Wednesday, March 28, 2007

கிரிக்கெட்: யாருக்கு எவ்வளவு இழப்பு?

கிரிக்கெட்: யாருக்கு எவ்வளவு இழப்பு?

இந்தியா உலகக்கோப்பையின் முதல் சுற்றில் படுதோல்வி அடைந்து வெளியேறியதும் யார் யாருக்கு எவ்வளவு பணம் இழப்பு என்று சில (தவறான) ஹேஷ்யங்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் பொருளாதாரம் பற்றிப் புரிந்துகொள்ள சில குறிப்புகள்

உலகக்கோப்பையைப் பொருத்தமட்டில் முதன்மை உரிமையாளர் ஐசிசி. ஐசிசி கீழ்க்கண்ட வகைகளில் பணத்தைப் பெறுகிறது:

1. தொலைக்காட்சி, வானொலி, இணைய ஒலி/ஒளிபரப்பு உரிமம்
2. ஸ்பான்சர்ஷிப் ('நிகழ்ச்சி வழங்குவோர்' உரிமம்)
3. அதிகாரபூர்வ சப்ளையர் (பொருள் வழங்குனர்) உரிமம்
4. விளையாட்டு அரங்கில் விளம்பரம்
5. பார்வையாளர் அனுமதிச் சீட்டு (இந்த வருமானம் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்குச் செல்லும்)
6. வேறு சில மிகக்குறைவான வருமான வாய்ப்புகள்

மிக அதிகமான வருமானம் தொலைக்காட்சி, வானொலி, இணைய ஒலி/ஒளிபரப்பு உரிமத்தை விற்பதால் வருவது. இதனையும் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தையும் 8 ஆண்டுகளுக்கு முன்னரே ஐசிசி குளோபல் கிரிக்கெட் கார்பொரேஷன் (ஜிசிசி) என்ற நிறுவனத்துக்கு விற்று, பணத்தைப் பெற்றுக்கொண்டது. இந்த ஜிசிசி என்ற நிறுவனம் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் (WSG) மற்றும் ரூபர்ட் மர்டாக்கின் நியூஸ் கார்பொரேஷன் ஆகியவை இணைந்து உருவாக்கியது. WSG இதற்கிடையில் திவாலாகிவிட்டது. ஆனால் மர்டாக் ஏற்கெனவே பணத்தைப் போட்டிருந்ததால் ஜிசிசி தாங்கி நின்றது.

ஜிசிசி தான் பெற்ற தொலைக்காட்சி உரிமத்தை வெட்டி, துண்டுகளாக்கி பலருக்கும் விற்றதில் பெரும்பங்கு இந்தியாவின் சோனி தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து வந்தது. அத்துடன் ஸ்பான்சர்ஷிப் வாங்கிய நான்கு பெரும் நிறுவனங்கள் - பெப்சி, எல்.ஜி, ஹீரோ ஹோண்டா, ஹட்ச் ஆகியவை இந்திய நிறுவனங்கள். இவை அனைத்துமே இந்தியா ஓரளவுக்கு நன்றாக விளையாடினால்தான் போட்ட பணத்தின் அளவுக்கு நன்மையைப் பெறும்.

தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக்கோப்பையின்போது இந்தியா இறுதி ஆட்டம் வரை வந்ததால் இந்த ஸ்பான்சர்களுக்கும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் நல்ல அறுவடைதான். இந்தியா கோப்பையை வென்றிருந்தால் எங்கேயோ போயிருப்பார்கள். ஆனால் இந்த முறை இந்தியா முதல் சுற்றில் அடிவாங்கியதால் பாதிக்கப்படுவது அத்தனை ஸ்பான்சர்களும்.

ஐசிசிக்கான காசு ஜிசிசியிடமிருந்து வந்துவிட்டது. ஜிசிசிக்கான காசு பெரும்பாலும் சோனி, ஸ்பான்சர்கள், பிற நாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து வந்துவிட்டது.அடுத்து இந்தியாவின் சோனி தொலைக்காட்சி. சோனி பெற்றது இரண்டு உலகக்கோப்பைகள், நான்கு ஐசிசி சாம்பியன்ஷிப் ஆட்டங்கள். இதில் பெரும்பான்மை வருமானம் உலகக்கோப்பையின்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தென்னாப்பிரிக்க உலகக்கோப்பையின்போது எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வருமானம் வந்திருக்கும்.

தொலைக்காட்சி நிறுவனம் மூன்று வகைகளில் வருமானத்தைப் பெறுகிறது:

1. ஒளிபரப்பை வழங்கும் ஸ்பான்சர்கள்
2. தனித்தனியாக ஸ்பாட் வாங்கும் விளம்பரதாரர்கள்
3. சொந்தச் சானலின் நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தி அதற்குக் கிடைக்கும் அதிகமான பார்வையாளர்கள்மூலம் பெறும் அதிகமான வருமானம் (House ads)

நான்கு அல்லது ஐந்து நிறுவனங்கள்/பிராண்ட்கள் ஒளிபரப்பை வழங்கும் ஸ்பான்சர்களாக வருவார்கள். (This cricket broadcast is brought to you by....). பெரும்பாலும் இவர்கள் உலகக்கோப்பை ஸ்பான்சர்களாக இருப்பார்கள்; ஆனால் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றும் இல்லை. சோனி முதலில் ஹீரோ ஹோண்டாவிடம் செல்ல வேண்டும். அவர்கள் ஸ்பான்சர்ஷிப்பை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அடுத்து டிவிஎஸ் நிறுவனத்திடம் செல்லலாம். அப்படித்தால் ஐசிசியின் ஆம்புஷ் மார்க்கெட்டிங் கொள்கை கூறுகிறது. அதைப்போலவே சோனி முதலில் பெப்சியிடம் பேசவேண்டும். ஒத்துவராவிட்டால்தான் கோக் நிறுவனத்துக்குப் போய் பேசலாம்.இந்த வகையில் ஸ்பான்சர்களை சோனி ஏற்கெனவே முடிவு செய்திருக்கும். ஒவ்வொரு ஸ்பான்சரும் இத்தனை பணம் கொடுப்பது என்று உலகக்கோப்பை ஆரம்பிக்கும் முன்னதாகவே முடிவுசெய்து ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருப்பார்கள்.

ஆனால் அதைத்தவிர தனித்தனியாக 10 விநாடி ஸ்பாட் (ஓவருக்கி இடையில் இப்பொழுதெல்லாம் இரண்டு ஸ்பாட்கள் வருகின்றன) பல இருக்கும். இதில் பெரும்பாதி ஸ்பான்சர்களுக்கு என்று கொடுக்கப்பட்டிருக்கும். இதுபோக மீதம் உள்ளதை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். ஒரு 10 செகண்ட் ஸ்பாட் கிட்டத்தட்ட ரூ. 1.5 லட்சம் வரை போவதாகச் சொன்னார்கள். ஆனால் இந்தியா வெளியேறியதால் இதே 10 செகண்ட் ஸ்பாட் ரூ. 15,000 வரை விழுந்துவிடும்.எனவே மீதம் உள்ள ஸ்பாட்கள் அனைத்தும் சீந்துவாரின்றிப் போக நேரிடும்.

அதைத்தவிர ஏற்கெனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனங்கள் பின்வாங்க விரும்பும். சட்டபூர்வமாக அதைச் செய்யமுடியாது என்றாலும் மீண்டும் மீண்டும் இதே நிறுவனங்களையே தொலைக்காட்சி சானல்கள் நம்பியிருப்பதால் இருவருக்கும் சமரசம் ஏற்படும். ஸ்பான்சர்களுக்கு அதிகமாக வேறு ஏதாவது செய்துகொடுக்கவேண்டும். இது ஒருவகையில் தொலைக்காட்சி சானலுக்கு நஷ்டம்தான்.

எனவே முதல் அடி சோனி தொலைக்காட்சி சானலுக்கு. அதேபோல அடி தூரதர்ஷனுக்கும் உண்டு. தூரதர்ஷனின் லாபமும் குறைவு, எனவே நஷ்டமும் குறைவுதான். ஜிசிசியிடமிருந்து தூரதர்ஷனுக்கான உரிமையை வாங்கி நடத்துவது, விளம்பரங்களைப் பெறுவது நிம்பஸ். எனவே நிம்பஸுக்கும் பண நஷ்டம் கொஞ்சம் இருக்கும்.

சோனியின் இழப்பு: சுமார் ரூ. 100 கோடி
தூரதர்ஷன் + நிம்பஸ் இழப்பு: சுமார் ரூ. 50 கோடி

அடுத்து விளம்பரதாரர்கள். உலகக்கோப்பை ஸ்பான்சர்கள், தொலைக்காட்சி ஸ்பான்சர்கள் ஆகிய அனைவருக்கும் நேரடியாக நஷ்டம் இல்லை; அவர்கள் பணத்தைப் போட்டு பணத்தை எடுப்பவர்கள் அல்லர். பணத்தைப் போட்டு பிராண்டை வளர்க்க விரும்புபவர்கள். பிராண்ட் எக்ஸ்போஷர் குறைவாகத்தான் இருக்கும்.மேற்கிந்தியத் தீவுகள் எதிர்பார்த்த சுற்றுலா வருமானம் குறையும். இந்தியா அடுத்த சுற்றுக்குப் போயிருந்தால் நிறைய விமான நிறுவனங்கள்முதல் மேற்கிந்தியத் தீவுகளின் ஹோட்டல்கள் அதிக வருமானம் பார்த்திருக்கும். இப்பொழுது பல ஆட்டங்களுக்குப் பார்வையாளர்கள் குறைவார்கள். நுழைவுச்சீட்டு வாங்க ஆளில்லாமல் போகலாம். தென்னாப்பிரிக்காவில் நடந்த அனைத்து ஆட்டங்களும் ஹவுஸ் ஃபுல். இங்கே அது இருக்காது.

பிற இழப்புகள்: சுமார் US$ 5 மில்லியன்

இந்தியக் கிரிக்கெட் பாதாளத்தில் இருப்பதால் உடனடியாக பாதிக்கப்படுவது நிம்பஸ்தான். ஏற்கெனவே நிம்பஸ் தொலைக்காட்சி உரிமம் தொடர்பாக இந்திய அரசோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நடக்கும் ஆட்டங்களுக்கான உரிமையை பிசிசிஐ-இடமிருந்து எக்கச்சக்கமான விலைகொடுத்து நிம்பஸ் வாங்கியுள்ளது. அவற்றை நியோ ஸ்போர்ட்ஸ் சானல்மூலம் ஒளிபரப்பிவருகிறது.

இந்திய அரசு, இந்த ஆட்டங்களை தூரதர்ஷனிலும் காட்டவேண்டும் என்றும், அதற்கென தூரதர்ஷன் தனியாகக் காசு கொடுக்காது; அதில் வரும் விளம்பரங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் (75%) வருமானத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சட்டம் இயற்றியுள்ளது. இதனால் நிம்பஸ் எக்கச்சக்கமாக வருமானத்தை இழக்க வேண்டிவரும். அத்துடன் இப்பொழுது இந்தியாவின் ஃபார்ம் இருப்பதைப் பார்த்தால் இந்த ஒளிபரப்புகளுக்கு எப்பொழுதும் கிடைக்கும் வருவாய்கூட இந்த ஆண்டு கிடைக்காது என்று தோன்றுகிறது.

இந்திய அணி மீண்டும் ஒழுங்காக விளையாடும்வரை நிம்பஸ் ஆசாமிகளுக்குச் சரியாகத் தூக்கம் வராது!

நிம்பஸ் இழப்பு - அடுத்த ஒரு வருடம்: சுமார் ரூ. 100 கோடி

இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கும் வருமானம் பாதிக்கப்படும். ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவரும் விளம்பரங்களில் நடிப்பதன்மூலம் கோடிகோடியாகச் சம்பாதிக்கிறார்கள். அடுத்த ஒரு வருடமாவது இவர்கள் சம்பாதிக்கும் தொகை குறையும். புதிய பிராண்ட்கள் கிரிக்கெட் வீரர்கள்மீது பணம் கட்ட பயப்படுவார்கள்.

கிரிக்கெட் வீரர்கள் இழப்பு: சுமார் ரூ. 20 கோடி (அனைவரும் சேர்ந்து)

கிரிக்கெட்மீது ஏற்பட்டுள்ள வெறுப்பினால் நாட்டின் பொருளாதார உற்பத்தி அடுத்த ஒரு வருடத்துக்காவது அதிகமாகும்!பொருளாதாரத்துக்குக் கிடைக்கும் அதிக உற்பத்தி: சுமார் ரூ. 10,000 கோடி!

கிரிக்கெட்மீது ஏற்பட்டுள்ள வெறுப்பினால் நாட்டின் பொருளாதார உற்பத்தி அடுத்த ஒரு வருடத்துக்காவது அதிகமாகும்!பொருளாதாரத்துக்குக் கிடைக்கும் அதிக உற்பத்தி: சுமார் ரூ. 10,000 கோடி!

நன்றி பத்ரி,


No comments: