. அரசியல் தலைவர்கள் எல்லோருமே ஏதோவொரு சாமியாரின் காலில் விழுந்து ஆசி வாங்கும் புகைப்படங்களை பத்திரிகைகளில் நாம் அடிக்கடி பார்த்து வருகின்றோம். முக்கிய அரசு முடிவுகள்கூட, இந்த சாமியார்களின் விருப்பு வெறுப்பு சார்ந்தே எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆன்மிகவாதிகள் இழைக்கும் குற்றங்களுக்கான நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்? கடவுளின் பெயரால் எல்லா குற்றங்களையும் செய்துவிட்டு, சமூக சேவைக்காக பணத்தை வீசிவிட்டால் போதும், அந்த அருஞ்செயலின் மகத்துவத்தைப் பரப்ப அரசே விழா எடுக்கிறது.

ஆந்திராவில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம், தங்கள் நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சாய்பாபா பற்றி நேரிடையாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, மக்களிடம் கொள்ளையடித்த பணத்திலிருந்து செலவழித்த 200 கோடிகளுக்கு, ஒரு குற்றவாளிக்கு மேடை போட்டுப் பாராட்டியிருக்கிறது தமிழக அரசு. பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்ற தமிழக முதல்வர் கருணாநிதி, எதற்காக இப்படி இரட்டை வேடம் போடுகிறார் என்பது நாமறிந்ததே!அதெப்படி? ‘கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேனா என்பது பிரச்சினை அல்ல; கடவுள் என்னை ஏற்றுக் கொள்கிறபடி நடக்கிறேனா என்பதுதான் முக்கியம்' என்று தன் செயலுக்கு அவர் நியாயம் கற்பிக்கிறார். கடவுளை மறுக்கிற ஒரு பகுத்தறிவாளர் ‘இல்லாத கடவுள்' ஏற்றுக் கொள்கிறபடி நடந்துகொள்ள விளைவதன் காரணம் ஒன்றே ஒன்றுதான்.

அது மக்களைக் குழப்புவது! சாய்பாபாவோடு மேடையில் கைகோத்து, வீட்டுக்கு வரவழைத்து தன் மனைவி தயாளு அம்மாள் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை வேடிக்கை பார்த்ததன் மூலம் - பகுத்தறிவுச் சமூகத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டார் கருணாநிதி.பகுத்தறிவு முதல்வர் கருணாநிதி சாய்பாபாவோடு உறவாட, அமைச்சர்கள் துரை முருகனும் தயாநிதி மாறனும் நடந்துகொண்ட விதம் அருவருப்பானது. சாய்பாபா இவர்களின் கண் முன்னாலே கையை ஆட்டி ஆட்டி ஆளுக்கொரு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தாராம். பகவான் சாய்பாபாவால் முடியாத காரியமே இல்லையாம்! அரசு நிகழ்ச்சி ஒன்றில், உதவியாளர் கொண்டு வந்த தட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த சங்கிலியை சாய்பாபா துழாவி எடுப்பதும் அதன்பின் கையை ஆட்டி காற்றிலிருந்து வரவழைப்பது போல நடிப்பதும் அப்படியே வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பாக இருந்த இந்த நிகழ்ச்சி, கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. பி.பி.சி. தொலைக்காட்சி தனது ஆவணப்படத்தில் அந்த காட்சிகளைப் பெற்று இணைத்துள்ளது. சாய்பாபாவின் ஆன்மிக ஏமாற்று வித்தைப் புகார் பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் காற்றிலிருந்து மோதிரம் வந்ததற்காக இந்த அமைச்சர்கள் சிலாகிக்கிறார்கள். அது சரி, ‘முரசொலி' தவிர இவர்கள் எந்த பத்திரிகையும் படிப்பார்களா? ‘சன் டிவி' தவிர எந்த சேனலாவது பார்ப்பார்களா என்பது சந்தேகம்தானே!ஆன்மிகமா? பகுத்தறிவா? என்ற விஷயத்தில் கருணாநிதிதான் சமரசமாக நடந்து கொள்கிறார் என்றால், குடும்பத்திலேயே பகுத்தறிவுவாதியாகவும் பெரியாரை முன்னிறுத்துபவராகவும் அறியப்பட்ட கனிமொழியும் - தன்னை இப்படி அடையாளப்படுத்திக் கொண்டது ஏமாற்றமளிக்கிறது.

அண்மைக்காலமாக அவரும் குழப்பமான ‘நடுநிலை'க் கருத்துகளை உதிர்க்கத் தொடங்கியிருக்கிறார். ஒரு சாமியாரை சமூகத்தின் எல்லா துறைகளிலும் உயர் பதவியிலிருப்பவர்கள் போற்றித் துதிபாடுவது அவரை கோபப்படுத்தவில்லை; மாறாக ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அவரும் பார்த்து வியந்து போனாராம். எந்தவொரு தீமை - கேள்விப்படுத்தாமல், கோபப்படுத்தாமல் உங்களை ஆச்சரியப்படுத்துகிறதோ, அங்கேயே நீங்கள் மறைமுகமாக தீமைக்கு ஆதரவளித்து விடுகிறீர்கள். ‘சாய்பாபா கூட்டத்தில் கனிமொழியா?' என்ற கேள்வி எழும் என்பதால், அவரே அதற்கு இப்படி பதில் சொல்கிறார்... ‘‘உடனே எனக்கு கடவுள் நம்பிக்கை வந்து விட்டதா என்று கேட்காதீர்கள். அப்படி வந்தால் ஊரைக் கூட்டி சொல்வேன்.''நல்லது... ஒவ்வொரு பூனையாக வெளியே வந்து கொண்டிருக்கிறது.ஆன்மிகம் தன் பெருவாய் திறந்து பகுத்தறிவை விழுங்குவதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆம்! ஒரு பொய், உண்மையை எளிதாக அகற்றுவதைத் தடுக்க வழியற்றுத் திணறுகிறோம். சங்கராச்சாரிகளும் சாய்பாபாக்களும் அமிர்தானந்தமயிகளும் எண்ணிக்கையில் பன்மடங்காகப் பெருக, ‘பெரியார்'கள் உருவாகவுமில்லை, உருவாக்கப் படவுமில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் காவல் துறையின் பாதுகாப்போடு சனிதோஷ பரிகார பூஜைக்கு படையெடுக்கின்றனர். நம் கூடாரத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறுகின்றனர். பணம், புகழ் பெரும் பதவியே ஆன்மிகத்தின் உடைமை என்பதால், மக்கள் அதை நோக்கியே ஈர்க்கப்படுகின்றனர். அதன் பளபளப்பின் முன் பகுத்தறிவின் எளிமை கேலிக்குள்ளாக்கப்படுகிறது. பகுத்தறிவென்பது வெறுமனே கடவுள் மறுப்பல்ல; அது தனிமனித ஒழுக்கத்தையும் சமூக ஒழுங்கையும் வலியுறுத்துவது. அதனாலேயே இங்கு அதற்கு மதிப்பில்லை. செய்கிற பாவங்களுக்கு பரிகாரங்கள் வைத்திருக்கிறது ஆன்மிகம். அதனாலேயே பெரிய பெரிய குற்றங்களையெல்லாம் செய்துவிட்டு உண்டியல்களை நிரப்பிவிடுகின்றனர்.

மனித உயிரை நேசிக்கச் சொல்லும் பகுத்தறிவு. நரபலியை நியாயப்படுத்தும் ஆன்மிகம்.ஒரு மனிதன் பிறக்கிற போதே ஆன்மிகம் அவன் மீது திணிக்கப்படுகிறது. முதல் நாளிலேயே மதச் சடங்குகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பெயர் வைப்பதில் தொடங்கி எல்லாவற்றுக்கும் ஜோசியம், ஜாதகம் என ஒரு குறுகிய அடிமை வட்டத்துக்குள் சுழலவிட, திட்டமிட்ட அட்டவணை கையில் திணிக்கப்பட்டு விடுகிறது. மழலையில் மழுங்கடிப்படும் அந்த மூளை சுயமாக சிந்திக்க மறுக்கிறது. இவ்வளவு வீரியமான மதங்களுக்கு எதிரான பகுத்தறிவுப் புரட்சி பெரியாரோடு முடிந்தது என்றே சொல்ல வேண்டும். கடவுள், மதம், மூடநம்பிக்கை ஆகியவற்றை ஒழிப்பதை தன் வாழ்நாள் கடமையாக எடுத்து தீரமாகச் செய்ய, இங்கு எவருமிலர். பெருகும் சாமியார்களால் இந்த சமூகம் சீரழிந்து மூழ்குவதை நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம், வேதனை யோடு.

ஆன்மிகத்தை வேரோடு பிடுங்கியெறிய தெளிந்த தீர்வு நம் கையில் இருக்கிறது. என்ன செய்தால் இந்து மதத்தை ஒழிக்க முடியும் என்பதற்கு, நம் கையிலும் பெரியார் கொடுத்துச் சென்ற திட்டமிடல் அட்டவணை இருக்கிறது. கையில் எடுப்பதும் களத்தில் இறங்க வேண்டியதுமே மிச்சம்!


1 comment:

Anonymous said...

First of all, I am not a follower of Saibaba. But, I admire him for his social service. If you ask rich guys to help build a hospital or a school to educate poor people, not many would come forward. However, if a person like Saibaba asks, many people will jump in and give money and Saibaba may use some for his personal benefits, but majority of the money is given back to the society.

How I look at him is, just like Karunanithi said. He is a God because he is doing good things to people. However, some people get too fanatic and go beyond limits. There is exception everywhere. Look at what some of the Islam fundamentalist are doing. Taking guns in the name of God. This is extremism and it is there everywhere in every religion, community, country, cast, etc.

By the way, the author has mentioned about eliminate hinduism by following periyar's footsteps. I am a big fan of periyar for some of his beliefs. I don't totally believe or respect what he said. That is a simple fact. And why would you want to eliminate Hinduism in the first place? Why don't you talk about eliminating Christianity, Islam, Jainism, Sikhism, etc?

To be honest, I laughed at your article. Hinduism is like sun. You cannot get closer to it.