Thursday, February 15, 2007

அமெரிக்காவின் பிறப்பே வன்முறையில்தான்...

அமெரிக்க வல்லாதிக்கத்தின் கொடுங்கரங்களின் துணையோடு தூக்கிலிடப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம், ஜனவரி 9-ந் தேதியன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. தமிழ் முழக்கம் நடத்திய இக்கூட்டத்தில் ஒலித்த வீர முழக்கங்களிலிருந்து...

மிழ் முழக்கம் சாகுல் அமீது:போராளிகள் கொச்சைப்படுத்தப்படுவதும், பெருமைப்படுத்தப்படுவதும் அமைகின்ற அரசுகளைப் பொறுத்தது. சதாம் உசேன் மாபெரும் போராளி. எதேச்சதிகார அரசுகளை எதிர்த்து நின்ற மாவீரன். அவரைக் கோழைத்தனமாக கொலை செய்திருக்கிறார்கள். வரலாற்றில் முதன்முறையாக கோழைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒரு மாவீரனைக் கொன்ற கோழைகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை உடனே எதிர்க்கின்ற நாடுகள் இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை இப்படியே கழிந்துவிடாது.

வழக்கறிஞர் அருள்மொழி:பாக்தாத் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் நாகரிகம் வளர்ந்திருந்த நகரம். இப்படியிருந்த மண், இரத்தக் கோலத்திற்கு ஆளாக்கப்பட்டது. இதற்குக் காரணமான அந்த ஏகாதிபத்தியத்தை நாம் மவுன சாட்சியாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம். `சதாம் உசேன் அந்த வழக்கை எதிர்க்கொண்ட விதமும், அந்த வழக்கு நடந்து முடிந்து அவர் தூக்கு மேடையை எதிர்க்கொண்டதும், என் முகத்தை மூடவேண்டாம், நான் எப்படி மடிகிறேன் என்பதை உலகம் பார்க்கட்டும்' என்று சொன்ன அந்தத் தீரமும் வரலாற்றில் நிச்சயமாக எழுதப்படும். அந்த மனிதன் நிச்சயமாக மாவீரன்தான். அவருக்கு நம் வீரவணக்கம்.

சி. மகேந்திரன்:ஈராக் நாட்டிலே நடைபெற்ற கருத்து மோதல்கள், அந்த மக்களுக்கிடையிலான பிரச்சினைகள் இவற்றுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? பாரசீக வளைகுடாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான். இன்றைக்கு அங்குள்ள எண்ணெய்க் கிணறுகளெல்லாம் சீல் வைக்கப்பட்டுள்ளன.அடுத்தவன் விரலைப் பிடித்து, நெருப்பில் சுட்டு, அது சுடுகிறதா இல்லையா என்றுபார்க்கின்ற பண்புடையதாக இருக்கிறது அமெரிக்கா. அதற்குப் பலியானவர்தான் சதாம். அவர் மன்னர் குடும்பத்தவர் இல்லை. பழங்குடி மனிதர். அந்த பழங்குடி மனிதர்களுக்கே உரிய வீரத்துடன் போராடினார், உயிர் நீத்தார்.

திருமாவளவன்:சதாம் உசேனைப் பட்டப்பகலில் பச்சைப் படுகொலை செய்தபோது, உலக நாடுகளெல்லாம் வேடிக்கை பார்க்கின்ற நிலைமைக்கு ஆளாகிவிட்டனவே... ... விரைந்து வேகமாக உலக நாடுகள் தலையிட்டிருந்தால் சதாமைப் பாதுகாத்திருக்க முடியுமோ என்ற ஆதங்கம் இருக்கிறது. அமெரிக்கா மட்டும் ஏன் அவசர அவசரமாகத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இங்குதான் அமெரிக்காவின் திருட்டுப் புத்தி இருக்கிறது. அவர்களின் கிரிமினல் புத்தி இருக்கிறது. ஏனென்றால் குர்தீஷ் மக்கள்மீது சதாம் ஆட்சியில் நடத்தப்பட்ட ரசாயண ஆயுதத் தாக்குதலின் பின்னணியில் இருப்பது அமெரிக்காதான். அந்த வழக்கை விசாரித்தால், உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும், முகமூடிகிழிந்துவிடும் என்பதால்தான், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு உலக நாடுகள் ஒன்றுசேரவேண்டிய ஒரு சவாலான காலகட்டம் உருவாகியிருக்கிறது.

பேராசிரியர் சுப.வீ :அமெரிக்காவின் பிறப்பே வன்முறையில்தான். அன்று செவ்விந்தியர்கள் தங்கள் மண்ணில் வாழ அனுமதி கோரி போராடினார்கள். எங்கிருந்தோ வந்த இவர்கள் அவர்களை விரட்டினார்கள். இவர்களிடம் துப்பாக்கி இருந்தது, பீரங்கி இருந்தது. வீரம் செறிந்த அந்தச் செவ்விந்தியர்களிடம் இரும்பினால்கூட அல்ல, மூங்கிலால் ஆன ஈட்டிதான் இருந்தது. அதைக் கொண்டுதான் அவர்கள் அமெரிக்காவை எதிர்த்துப் போராடினார்கள். செவ்விந்தியர்களின் தொடர்ச்சியாக இன்றைக்கும் அமெரிக்காவை எதிர்த்துப் போராடி சதாம் மாண்டு போயிருக்கிறார். அமெரிக்காவின் வரலாறு முழுவதும் வன்முறைதான். அந்த வன்முறையினுடைய இன்னொரு கட்டம்தான் சதாம்.

ஜவாஹிருல்லா :ஒரு மாபெரும் படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள அத்தனை கட்சியினரும், அதன் தலைவர்களும் இதனைக் கண்டித்து கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஒரேயொரு கட்சி மட்டும் கருத்து சொல்லவில்லை. அதுதான் பி.ஜே.பி. ஏனென்றால் பி.ஜே.பியினுடைய எஜமான் அமெரிக்காவும் இஸ்ரேலும்தான். இதில் நமக்கு ஆச்சரியமில்லை. ஆனால், சிறுபான்மை-பிற்படுத்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களுடைய ஆதரவில் ஆட்சியில் அமைந்திருக்கக்கூடிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் செயல்பாடு நம்மை வெட்கப்படவைக்கிறது. சதாம் படுகொலைக்கு இந்திய பிரதமர் மவுன சாட்சியாக இருக்கிறார். அவருக்கு இன்னும் உலக வங்கியில் வேலை செய்வதாக நினைப்பு போலும். அமெரிக்காவுக்குக் கூஜா தூக்கியிருக்கிறது இந்திய அரசு.

அன்பு தென்னரசன் :அரபு நாடுகளிலேயே அதிக எண்ணெய் வளம் உடையதாக இருக்கின்ற ஈராக்கை ஆக்கிரமித்து, அங்கிருக்கும் எண்ணெயைத் திருடுவதற்காக அமெரிக்கா என்ற திருடன் செய்த வேலைதான் இந்தக் கொலை. சதாம் உசேன் இந்தத் திருட்டுத்தனத்திற்கு எதிராக இருந்தார் என்பதால்தான் ஒரு பேட்டை ரவுடியைப் போல செயல்பட்டு, அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றிருக்கிறது அமெரிக்கா என்னும் வல்லாதிக்கம்.

நன்றி:கீற்று இணையதளத்திற்கு

No comments: