Wednesday, March 28, 2007

வில்லங்கத்தில் விக்கிபீடியா



வில்லங்கத்தில் விக்கிபீடியா
நண்பன்

மிகச் சமீபத்தில் படித்த செய்தி - பல பல்கலைக் கழகங்கள், விக்கிபீடியா தரும் தகவல்களை ஆதாரப் பூர்வமானது என ஏற்க மறுத்து விட்டன. அவற்றை தகவல் அறிந்து கொள்ள வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் அவை மட்டுமே ஆதாரப்பூர்வமானவையாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்கின்றன.

ஒரு சுதந்திரமான தகவல் மையம் - யார் வேண்டுமானாலும் தகவல் தரலாம் - மாற்றலாம் - மறுபரீசீலனைக்கு உட்படுத்தலாம் என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட விக்கிபீடியாவின் தகவல் மையத்தைக் கண்காணித்து திருத்தப் பணியில் ஈடுபட்டவர்களில் பலர் - amateurs. 12,999 நபர்கள், நீங்கள் தரும் தகவலை உடனுக்குடன் கேள்விக்குட்படுத்துகிறார்கள், விவாதிக்கிறார்கள், சீர்திருத்துகிறார்கள் என்று சொல்லப்படும் இந்த சீர்திருத்துநர்களின் பின்னணி என்ன? வேலை வெட்டி அற்றவர்கள் தான். இணையத்தில் பலமணி நேரம் செலவழிக்கும் தகுதியுடையவர்கள் மட்டுமே இந்த வெட்டுதல் ஒட்டுதல் தொழிலில் இறங்க முடிகிறது. இந்த வெட்டி, ஒட்டும் பணி செய்யும் நபர்களின் கல்வித் தகுதி என்ன? யாருக்கும் தெரியாது!!! இந்த வெட்டி ஒட்டும் வேலையைச் செய்தவர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்பட்ட. ஒருவர் மோசடியாளர் என சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது. ESSJay என்று தன்னை சொல்லிக் கொண்டவர், ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் தான் ஒரு பேராசிரியர் என்றும், கிறித்துவ மதத்தின் சட்ட திட்டங்களைக் கரைத்துக் குடித்தவர் என்றும் சொல்லிக்கொண்டார். ஆனால், அவருடைய உண்மையான தகுதி - அவர் பள்ளியைத் தாண்டாதவர். உண்மையான பெயர் ரியான் ஜோர்டான். இவர் மிகுந்த தகுதி வாய்ந்தவர் எனக் கருதி, ஜிம்மி வேல்ஸ் 'விக்கிபீடியா நிறுவனர்' இவருக்கு தன் மற்றைய நிறுவனத்தில் முழுநேரப் பணி கொடுத்திருக்கிறார்.

முதலில், ஜிம்மி வேல்ஸ் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை என்றாலும், பின்னர் தொடர்ந்து வந்த புகார்களினால், அவரை நீக்கிவிட்டார். தெரிந்த ஒருவரே இப்படி என்றால், இன்னும் தெரியாதவர்களின் தகுதி என்ன என்பதை யாராலும் சொல்ல முடியாது. மேலும் யார் வேண்டுமானாலும் திருத்தலாம் என்று கொடுத்த சுதந்திரத்தை மக்கள் என்ன செய்தார்கள் - தங்கள் இஷ்டம் போல், விருப்பம் போல், தங்களுக்குப் பிடிக்காதவர்களைத் திட்டித் தீர்த்தார்கள். ஒரு கட்டத்தில், ப்ளேர், புஷ், மற்றும் சில முக்கியஸ்தர்களை மிகக் கேவலமாகத் திட்டித் தீர்க்க, இறுதியாக விக்கிபீடியா நிறுவனமே தலையிட்டு இவர்களைப் பாதுகாக்க வேண்டியதாயிற்று.

இந்த விக்கிபீடியாவைப் பற்றி. கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே நிலவும் கருத்து - Wikipedia lacks accountability, authority, scholarly credentials, accuracy and scrupulousness. இவை தான் விக்கிபீடியாவின் பின்னணி.சரி, இப்போ இதெல்லாம் எதற்காக? தருமி அவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்குப் பதில் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்திருந்தேன் - அவர் நிறைய விஷயங்களை விக்கிபீடியாவிலிருந்து எடுத்திருந்ததாகக் கூறினார்.

விக்கிபீடியாவின் தகுதி என்ன என்று தேடிய பொழுது கிடைத்த சங்கதிகள் தான் இவை. 'இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் பரிபூர்ணமானவை' என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது என்று பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆனால், விக்கி பீடியா இவற்றிலிருந்து முற்றிலும் மாறானவை என்று மிகத் தீவிரமாக நம்புகிறார்கள். அவற்றை ஆதாரமாக எடுத்து வைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. ஆராய்ச்சிகள் மூலம் நிருவப்பட்ட அறிவியலை வேண்டுமானால் இத்தளத்தில் வாசிக்கலாம்.ஆனால், மத ஆராய்ச்சிகளை இத்தகைய கத்துக்குட்டிகளிடமிருந்து ஆரம்பிக்கக் கூடாது. விக்கிபீடியா மத, தத்துவ ஆராய்ச்சி நூல்களுக்குத் தகுந்த நூல் அல்ல. விரிவான செய்திகளுக்கு இங்கே படியுங்கள்;

No comments: