Thursday, February 8, 2007

ஜிஹாத்: பயங்கரவாதத்திற்கு இஸ்லாம் கொடுக்கும் மறுபெயரா?

சோவியத் யூனியனின் (USSR) சிதறலோடு உலகில் கம்யூனிஸ சித்தாந்தம் வீழ்ச்சி அடையத் தொடங்கிய 1980 காலகட்டத்திற்குப் பின் "புனிதப்போர்" என்ற வார்த்தை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு உலகளாவிய அளவில் செய்திகளில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. ஜிஹாத் என்று திருக்குர்ஆனில் வரும் இந்த அரபி வார்த்தை, ஏகாதிபத்தியவாதிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அல்லது உலகுக்குத் தவறாக விளக்கமளிக்கப்பட்ட இஸ்லாமியப் பதங்களில் ஒன்றாகும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் இருபெரும் வல்லரசுகளாக விளங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையில் சோவியத் யூனியனின் பிளவுகாலம் வரை பனிப்போர் நிலவி வந்தது. இக்காலகட்டத்தில் இரு வல்லரசுகளும் ஒன்றையொன்று தகர்க்க மறைமுகமாக்ப் பல்வேறு வழிகளில் திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வந்தன. இறுதியில் சோவியத் யூனியன் தகர்ந்து அந்நாட்டோடு இணைந்திருந்த அனைத்து நாடுகளும் பிரிந்து தனித்தனியாக சென்றன. அதோடு உலகில் அசைக்க முடியாத ஒரே வல்லரசாக அமெரிக்கா மட்டுமே இருந்து வருகிறது. இக்கால கட்டத்திற்குப் பின்னரே உலகில் "இஸ்லாம்" பயங்கரவாத மார்க்கமாக சித்தரிக்கப்பட இந்த "ஜிஹாத்" என்ற அரபிப்பதம் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு உலக ஊடகங்கள் அனைத்திலும் நிறைந்து நிற்பதையும் அக்காலகட்டத்திற்குப் பின்னரே "இஸ்லாமிய தீவிரவாதிகள்" என்ற சொல் உலகில் பிரபலப்படுத்தப்பட்டதையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

1980களுக்குப் பின் இன்று உலகில் இஸ்லாம் ஒருபக்கமும் ஏகாதிபத்திய அமெரிக்க சியோனிஸ கூட்டு சக்திகள் ஒருபக்கமுமாக பிரிக்கப்பட்டு உலகின் மற்றைய நடுநிலைநாடுகளை இஸ்லாத்தின் எதிர்பக்கமாக அணிவகுக்க வைக்க இந்த "ஜிஹாத்" என்ற பதம் மிக அழகாக ஏகாதிபத்தியவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. இதன் பின்னணியில் தெளிவான ஒரு திட்டம் வகுக்கப்பட்டு அது செயல்படுத்தப்படுகிறது என்ற ஐயப்பாடு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதே ரீதியில் காலம் செல்லும் எனில் எதிர்காலத்தில் உலகில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக பின்பற்றும் முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியே!

படைத்த இறைவனின் மார்க்கமான இஸ்லாத்திற்கு சொந்தக்காரர்கள் இவ்வாறு இஸ்லாத்தின் மீது இல்லாத அவதூறு சுமத்தப்பட்டு அதனை வாழ்க்கைநெறியாக ஏற்றுக் கொண்டவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்படும் சூழல் உருவான பின்னரும் அதனைக் குறித்து எவ்வித பிரக்ஞையுமின்றி தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து கொண்டே செல்வதும் தேவையில்லாத புதிய புதிய கருத்துக்களை உருவாக்கிக் கொண்டு கருத்து மோதல்களிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டு செல்வதும் நிச்சயம் போற்றுதலுக்குரிய காரியங்களல்ல.

இஸ்லாம் சமாதானத்திற்குரிய ஒரே வழியாகும். அது உலகில் சமாதானத்தை மட்டுமே போதிக்கின்றது எனில் "புனிதப்போருக்கும்" இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு? இஸ்லாம் போர் செய்து கொண்டே இருப்பதையா போதிக்கிறது? நிச்சயமாக இல்லை என்பது இஸ்லாத்தை விளங்கிய அனைவருக்கும் தெளிவாக தெரியும். இதனை உலகுக்குப் புரியவைக்க வேண்டிய கடமை இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு. அது தான் இக்காலகட்டத்தில் இஸ்லாம் தன்னைப் பின்பற்றும் முஸ்லிம்களிடமிருந்து எதிர்பார்ப்பதும் ஆகும். எனவே முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் இருக்கும் சாதாரண கருத்து வேறுபாடுகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு இஸ்லாத்திற்காக அதன் சத்திய போதனையை உலகுக்குப் பறைசாற்றவும் அதன்மீதான அவதூறுகளை தெளிவுடன் எடுத்தியம்பவும் ஓரணியில் ஒன்றுபட வேண்டும். இதுவே எதிர்கால இஸ்லாமிய சமுதாயத்தின் நிலைநிற்பிற்குரிய ஒரே வழியாகும்.

ஜிஹாத் என்ற இந்த அரபிச் சொல்லுக்கு "புனிதப்போர்" என்ற அர்த்தத்தை அரபி மொழியின் எந்த ஒரு அகராதியிலும் பொருள் காண முடியாது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை, போர் என்பது ஒருபோதும் புனிதமாகக் கருதப்படவே முடியாத ஒன்று என்பது திருக்குர்ஆனையும் இஸ்லாமிய வரலாற்றையும் தெளிவாகப் படித்து அறிந்து கொண்டவர்களுக்கு நன்றாக விளங்கும். ஒன்றுக்கொன்று எதிரெதிர் துருவங்களான சமாதானமும்(இஸ்லாம்), போரும் ஓரிடத்தில் இணைகின்றன என்றால் அது நகைப்பிற்கிடமாக இல்லை?
இன்று உலகளாவிய அளவில் ஊடகங்களாலும் வன்சக்திகளாலும் உலக அமைதிக்கு எதிரான ஒரு கொள்கையாக இஸ்லாம் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் சொல் தான் இந்த "ஜிஹாத்". ஜிஹாத் என்றால் என்ன? அது எதற்காக செய்யப்படுகிறது? எங்கே அது செய்யப்பட வேண்டும்? யாருக்கு எதிராக செய்யப்பட வேண்டும்? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் அதன் ஊடாக எழும்பும் பொழுது அதனைக் குறித்த எவ்வித இஸ்லாமிய அறிவும் இன்றி அல்லது அதனைக் குறித்து தெரிந்திருந்தாலும் இஸ்லாத்தை மோசமாக சித்தரிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அதற்கு மிக மோசமான ஓர் அர்த்தத்தைக் கொடுத்து உலக மக்களை இஸ்லாத்திற்கு எதிராக திருப்ப இன்று உலகளாவிய அளவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இஸ்லாத்தின் எதிரிகள் காலச்சூழலுக்கேற்பத் திட்டமிட்டு புதிய புதிய தந்திரங்களைக் கொண்டு இஸ்லாத்திற்குக் களங்கம் விளைவிக்க முயற்சிப்பது காலம்காலமாக நடக்கும் விஷயமாக இருந்தாலும் வளர்ச்சியடைந்த இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியவாதிகள் கையிலெடுத்திருக்கும் இப்புதிய தந்திரம் மிகவும் பலம் வாய்ந்ததாகும்.

உலகில் இன்று பயங்கரவாதங்கள் அரசின் துணையுடன் தனிமனிதனால் அல்லது குழுக்களால் சாதாரண மக்களுக்கெதிராக படுபயங்கரமாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவை எதுவும் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்படாத அளவிற்கு மிகச் சாதுரியமாக மக்கள் மனதில் மிகப்பெரிய நஞ்சு போல் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஜிஹாத் என்ற இவ்வார்த்தையின் பொருளையும் அதன் மூலம் இஸ்லாம் எதை நாடுகிறது, எதனை ஒரு முஸ்லிமிடமிருந்து எதிர்பார்க்கிறது என்பதனைத் தெளிவாக முஸ்லிம்கள் இவ்வுலக மக்களுக்கு விளக்கவில்லை எனில் தெளிவாகவே இவ்வுலகை விட்டு அன்னியப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக முஸ்லிம் சமுதாயம் மாறிவிடும் அபாயம் இருக்கிறது.

உலக முக்கிய ஊடகங்கள், அதிகாரபலம் போன்றவை வன்சக்திகளின் கையில் இருக்கும் இக்காலகட்டத்தில் ஜிஹாதைக் குறித்த தெளிவான வரையறையும் அதனைக் குறித்த விளக்கமும் கொடுப்பதும் அதனை உலகில் பரப்ப முயல்வதும் ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய முக்கிய வேலையாகும்.

அந்த வகையில் "ஜிஹாத்" என்ற வார்த்தையை வைத்து இன்று மேற்கொள்ளப்படும் அவதூறு பிரச்சாரங்களுக்கு பதிலளிக்கும் விதத்திலும் அந்த தவறான பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக இஸ்லாம் வலியுறுத்தும் உண்மையான ஜிஹாதினைச் செய்யவும் முஸ்லிம்கள் தயாராக வேண்டும்.

இஸ்லாம் வலியுறுத்தும் ஜிஹாத் என்றால் என்ன? அதனை புனிதப்போர் என்ற அர்த்தத்திலா குர்ஆன் கையாள்கிறது? முஸ்லிம்கள் எனில் முஸ்லிமல்லாதவர்கள் மீது போர் செய்து கொண்டே இருக்க வேண்டுமா? இஸ்லாம் அவ்வாறு போர் செய்து மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி முஸ்லிமாக்குவதற்கா போதிக்கிறது? அப்பாவிகளின் மீது குண்டு பொழிந்து அழிப்பதற்கா இஸ்லாம் போதிக்கிறது? போன்று அனைத்து விஷயங்களுக்கும் இங்கு விடையை காண முயல்வோம்.


இறைவன் நாடினால் தொடரும்.....

கட்டுரை ஆக்கம்: இப்னு ஆதம் நன்றி: சத்தியமார்க்கம்

No comments: