Thursday, March 22, 2007

கனிமொழிக்கு பாராட்டு விழா

தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை மக்கள் முன் கொண்டு செல்லும் வகையில் சென்னை சங்கமம் என்ற கலைவிழாவை நடத்திய முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழிக்கு பிரம்மகான சபாவின் சார்பில் பாராட்டு விழா சென்னை உட்லண்ட் ஓட்டலில் நடந்தது.விழாவிற்கு சபாவின் தலைவர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்கி கவிஞர் கனிமொழிக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

கவிஞர் வாலி பேசியதிலிருந்து...

முதல்-அமைச்சர் கருணாநிதி கவிஞருக்கெல்லாம் கவிஞர். அந்த கலைஞர் இயற்றிய கவிதைகளில் தலைசிறந்த கவிதை கனிமொழி. 100 சதவீதம் பாராட்டுவதற்கான தகுதியும், புலமையும், எளிமையும் கொண்டவர் கனிமொழி. அவரை உளப்பூர்வமாக பாராட்டுகிறேன்.இளையராஜாவுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது சமீபத்தில் எதாவது ஒரு பாட்டுக்கு இசைஅமைத்து இருந்தால், அதை பாடுங்கள் என்று கூறினேன். அவர் ஒரு பாட்டை பாடினார். அது எந்த படத்தில் உள்ளபாடல் என்று கேட்டேன். அது தனி சி.டி.என்றார். பாட்டு பிரமாதமாக இருக்கிறதே யார் எழுதியது என்று கேட்டேன். கனிமொழி என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

கனிமொழி ராஜ்யசபா உறுப்பினர் ஆகவேண்டும் என்று நல்லி கூறினார். அவர் கலைஞரின் புதல்வி, வருங்கால தமிழ்மண்ணின் முதல்வி. நாணயமான பெண் ஆளும் நிலை வரவேண்டும். அந்த நிலை இன்னும் 10 அல்லது 15 ஆண்டில் வரும். தொன்மையான கலைகளான தெருக்கூத்து, மயிலாட்டம் போன்றவை மேலாதிக்கம் என்ற பாறையால் மூடிக்கிடந்தது. கனிமொழி உளிகொண்டு அனாவசிய கல்லை தட்டி எடுத்து வெளிக்கொண்டு வந்தார்.உலகத்தில் எளிமை ஒன்றுதான் உயர்ந்த வலிமை. கனிமொழி எளிமையாக உள்ளார். மண்ணின் ஆளுமைக்கு நாடு எதிர்பார்த்தால் அதற்கு தகுதியானவர் கனிமொழி.

கனிமொழி பேட்டி ( குமுதம் )
ஜெயா’ தொலைக்காட்சியில் ‘சங்கமம்’ விழாக்களை குற்றஞ்சாட்டி வந்த நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா? அதிகார துஷ்பிரயோகம் என்று சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் முதல்வரின் மகள் என்பதால் அரசாங்கம் உங்களுக்கு உதவியதா?

கனிமொழி : நான் அதை பார்க்கவில்லை. இந்த சங்கமம் நிகழ்ச்சி எங்களுடைய தனிப்பட்ட நிகழ்ச்சி. இதில் அரசையும் இணைத்துக் கொண்டோம். ஆனால் அவர்களிடமிருந்து எந்தப் பண உதவியும் பெறவில்லை. அதற்கான கணக்கு வழக்குகளை விரைவில் வெளியிடுவோடும். நாங்கள் நடத்திய இந்த சங்கமம் நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசுகிறார்கள். எங்களிடம் அனைத்து கணக்குகளும் தெளிவாக இருக்கிறது. அவற்றை இணையதளத்தில் வெளியிடுவோம். எல்லோருமே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

No comments: