Wednesday, March 21, 2007

ஆங்கிலத்தை முழுமையாகப் புறக்கணிக்கும் நிலைக்கு நாம் இன்னும் வந்துவிடவில்லை - சுப. வீரபாண்டியன்

அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படும் சுப. வீரபாண்டியன்.கனவுகள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் அரசியல், அரசியல் சார்ந்த இலக்கியம் என்பதை வாழ்வாகக் கொண்டவர். தமிழ்த் தேசியச் சிந்தனையாளர். தமிழ்நாட்டில் தமிழ் தேசியச் சிந்தனையை முன்னெடுத்து செல்வதில் முன்னிற்பவர். “நீங்கள் நீங்களாக இருங்கள். நாங்கள் நாங்களாக இருக்கிறோம். ஆனால் நமக்கான உலகத்தை உருவாக்குவோம்” என்ற கருத்துகள் நேர்காணலில் பிரதிபலித்தன.

இவரின் நேர்காணலிலிருந்து சில பகுதிகள்...தமிழர்கள் யார் என்பதை எப்படி வரையறுப்பது?

1994 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது தமிழ், தமிழர் இயக்கத்தில் நானும் தியாகுவும் மற்ற தோழர்களும் சேர்ந்து பணியாற்றிக் கொண்டு இருந்த வேளையில் குணாவின் “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற புத்தகம் வெளிவந்தது. அப்போது இந்தக் கேள்வி எதிர்கொண்டது. அதற்காகவே கோவைக்கு அருகில் ஒரு சிற்றூரில் ஒரு நாள் முழுவதும் நண்பர்களிடையே விவாதம் நடந்தது. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தோம். அப்போது அதை ‘இனி’ பத்திரிகையிலும் பதிவு செய்தோம். மரபு இனம் போல் அல்லாமல் தேசிய இனம் என்பது சமூக, வரலாற்று வழியில் உருப்பெறுகிறது. பொதுவான மொழி, தேசிய மனநிலை, பொருளாதார வாழ்வு, வாழ்வியல் பரப்பு ஆகிய காரணிகள் வரலாற்று வழியில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய சூழலில் இணைந்து தேசிய இனம் உருப்பெறுகிறது.

இவற்றில் மொழி முதன்மையான காரணி.தெலுங்கு அல்லது வேறு அயல்மொழியை பூர்வீகத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் நூற்றாண்டுக் கணக்கில் தமிழகத்தில் வாழ்ந்து தெலுங்கு மொழியுடனும், அந்த நாட்டுடனும் தொடர்பற்று, தமிழையே வாழ்க்கை மொழியாக, சமூகத் தாய் மொழியாக ஏற்று வாழ்ந்து வருகிறார்கள். இவர்களும் தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு பகுதியே ஆவார்கள். வேற்று மொழிகளை பூர்வீகமாக தாய் மொழிகளாகக் கொண்டவர்களுக்கும் இது பொருந்தும்.தமிழ்நாட்டில் உள்ள எல்லா அயல்மொழிக்காரர்களும் தமிழ்த் தேசியத்தின் பகுதி என்று இதன் பொருள் அல்ல. எவ்வளவு காலமாக இங்கு இருந்தபோதிலும், அவர்களுடைய மொழியுடனும், நாட்டுடனும், அவர்களுக்குத் தொடர்புகள் இருந்தால் அவர்கள் தமிழர்கள் என்ற தேசிய நிலைக்கு வராதவர்கள்.

எல்லைப் பகுதிகளில் சிறுபான்மையாக இருப்பவர்கள் தமிழ் தேசியத்தின் பகுதி அல்ல. அவர்கள் தமிழ்த் தாயகத்தின் சிறுபான்மையினராக இருக்க முடியும். அதே நேரம் சிறுபான்மையினர் சிறுபான்மையினராகவே இருக்க வேண்டும் என்பது இன்றியமையாதது. அவர்கள் பெரும்பான்மையினராக ஆக அனுமதிக்க முடியாது என்பதுதான் நாங்கள் அன்றைக்கு வரையறுத்தது. அது இன்றைக்கும் சரியாகப் பொருந்துகிறது என நான் கருதுகிறேன்.சமயம் ஊடுருவதற்கு முன்பு இருந்த தமிழர்களின் வாழ்க்கையை, இலக்கியங்களைத் தமிழ்த் தேசியத்திற்கு அடிப்படை கட்டமைப்பாகக் கொள்ள முடியுமா?சமயங்கள் ஊடுருவாத காலம் என்பது ஏடுகள் பதிவு செய்யாத காலம் என்றே சொல்லமுடியும். ஏடுகள் அறிந்த வரையில் நம்முடைய தொன்மையான நூல் தொல்காப்பியம். அந்த நூலிலே பல சமய ஊடுருவல்கள் இருப்பதை நம்மால் காணமுடிகிறது.

தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் ஆரிய பார்ப்பண தாக்கம் குறைவு என்று கூறலாமே தவிர இல்லை என்று கூற முடியாது. எனவே நாம் அறிந்த இலக்கியங்கள், ஏடுகள் அனைத்தும் சமயத் தாக்கங்களுக்கு உள்ளானவைகளே என்பதை மறுக்க முடியாது.தொல்காப்பியத்திற்கு முந்தைய, பல நூறு ஆண்டுகள் முந்தைய, தமிழர்களுடைய வாழ்வு என்பது நம்முடைய அடித்தளமாக இருக்கலாம். சிந்துச் சமவெளி நாகரிகத்திலிருந்து, அதற்கு முந்தைய காலக்கட்டத்திலிருந்து பார்க்க வேண்டும். ஆனால் சமயங்கள் ஊடுருவாத இலக்கியங்கள் என்று நம்மிடத்தில் எதையும் குறிப்பிட்டுச் சொல்வதற்கு இயலாது. திருக்குறளில் கூட சமயத்தாக்கம் மிக மிகக் குறைவாக இருக்கிறது என்பதுதானே தவிர முற்றாக இல்லை என்று சொல்ல முடியாது.

தமிழ் மொழியில் இலக்கணங்களில் நெடுங்காலமாக மாற்றம் ஏற்படவில்லையே?பொதுவாக தமிழ் வரலாற்றைப் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் ஒரு பிரிவாகவும் மற்றொன்றை இன்னொரு பிரிவாகவும் பார்ப்பது மரபு. அதற்கு அடிப்படை ஒரே ஒரு காரணம்தான். பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் அல்லது பதின்னான்காம் நூற்றாண்டுத் தொடக்கம் வரையிலும் மூவேந்தர்கள் ஆட்சி நிலவியது. தமிழ் வேந்தர்கள் ஆட்சி நடைபெற்ற காலத்திலேயே கூட பல்லவர்கள் காலம் தொடங்கிப் பார்ப்பண ஆதிக்கம் தான் கூடுதலாக இருந்தது.ஒரு வரலாற்று பிரிவாக பதின்னான்காம் நூற்றாண்டை வைத்துக் கொண்டாலும் அதற்கு பிறகு பெரும் இலக்கணங்கள் தோன்றவில்லை என்பது உண்மைதான். ஆனால் இலக்கியங்கள் தோன்றி இருக்கின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டு வரை அதாவது ஐரோப்பியர்கள் நுழைகிற வரை சிற்றிலக்கியங்களும் மதம் சார்ந்த இலக்கியங்களும் மதத் தத்துவங்களும் சித்தாந்தங்களும் உருவாகி இருக்கின்றன. பல்வேறு மத, கலப்பினங்கள் பல்வேறு மதம் சார்ந்த, பல்வேறு மொழி சார்ந்த மன்னர்களின் ஆட்சி நடந்ததால் பல்வேறு சமயச் சிந்தனைகள் அந்த நூலிலே காணப்படுகின்றன. ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு சில நவீன சிந்தனைகளைக் கொண்ட இலக்கியங்களும் உருவாகியிருக்கின்றன. எனவே இலக்கியங்களின் வளர்ச்சியை போதும் போதாது என்று நாம் தீர்மானிக்க முடியாது. அதற்கு ஒரு எல்லையில்லை. ஆனால் இலக்கணங்கள் மிக குறைவாகவே ஆக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மைதான்.தமிழ் மரபுகள் மற்றும் விளையாட்டுகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டுமா?கண்டிப்பாக மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் எந்த நிபந்தனையும் இல்லாமல் நான் இதைக் கூறவில்லை.

தமிழ் மரபுகள் என்பதில் தமிழர்களுடைய பழைய வழிபாட்டு முறைகள், சிறு தெய்வ வழிபாடுகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் எல்லாமே அடங்குகின்றன. இவை எல்லாவற்றையும் பழந்தமிழர்களின் மரபுகள் என்பதால் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் நான் உடன்படவில்லை.மரபுகளைப் பொறுத்தவரை மூன்று நிலைப்பாடுகளை வைத்துக் கொள்ளலாம். பழைய மரபுகளை அறிதல், ஆராய்தல், பின்பற்றுதல் என்கிற நிலைகளிலே நாம் அவற்றை ஏற்க வேண்டும். விளையாட்டாக இருந்தாலும் சரி, வழிபாடாக இருந்தாலும் சரி. முதலில் நம்முடைய மரபுகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதில் தவறு இல்லை. அதிலே இதைத்தான் அறிந்து கொள்ளவேண்டும். அது வேண்டாம் என்ற பாகுபாடு கிடையாது.

நாம் எல்லா மரபுகளையும் அறிந்து கொள்ளலாம்.அடுத்த கட்டம், அவை குறித்த ஆய்வுகள் நமக்கு வேண்டும். அந்த ஆய்வு என்பது இரண்டு நிலைகளில் இருக்க வேண்டும். ஒன்று, அந்தப் பழம் மரபுகள் சிதைக்கப்படாமல் அதே வடிவத்தில் இருக்கின்றனவா? என்பது அடுத்து வேறு பண்பாட்டுத் தாக்கங்கள் இல்லாத நிலையிலும் கூட அவை இன்றைய வாழ்க்கைக்கும் எதிர்காலச் சூழலுக்கும் பொருத்தமாகவும், தேவையாகவும் இருக்கின்றனவா என்பது.ஒரு காலக்கட்டத்தில் தேவைப்பட்ட ஒரு மரபு இன்றைக்கு தேவைப்படாமல் இருக்கலாம். அல்லது ஒரு காலக்கட்டத்தில் பொருத்தமாக இருந்த செய்திகள் இன்றைய நவீன உலகில் மாற்றம் பெற்று இருக்கலாம். பழமையான மரபு என்பதற்காகவே அதைப் பற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை.

இங்குள்ள சிறு தெய்வ வழிபாடுகள், பல ஆரிய பார்ப்பண தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. பழம் மரபுகள் சிதைந்து கிடைக்கின்றன. அவற்றை நாம் விலக்கித் தமிழ் மரபாக மட்டும் மீட்டு எடுக்க முடியுமா? என்ற கேள்வியும் இருக்கிறது.இன்னொரு பக்கத்திலே பார்த்தால் நம்முடைய வீர விளையாட்டுகள் என்று சொல்கிற ஏறு தழுவுதல் போன்ற விளையாட்டுகள் பார்ப்பனத் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றன என்று நான் கூறமாட்டேன். ஆனால் அவை இன்றைய உலகத்திற்குத் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. விளையாட்டு என்கிற பெயரில் காளை மாட்டுடன் மோதி உயிர் துறக்கிற வேலையை நாம் தவிர்க்கலாம். அத்தகைய பழைய விளையாட்டுகளை நாம் போற்றலாம்.புலியோடு போராடி நகம் கொண்டு வந்தவனை மணந்து கொள்ளுகிற முறை பழமையானது. அப்படி ஒரு மரபு இருந்தது என்று சொல்லலாம்.

இளவட்டக் கல்லைத் தூக்கினால்தான் திருமணம் என்கிற மரபு இருந்தது என்று சொல்லலாம். ஆனால் அந்த மரபுகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை. எனவே பார்ப்பன ஆதிக்கத்தின் தாக்கத்திற்கு உள்ளான மரபுகளையும் இன்றைய வாழ்க்கைக்கு பொருந்தாத மரபுகளைப் பின்பற்றத் தேவையில்லை. எனவே அறிதல் ஆராய்தல் பின்பற்றுதல் என்கிற நிலையில் தேவையானவைகளை மீட்ருவாக்கம் செய்து பின்பற்றலாம். சடுகுடு விளையாட்டை மறுபடியும் மீட்ருவாக்கம் செய்யலாம். பழைய தமிழர் திருமண முறை அகநானூற்றிலே இருக்கிறது. சிலப்பதிகார காலத்திற்கு பிறகுதான் பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்த செய்தி இலக்கியத்தில் கிடைக்கிறது. அப்படி அல்லாமல் பார்ப்பனீயம் அல்லாமல், வடமொழியல்லாமல் பழந்தமிழர்களின் மரபுகளை மீட்ருவாக்கம் செய்ய வேண்டும்.

களப்பிரர்கள் காலம் என்பது இருண்ட காலம்தானே.....நான் படித்தக் காலத்திலிருந்தும், எனக்கு முன்னால் படித்தக் காலத்திலிருந்தும் இப்போது பிள்ளைகள் படிக்கிற காலத்திலும் குப்தர்கள் காலம் பொற்காலம் களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என்று வரலாற்றுப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இங்கு, ‘யாருக்கு’ என்று ஒரு கேள்வி இருக்கிறது. குப்தர்கள் காலம் பொற்காலம், யாருக்கு? களப்பிரர்கள் காலம் இருண்ட காலம், யாருக்கு? பார்ப்பனர்களுக்கு எந்தக் காலம் எல்லாம் பொற்காலமாக இருந்திருக்கிறதோ அதை நாட்டின் பொற்காலமாக அவர்கள் அறிவித்தார்கள். அவர்களுக்கு எந்தக் காலம் எல்லாம் இருண்ட காலமாக இருந்ததுவோ அதை நாட்டின் இருண்ட காலமாக அறிவித்தார்கள். களப்பிரர்கள் தமிழர்களாக இல்லையா என்பது வேறு.அதே நேரத்தில் அவர்கள் சமூக நீதிக்கு உட்பட்டுப் பல செயல்களைச் செய்திருக்கிறார்கள் என்று பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. பேராசிரியர் முனைவர் ஆ. பத்மாவதி அவர்கள் எழுதி இருக்கின்ற நூல் ஒன்றில் மிக அருமையாகப் பல சான்றுகளைத் தந்து இருக்கிறார்கள்.

உழைக்காமல் இருக்கிற பார்ப்பனர்களுக்கு நிலத்தை கொடுத்த காலம் பொற்காலம் என்றும் அவர்களிடமிருந்து அதை பறித்து உழைக்கும் மக்களுக்கு பங்கீட்டு கொடுத்த காலம் இருண்ட காலம் என்று சொல்வார்களேயானால் அதை எத்தனை மோசடியான புரட்டான வரலாறு என்பதை உணரவேண்டும்.எட்டாம் நூற்றாண்டை சார்ந்த வரகுணப்பாண்டியன் வெளியிட்ட வேள்விக் குடிச்செப்பேடு, நமக்கு அந்தச் செய்தியைச் சொல்லுகிறது. பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, வேதம் அறிந்த பார்ப்பனர்களுக்கு இலவயமாக வழங்கிய வேள்விக் குடியை களப்பிரார்கள் கைப்பற்றி வேளாண் மக்களுக்கு வழங்கி விட்டதாக ஒரு பார்ப்பான் ஐந்தாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆண்ட கடுங்கோன் மன்னனிடம் முறையிட்டதாகவும் அம்மன்னன் மீண்டும் அந்நிலத்தை பார்ப்பனர்களுக்கே திருப்பியளித்ததாகவும் அச்செப்பேடு கூறுகிறது. அதனால்தான் களப்பிரர்காலம் இருண்ட காலம் என்கின்றனர்.

களப்பிரர்கள் காலத்தில் தமிழ் மொழிக்கு எதிராக வடமொழியினுடைய ஆதிக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதில் ஒரு பகுதி உண்மையிருக்கிறது. அவர்கள் தமிழர்கள் இல்லை என்பதும் சரியானதுதான். அவர்கள் காலத்தை மேலும் ஆராய வேண்டி இருக்கிறது.(இந்தி எதிர்ப்பை அடுத்து) ஆங்கிலமே பொதுமொழியாக, அரசாங்க மொழியாக வேண்டும் என்று 1969-ல் ஜனவரி 27 அன்று விடுதலையில் பெரியார் எழுதியுள்ளாரே...1965 ஆம் ஆண்டு இந்தித் திணிப்புப் பற்றிப் பரவலாகப் பல கருத்துகள் இருக்கின்றன. நானும் கூட பல மேடைகளில் பல கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறேன். என் கருத்துகளில் கூட எனக்குச் சில மாற்றங்கள் இன்றைக்கு ஏற்பட்டு இருக்கின்றன. இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது வெறும் மொழிப் போராட்டம் அன்று. தேசிய இனப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாகவே அதை நாம் பார்க்க வேண்டும். இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்திக்கு எதிராக இருந்ததே தவிர தமிழுக்கு ஆதரவாக இல்லை.

அது ஆங்கிலத் துக்கு ஆதரவாக இருந்தது என்பது இன்றைக்குச் சொல்லப்படும் செய்தி.இந்தக் கருத்தை நானே பல தடவை பல மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போராட்டத்தை இன்றைய சூழலில் அப்படிக் கணிக்க முடியாது என்பது என்னுடைய இன்றைய நிலை. 1965ல் அப்படித்தான் போராடி இருக்க முடியும். 1965ல் இந்தியை எதிர்ப்பதற்கு ஆங்கிலத்தைக் கேடயமாகப் பயன்படுத்த வேண்டிய நிலை கண்டிப்பாக இருந்திருக்கிறது. இந்திக்கு எதிராகத் தமிழை நிறுத்தி இருந்தால் ஆங்கிலம் வேண்டாம் என்று சொன்னால் இந்தி எளிதாக உள்ளே வந்திருக்கும் என்கிற திராவிட இயக்கத்தின் விவாதத்தை நான், தோழர்கள் தியாகு, பொ. மணியரசன் பல மேடைகளில் மறுத்திருக்கிறோம்.அதே நேரம் வரலாற்றை நுணுகிப் பார்த்தால் அது சரியானது அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பதே தமிழ்நாட்டில் இந்தியா ஆங்கிலமா என்பதை முன்வைத்து எழுந்த போராட்டம் இல்லை.

இந்தியாவில் இந்தியா, ஆங்கிலமா என்கிற போராட்டம் தான் அது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இரண்டு கருத்துகளுக்கு இடம் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்தான். ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியையும் ஏற்பதற்கில்லை. ஆனால் இந்தியாவைப் பற்றிச் சொல்ல முடியாது.நாம் விரும்புகிறமோ இல்லையோ சட்டப்படி இந்தியக் குடிமக்களாக நாம் இருக்கும்வரை அல்லது தமிழ்நாடு, இந்தியாவின் ஒரு பகுதியாக நீடிக்கிறவரை அந்த மொழிச் சிக்கலுக்கு நம்முடைய விடை என்ன? இந்தி மட்டுமே ஆட்சி மொழியா அல்லது ஆங்கிலமும் தொடர வேண்டுமா என்கிற கேள்விக்கு ஆங்கிலமும் தொடர வேண்டும் என்றுதான் அவர்கள் சொல்லியிருக்க முடியும். இன்றைக்கும் அந்த நிலை அப்படியேதான் இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. இன்னொன்று அண்ணா அவர்கள் சொன்னதைப் போலப் பதினான்கு மொழிகளும், இன்றைக்குப் பதினெட்டு மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆக வேண்டும் என்று நாம் கூறலாம்.ஆனால் அதில் உள்ள பல நடைமுறைச் சிக்கல்களை இன்றைக்கும் மறந்து விட முடியாது. மொழி பெயர்ப்பு துறையில் அறிவியல் துறையில் பல முன்னேற்றங்கள் இன்று ஏற்பட்டும் கூட பதினெட்டு மொழிகளை ஆட்சி மொழியாக்குவதில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்.

அவற்றை மீறி அதனை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பது வேறு. அது இன்றைய நிலை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பதினான்கு மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வாய்ப்பு ஏற்படவில்லை. எனவே அன்றைய நிலையில் இந்தி மட்டுமல்லாமல் இந்தியோடு சேர்த்து ஆங்கிலமும் இருக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதில் பிழை இல்லை.இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் அப்படிச் சொல்லி இருக்கிறாரே தவிர பெரியார் என்றைக்கும் தமிழுக்கு எதிரி அல்லர். அவருடைய பொது வாழ்க்கை என்பது மிக நெடியது. அந்த அந்த சூழலில் கருத்துகளை தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார். ஒரு நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் கருத்துகள் மாறுபடுவது இயற்கை. இந்த உலகத்தில் இருக்கிற அத்தனை பேருக்கும் நிகழ்ந்திருக்கிறது. கார்ல் மார்க்ஸ் தொடக்கத்தில் ஹெகலியனாக இருந்தார். பின்னால் மாறினார். நம்மை போன்ற எளியவர்க்குக் கூட கருத்து மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.பெரியார் சில தலைமுறைகளைச் சந்தித்தவர். மொழி பற்றிய அவருடையக் கருத்துகள் மாறி மாறி ஒலித்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. 1940களில் தமிழ் ஆட்சி மொழி என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

குடியரசு பத்திரிக்கைகளிலும் வந்திருக்கிறது.1962 முதல் 1969 வரை ஆங்கிலமே ஆட்சி மொழி, பயிற்று மொழி ஆங்கிலமே என்றும் கூறி இருக்கிறார், இறுதியாக 1970ல் அவரது கருத்து மீண்டும் மாறி இருக்கிறது. 1970 டிசம்பர் மாதம் முதல் தேதியில் விடுதலை பத்திரிகையில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் அதுதான் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு உதவும் என்று குறிப்பிட்டு இதைக் கட்சி காரணமாக காமராஜர் போன்றவர்கள் எதிர்க்கக் கூடாது என்கிறார். அதற்குப் பிறகு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் அவரிடம் இல்லை.ஆட்சி மொழிக் கொள்கையைப் பொறுத்த அளவு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெரியார் 1973 டிசம்பரில் இறந்து விட்டார். அன்றைக்கு ஆங்கிலம் உலக மொழி என்ற எண்ணம்தான் இருந்தது. பாவாணர் இறுதிவரை தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை ஏற்றார். பெருஞ்சித்திரனார் 68, 70, 72களில் எழுதிய கவிதையெல்லாம் ஆங்கிலத்தையும் நாம் கற்க வேண்டும் என்று எழுதினார்.

பெரியாரும், பாவாணரும், பெருஞ்சித்திரனாரும் ஒரே மாதிரியான மொழிக் கொள்கை கொண்டவர்கள் என்று நான் கூறவில்லை. நான் காட்டுகிற ஒப்புமை என்னவென்றால் இருமொழிக் கொள்கை தேவையாக இருந்தது என்று அன்றைக்கு இருந்த அறிஞர்கள், பெரியார் உட்பட பலர் ஏற்றுக் கொண்டார்கள். ஆகையினால் இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன்னெடுத்ததில் எந்தப் பிழையும் இல்லை.பெரியார் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்தார். இரண்டாம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்கவில்லையே...இந்தி எதிர்ப்பு போராட்டத்தை 1937ல் பெரியார்தான் முன்னெடுத்தார். அதுதான் முதன் முதலாக இங்கு தேசிய இனப் போராட்டமாக உருக்கொண்டது. தமிழ்நாடு தமிழருக்கே என்ற போராட்டமும் அங்கு இருந்துதான் பிறந்தது. ஆனால் 1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பெரியார் அங்கீகரிக்கவில்லை. மிக கடுமையான சொற்களால் அந்தப் போராட்டத்தை எதிர்த்தார். இதையும் நாம் வரலாற்றில் இருந்து மறைக்க வேண்டியதில்லை. காமராசரைச் சார்ந்து, காமராசர் இருந்தால்தான் தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையில் சொன்ன வார்த்தைகள் அவை. அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

அரசியல் குரல் கொஞ்சம் மேலோங்கி ஒலித்துவிட்டதாகவே கருத வேண்டியிருக்கிறது. ஆனால் பிறகு பல நிலைகளில் பெரியார் தமிழுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார்.தலித் அரசியல், தலித் இலக்கியம் என்பது இந்திய தேசியத்தின் பொதுத் தன்மையோடு போராடக் கூடிய செயலாகதானே இருக்கிறது...உண்மைதான். அதற்காக தலித் அரசியல் போன்றவைகளை மறுக்க முடியாது. காரணம் இந்த ஒடுக்குமுறை பிறப்பின் அடிப்படையில், சாதியின் அடிப்படையிலான ஒடுக்குமுறை என்பது இந்தியா முழுமைக்கும் பொதுப்படையாகவே இருக்கிறது. எனவே அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எதிர்ப்பு என்பதும் ஒரு பொதுத் தன்மையோடு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அம்பேத்காரை மராட்டியத்தில் பிறந்தவர் என்று ஒதுக்கி விட முடியாது. பூலேயும் மராட்டியத்தை சார்ந்தவர் என்று ஒதுக்கி விட முடியாது. சாகுமகராஜ், அம்பேத்கர், பூலே போன்றவர்கள் மராட்டியத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள்.

பார்ப்பன ஆதிக்கமும் மராட்டியத்திலேதான் துளிர்த்தது. சித்பவன் பார்ப்பனர்கள் தான் இந்தியாவின் அரசியலை நெடுகவே கையாண்டு வந்து இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.ன் தோற்றம் மராட்டியத்தில்தான் இருக்கிறது. திலகரிலிருந்து அது தொடங்குகிறது. வீரசவார்க்கரின் வழியில் வருகிறது. ஹெட்சுவாரிடமிருந்து அது தோற்றம் பெறுகிறது. எனவே இந்த ஒடுக்குமுறை என்பது பொதுவாக இருக்கிறபோது அதற்கான எதிர்ப்பு என்பதும் பொதுத்தன்மை உடையதாக இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் இதனை இந்திய தன்மை கொண்டதாகவே கொண்டு போக வேண்டும் என்ற தேவை இல்லை.எதிர்ப்பில் ஒரு பொதுத்தன்மை இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒடுக்குமுறைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன. தலித்திய சாதிகளுக்குள்ளும் வேறுபாடுகள் இருக்கின்றன. அம்பேத்கர் பிறந்த மகர் என்ற சாதி இங்கே இல்லை. இங்கே இருக்கிற சாதிகளின் பெயர்கள், தன்மைகள் வேறாக இருக்கின்றன. ஆகையால் இந்த தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவகையில் அந்தத் தலித்திய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை எடுத்துச் செல்வது சரியாக இருக்கும்.தலித் என்ற சொல்லுக்கு தமிழில் பொருள் என்ன?தலித் என்பது மராட்டியச் சொல், தலித் என்றால் மண்ணின் மைந்தன் என்று குறிப்பிடுகிறார்கள் சிலர்.

எனக்கு சரியான பொருள் விளங்கவில்லை. இது அம்பேத்கரிடம் வந்த சொல் என்றும் பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அம்பேத்கர் இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அம்பேத்கர் அட்டவணைச் சாதி, தீண்டப்படாதவர்கள், ஒடுக்கப்பட்டோர் என்ற சொற்களைத்தான் பயன்படுத்துகிறார். பின்னால்தான் இந்த சொல் வந்திருக்கிறது. அந்த சொல்லின் சுருக்கம் கருதி இந்தியா முழுவதும் புகழ் பெற்றுவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. நாம் தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என்ற சொல்லைத்தான், நீண்ட சொல்லாக இருந்தாலும் பயன்படுத்துகிறோம். அல்லது மண்ணின் மைந்தர்கள் என்று பயன்படுத்தலாம்.

ஆதி திராவிடர் என்ற சொல் இருக்கிறது. இனி ஆதி தமிழர்கள் என்ற சொல்லை பயன்படுத்தலாம்.திராவிடம் என்ற சொல் இனி வேண்டாம் என்று கருதுகிறீர்களா?பொதுவாக என்னைப் பொறுத்தவரை நான் அரசியல் தளங்களில் தமிழன் என்ற சொல்லை கூடுதலாகவும் சமூக நீதி தளங்களில் திராவிடன் என்ற சொல்லை கூடுதலாகவும் பயன்படுத்துகிறேன். திராவிடம் என்ற சொல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மக்களை உள்ளடக்கியதாக நான் கருதவில்லை. அவர்கள் யாரும் தங்களை திராவிடன் என்று அழைத்துக் கொள்ளவில்லை. திராவிடன் என்ற சொல்லே பார்ப்பனீய கருத்து நிலைக்கு எதிரான ஒரு போர்க் குணம் கொண்ட சொல்லாக இருக்கிறது. திராவிடம் தான் இந்த மண்ணில் பார்ப்பனீயத்தை எதிர்த்து இந்த நூற்றாண்டில் எழுந்த முதல் குரல் என்பது என் கருத்து.சித்தர்களின் காலத்திலிருந்து அந்தப் பார்ப்பனீயர் எதிர்ப்பு இருக்கிறது.

சங்க இலக்கியத்தைத் தேடிப் பார்த்தால் கூட இருக்கிறது. அது ஒரு இயக்கமாகக் கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. வள்ளலாரிடமும் அடிகளாரிடமும் பார்ப்பன எதிர்ப்பு இருந்த போதிலும் கூட அந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்து கட்டமைத்த பெருமை திராவிடத்திற்கு உண்டு. அதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் உருவாகி விட்டாலும் கால்டுவெல் காலத்திலிருந்து ஒரு பாரம்பரியமான வரலாற்று தொடர்ச்சியிருந்தாலும் பார்ப்பனீய எதிர்ப்பை கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. எனவே திராவிடம் என்ற சொல் பார்ப்பனீய எதிர்ப்பு நிலைச் சொல்லாகவே பயன்படுத்த வேண்டும்.இராகவ அய்யங்கார், கோபால அய்யர் போன்ற தமிழறிஞர்களின் பங்கை என்னவென்று சொல்வீர்கள்?தமிழ்மொழியின் முன்னேற்றத்தில், இனத்தின் முன்னேற்றத்தில் கூட பார்ப்பனர்களின் பங்கு இருப்பதை மறுக்கவில்லை. எப்போதும் விதியை வைத்துத்தான் நாம் பேச முடியுமே தவிர விதி விலக்கை வைத்து அல்ல. எத்தனை பார்ப்பன அறிஞர்கள் அப்படிப் பாடுபட்டார்கள்? திரும்பத் திரும்ப உ.வே. சாமிநாதய்யரைப் பற்றிச் சொல்வார்கள்.

உ.வே.சாவுக்கு முன்பு பதிப்புத்துறையில் யாழ்பாணத்தைச் சேர்ந்த நாவலரும், சி.வை. தாமோதரம் பிள்ளையும் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். அந்த வரலாறு மெதுவாக மறைக்கப்படுகிறது. உ.வே.சா. பதிப்பாசிரியர் என்பது உண்மைதான். ஆனால் இறுதி வரையில் அவர் பார்ப்பனீயக் கருத்துக்களை விடாதவராகவே இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களையும் தாண்டி இலக்கியத்துறையில் மட்டுமில்லாமல் பகுத்தறிவுத் துறையில் A.S.K. அய்யங்கார் போன்றவர்கள் இருந்து இருக்கிறார்கள். விதிவிலக்குகளை வைத்துக் கொண்டு விதிகளை வகுக்க முடியாது.வேத மொழி சமஸ்கிருதம்தான் என்று கருதுவதோடு இன்னமும் அவர்கள் தங்களுடைய தாய்மொழி சமஸ்கிருதம் என்கிற மனோ நிலையிலிருந்து விடுபடவில்லை.ஆங்கிலக் கல்வியைப் புறக்கணித்தால் பார்ப்பனர்கள் ஆங்கிலம் படித்து முன்னேறி விடுவார்கள் என்று பெரியார் எச்சரிக்கை செய்து இருக்கிறார். ஆனால் இன்றைய சூழலில் தமிழ்க் கல்வி வலியுறுத்தப்படுகிறதே...அன்றைய பெரியாரின் எச்சரிக்கை என்பது மிகுந்த கவனத்துக்குரியது.

பெரியார் தமிழைப் பற்றிக் கவலைப்பட்டதை காட்டிலும், தமிழனைப் பற்றிக் கூடுதலாகக் கவலைப்பட்டார். தமிழனின் முன்னேற்றத்திற்குத் தடையாக தமிழாகவே இருந்தாலும் பெரியார் அதனை எதிர்த்து இருக்கிறார். எனவே தமிழன் முன்னேற வேண்டும் என்ற வேட்கையில்தான் அவர் ஆங்கிலம் படிபடி என்று திரும்பத் திரும்ப சொன்னார். அவருடைய பழக்கம் ‘ஓங்கிச் சொல்லுதல்’. கொஞ்சம் ஓங்கிச் சொன்னால்தான் பத்துக்கு நாலு பழுதில்லாமல் போகும் என்று கருதினார்.எனக்குத் தமிழ் மீது எந்த விரோதமும் இல்லை. நான் தமிழில்தான் பேசுகிறேன். தமிழில்தான் எழுதுகிறேன். எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். நான் தமிழ் மக்களுக்காகத்தான் பேசுகிறேன். அதை அறிவியல் மொழி ஆக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காகவும் சொல்கிறேனே தவிர எனக்கு வேற ஒன்றும் கோபம் இல்லை என்று பெரியாரே எழுதி இருக்கிறார். ஆகையால் அன்றைக்கு அவர் சொன்ன அந்தச் சூழலில் நிச்சயமாக 60 களிலும் 70 களிலும் ஆங்கிலம் கற்காமல் தமிழர்கள் இருந்து இருந்தால் பார்ப்பனர்கள் மட்டுமே முன்னேறி இருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது. இன்றைக்குச் சூழல் மாறிக் கொண்டு இருக்கிறது.இன்றைக்குக் கணிப்பொறி மொழி என்பது தமிழும் அல்ல. ஆங்கிலமும் அல்ல.

எந்த மொழியும் அல்லாமல் தனி மொழியாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே இன்றைக்கு நாம் பல அறிவியல் நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கி இருக்கிறோம். ஆகையினால் ஆங்கிலம் படித்தால்தான் முன்னேற முடியும் என்ற நிலையிலிருந்து மாற்றமில்லை. ஆனால் ஆங்கிலத்தை புறக்கணித்து விடுகிற நிலைக்கு நாம் முன்னேறி விடவில்லை என்பதையும் ஏற்க வேண்டும்.தமிழ்நாட்டில், தமிழ்நாட்டுப் பள்ளிகளில், நீதிமன்றங்களில், வழிபாட்டுத் தலங்களில், இசை அரங்குகளில் அனைத்தும் தமிழே இருக்க வேண்டும். அதற்காகப் போராட வேண்டும். அதே நேரத்தில் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகக் கற்றுக் கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை. அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இன்னமும் இருக்கிறது.தேசியம் என்பது கற்பிதமா?தேசியம் என்பதே ஒரு கற்பிதம்தான் என்று தோழர் அ. மார்க்ஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்த நூலில் கூட ஒரு இடத்தில் அது தேவையான கற்பிதம் தான் என்று கூறுகிறார். நீங்கள் கற்பிதம் என்று எடுத்துக் கொண்டால் குடும்பம் கூட கற்பிதம்தான்.

இயற்கையின் விளைபொருளல்ல. எந்த மனிதனும் குடும்பத்தினுடைய உள் அடக்கத்தோடு இயற்கையின் விளைபொருளாக உருவாக வில்லை. எந்தக் கற்பிதமும் இல்லாமல் இயற்கையாகவே இந்த உலகம் அமைய வேண்டும் என்றால் மீண்டும் குகைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் நேரும்.கற்பிதங்கள் சில நேரங்களில் ஒழுங்கமைவுகளாகின்றன. புது ஒழுங்குக்காகச் சில தேவைகள் ஏற்படுகின்றன. அதிலும் மொழி எந்த விதத்திலும் கற்பிதம் அல்ல. அது இயற்கையின் விளை பொருள். எனவே மொழி சார்ந்த, மொழியின் அடிப்படையில் கட்டப்படுகிற ஒரு தேசியம் என்பது ஒரு ஒழுங்கமைவாகவும், தேவையாகவும் சரித்திரத்தில் சரியானதாகவும் இருக்கும்.தேசியம் என்பது முதலாளித்துவ கருத்தின் வெளிப்பாடு என்கிற எண்ணமும் பலருக்கு இருக்கிறது. தமிழ்த் தேசிய சிந்தனைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய இலக்கியங்களிலே இருக்கின்றன. ஆனால் பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகுதான் ஐரோப்பிய நாடுகளில் அப்படி ஒரு வடிவம் உருவானது. என் கருத்தில், குழந்தை எப்போதோ பிறந்து விட்டது, பெயர் வைப்பதற்கு 19 நூற்றாண்டுகள் ஆகி இருக்கலாம். ஆகையால் அது அப்படியே முதலாளித்துவத்தின் இறக்குமதி என்று நாம் கொள்ள வேண்டியதில்லை. இருந்தாலும் பிழை இல்லை. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு அந்தச் சிந்தனை வந்திருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வந்த எவ்வளவோ நல்ல விஷயங்களை நாம் பயன்படுத்தி இருக்கிறோம். தேசியம் என்பது அப்படிப்பட்ட நல்ல தேவையானவைகளில் ஒன்று.தமிழ்த் தேசியம் என்பது....தேசியங்களில் பல வகைகள் இருக்கின்றன.

மதவழித் தேசியம், நிலவழித் தேசியம் மொழி வழித் தேசியம் எல்லா வழித்தேசியமும் உலகில் இருக்கின்றன. பாகிஸ்தான் மதவழி தேசியமாகத்தான் பிரிந்து போனது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் ஏன் பிரிந்து போனது என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. பாகிஸ்தானிலும், வங்காளதேசத்திலும் இஸ்லாமியர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் அங்கு மதவழி தேசியம் தோற்றது. எல்லோருக்கும் மதம் ஒன்றாக இருந்தாலும் உங்கள் மொழி வேறு. எங்கள் மொழிவேறு என்றுதான் முஜிபுர் ரகுமான் எழுந்தார். எனவே அங்கு மதவழித் தேசியத்தை மொழிவழித் தேசியம் வென்றது.பொதுவாக நிலவழித் தேசியம்தான் சரி அல்லது மொழிவழித் தேசியம்தான் சரி என்று நான் குறிப்பிடவில்லை. மொழிவழித் தேசியம் தான் பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது என்று நான் கருதினாலும் ஒரு மொழிக்கு ஒரு நாடு என்று ஆதித்தனார் சொன்னதைப் போல உலகத்தை எளிதாக வரையறுத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு மதத்துக்கு ஒரு நாடு என்றால் பத்து நாடுகள் தாம் இருக்க முடியும். நிலத் தொடர்ச்சியை ஒட்டி நாடுகள் பிரிக்கப்படால் ஐந்து அல்லது ஏழு நாடுகள்தான் பிரிக்க முடியும். மொழிக்கு ஒரு நாடு என்றால் குறைந்தபட்சம் ஆயிரத்துக்கு மேற்பட்ட நாடுகள் உருவாகும். ஆயிரத்துக்கு மேற்பட்ட நாடுகள் உருவாவதில் நமக்கு மறுப்பு இல்லை. அதற்கான காலம் தொலைவில் இருக்கிறது.ஒரு தேசிய இனத்தின் அடிப்படையாக இரண்டு செய்திகளைப் பார்க்க முடியும். தன்னுடைய அடையாளத்திற்கான போராட்டம்.

இன்னொன்று சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம். பொதுவாக தேசிய இனப்போராட்டம் என்பது வர்க்கப் போராட்டம் அல்ல. அது ஒரு ஜனநாயகப் போராட்டம்தான். அந்த அடிப்படையில் தமிழுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், தமிழர்கள் அடையாள அடிப்படையிலும், ஜனநாயக அடிப்படைகளிலும் நம் நாட்டில் உருவாக வேண்டிய தேசியம் தமிழ்த் தேசியம்தான்.தமிழ்த் தேசியம் எந்த மாதிரி கட்டமைக்கப்பட வேண்டும்?ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்படும்போது அங்குச் சாதி செத்துப் போகும். வர்க்க அடிப்படையிலும், பால் அடிப்படையிலும், சமத்துவமும், சாதி அற்ற சமூகமான ஒரு தமிழ்த் தேசியமே நாம் விரும்புகிற கட்டமைப்பு.இந்திய தேசியம் என்பது இந்துத்துவ தேசியம் என்ற கருத்து உண்டு. தமிழ்த் தேசியத்திற்கு எதை முன் மாதிரியாக வைத்துக் கொள்கிறீர்கள்....இந்தி தேசிய இனம்தான் நம்மை ஒடுக்குகிறது என்கிற கருத்து இருக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தேசியம் இனம் ஒடுக்கும் இனமாகவும், தமிழ் இனம் ஒடுக்கப்படுகிற இனமாகவும் இலங்கையில் இருப்பதைப் போல இங்கே இல்லை. இங்கே கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை structural oppression இருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

எனவே தமிழ்த் தேசிய விடுதலை என்பது இந்துத்துவ பார்ப்பனீயத்திற்கு எதிரான ஒரு இலக்கைக் கொண்டதாக இருக்க வேண்டும்.தமிழ்ச் சமூகம் சாதிய சமூகமாக பிரிந்து கிடக்கிறது. சாதியை எதிர்க்காமல் தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க முடியாது. எனவே முதல் பகை சாதியியம். இன்னொரு பகை ஆணாதிக்கம். இப்பின்புலத்தில் இரண்டு இலக்குகள் உள்ளன. ஒன்று இந்திய இந்துத்துவ தேசியம். இன்னொன்று விரைந்து வளர்ந்து கொண்டிருக்கிற உலகமயமாக்கல். உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார் மயமாதல் போன்றவை தேசிய இனங்களை அழிக்க புறப்பட்டு இருக்கிற எதிர் பகைகள்.இந்திய இந்துத்துவ தேசியத்தையும் உலக மயமாக்கலையும் எதிர்க்க வேண்டியது தமிழ் தேசியத்தின் அடிப்படை. இவைகளை எதிர்த்துக் கட்டமைக்கப்பட இருக்கிற தமிழ்த்தேசியம் எதனையும் முன் மாதிரியாகக் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதல்ல.

உலகில் பல தேசியங்கள் சரியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. நம்மைப் பொறுத்தவரை சாதிகளற்ற, பால்வேறுபாடு இல்லாத, வர்க்க வேறுபாடு இல்லாத உலகமயமாக்கலிருந்த விடுபட்டு நிற்கிற ஒரு தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க வேண்டும்.தமிழ்த் தேசியத்தில் வழிபாடு, சமயம் போன்றவைகள் இருக்குமா?சமயம் வழிபாடு போன்றவைகள் தனிமனித நம்பிக்கைகளையும், தனி மனித அனுபவங்களையும், தனி மனித உரிமைகளையும் சார்ந்தவை. ஒரு அரசு அதில் தலையிட வேண்டியதில்லை. ஒரு அரசுக்கு உட்பட்ட மக்கள் அனைவரும் பகுத்தறிவாளர்களாகவோ, கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவோதான் இருக்க வேண்டும் என்று கூறமுடியாது. அது அவரவர் தனிப்பட்ட விஷயம். லெனின் சொன்தைப் போல it is a private affair. ஆனால் எந்த விதத்திலும், எந்த மதத்திற்கும் அரசு ஊக்கமளிக்க வேண்டியதில்லை. எல்லா மதத்திற்கும் சார்பாக ஒரு அரசு இருக்கிறது என்பதுதான் secular என்று சொல்கிறார்கள். ஆனால் எந்த மதத்தையும் சாராமல் இருப்பது என்பதே சரி. எல்லாருக்கும் பொதுவானது என்பது எல்லோருக்கும் ஊக்கமளிப்பது ஆகும்.

அது அரசினுடைய வேலை அல்ல.எந்த மதத்தையும் சாராமல், எந்த மதத்திற்கும் சலுகை காட்டாமல் எந்த மதத்தினுடைய விழாவையும் அரசு அங்கீகரிக்காமல் அது அந்த அந்த மதத்தின் அந்த அந்த மனிதர்களின் தனிப்பட்டவை என்று தலையிடாமல் இருக்கலாமே தவிர அதை ஆதரிக்க முடியாது. எனவே சமயம் வழிபாடு ஆகியவைகளைத் தமிழ்த் தேசியம் ஊக்குவிக்காது. தலையிடாது.அம்பேத்கர் மதத்துக்குள் சமரசத்தை தேடினார். அதுபோலவே தமிழ்த் தேசியம் இருக்கிறதே?நான் குறிப்பிடுகிற தமிழ் தேசியம் சமரசமானது அல்ல. நான் எல்லா மதத்தையும் ஏற்றுக் கொண்டே மதத்துக்குள் சீர்திருத்தம் என்றோ வரவில்லை. தமிழ் தேசியம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது. தனிப்பட்ட நம்பிக்கைகளில் தலையிடாது என்பதுதானே தவிர அது சமரசம் இல்லை. தனிப்பட்ட நபர்களின் உரிமையை போற்றுகிற செயல். அதைத் தவிர எந்த விதமான சமரசமான தமிழ்த் தேசியத்தையும் முன் வைக்கவில்லை.அம்பேத்கர் சமரசம் செய்து கொண்டார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

இந்துத்துவத்தை எந்தச் சமரசமும் இல்லாமல் அவர் எதிர்த்தார் என்பதுதான் உண்மை. அவர் பௌத்த மார்கத்திற்கு மாறியது சமரசம் அல்ல. பௌத்தம் என்பது மதம் அல்ல. மார்க்கம் என்பதை உணர்ந்தார். அது மனித வாழ்க்கைக்கு தேவையான அறிவு மார்க்கம் என்று கருதினார். உண்மையில் புத்தன் சொன்ன நெறிகள் அத்தகையானவைதான். பிறகு நாகார்ஜூனன் என்ற பார்ப்பனன் உள்ளே நுழைந்த பிறகு அது இந்து மயமாக்கப்பட்டதே தவிர, அம்பேத்கர் சமரசமற்ற முறையில் இந்துத்துவத்தை எதிர்த்தார் என்பதே உண்மை.இந்தச் சமூக அமைப்பில் உள்ள குறைகளைப் போராடிப் பெற முடியும் என்கிற மாதிரிதான் பெரியாரின் செயல்பாடுகள் இருந்தன...ஒரு நிலவுடைமைச் சமுதாயம் வீழ்ச்சியுறும்போது முதலாளித்துவ சமூகம் தானாகவே எழும் என்பதுதான் மார்க்சியக் கோட்பாடு. பெரியார் நிலவுடைமை சமூகத்தோடு அதன் கொள்கையோடு எந்தச் சமரசமும் செய்துக் கொள்ளவில்லை. மதம், சாதி எல்லாம் நிலவுடைமை சமூகத்தின் எச்சங்கள். ஆணாதிக்கம் உட்பட அனைத்தையும் மிகக் கடுமையாக எதிர்த்தார்.

முதலாளித்துவச் சிந்தனையோடு பெரியார் முழுமையாக முரண்பட்டார் என்று சொல்ல முடியாது. அதற்குக் காரணம் அறிவியல் என்பது முதலாளித்துவ சமூகத்தின் விளைபொருளாக இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.நவீனச் சமூகத்திற்குத் தேவையான பலவற்றை முதலாளித்துவச் சமூகம் ஈன்றெடுத்திருக்கிறது. எனவே முதலாளித்துவ சமூகத்தில் இருந்து சமன்மைச் சமூகம் (சோசலிச சமூகம்) நோக்கிப் போகிறபோதுதான் முதலாளித்துவ சமூகத்தின் குறைபாடுகளிலிருந்து முற்றிலுமாக விடுபடமுடியுமே தவிர, அரைநிலவுடைமை, அரை முதலாளித்துவச் சமூகமாக இருக்கிற ஒரு காலக்கட்டத்தில் முதலாளித்துவச் சமூகத்தோடு ஒரு சாய்வு தொடக்கத்தில் ஏற்படத்தான் செய்யும். அதுதான் பெரியாரிடத்திலே இருந்தது. அது காலத்தின் தேவை. சரியானது.

அது ஒரு பிழையான பார்வை அல்ல.மொழி என்பது கருத்து பரிமாற்றத்திற்கான கருவி என்ற மார்க்சியர்கள் கருத்து பற்றி...இன்றைக்கு மார்க்சியத் தோழர்களிடம் கூட இந்தக் கருத்துப் பற்றி மாற்றங்கள் ஓரளவுக்கு வந்திருக்கின்றன. முன்பு அவர்கள் சொன்னதைப் போல மொழி ஒரு கருவி என்று சொல்லவில்லை. மொழிப் பற்றிய சிந்தனையில் மார்க்சியத் தோழர்களிடையே கருத்துக்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இருப்பினும் இன்னமும் அப்படிச் சொல்லுகிற தோழர்கள் இருக்கவேச் செய்கிறார்கள். மொழி ஒரு கருவி என்றும் அது சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் இருக்கிறது என்றும் கருதுகிற தோழர்கள் இருக்கிறார்கள்.என்னைப் பொருத்தவரைக்கும் இரண்டு கருத்துக்களிலும் உடன்பாடு இல்லை. அதாவது சாதி, மொழி என்பவையெல்லாம் மேல் கட்டுமானத்தைச் சார்ந்தவை என்பது ஒரு காலக்கட்டத்தில் பார்வை.

ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அவை அடித்தளத்திலும், மேற்கட்டுமானத்திலும் இரண்டிலுமாக இயங்குகின்றன. ஆலமரத்தின் விழுதுகள் மேலிருந்து கீழிறங்கும். கீழே இறங்கின பிறகு அடிமரம் ஆடிப்போன பிறகு விழுதுகள் தான் தாங்கி நிற்கும். மொழி என்பது இன்றைக்கு அடிமரமாக இருந்து கொண்டு இருக்கிறது. மொழி அடித்தளத்திலே இயங்குகிறது. சாதி அடித்தளத்திலும் மேற்கட்டுமானத்திலும் இயங்குகிறது. எனவே மொழி மேற்கட்டுமானத்தை சார்ந்ததல்ல. அடித்தளத்தைச் சார்ந்தது. ஏன் அடித்தளத்தைச் சார்ந்தது என்றால் பொதுவாக உற்பத்தி கருவிகள், உற்பத்தி உறவுகளை வைத்துதான் மார்க்சிய தோழர்கள் சொல்வார்கள்.குரங்கிலிருந்து மனிதனாக மாறியபொழுது உழைப்பு வகிக்கிற பாத்திரத்தில் மொழிக்கு இடம் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஏங்கெல்ஸ் சொன்ன கருத்தில் நாம் மொழியையும் சேர்க்க வேண்டும். மொழி ஒரு கருவி என்பது மொழியைச் சிறுமைப்படுத்துகிற கருத்தாகவே தோன்றுகிறது. கருவி எப்பொழுதும் உடலின் புறத்தே இருப்பது. ஒரு முறை இன்குலாப் கூட கூறினார். அது கருவியாகவே இருக்கட்டும். முகம் சவரம் செய்கிற கருவியைக் கூட நாம் சுத்தமாக வைத்திருக்கிறோம். கருவி கூர்மையாக இருக்க வேண்டாமா என்று சொன்னார். அடிப்படையில் மொழி என்பது வெளியிலிருப்பது அல்ல.

உங்கள் மூளையில் பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைக்கப்பட்டதாகவே மொழி இருக்கிறது. மொழி செயற்கையன்று. இயற்கை. மொழியில்லாமல் ஒரு மனிதனால், ஒரு சமூகத்தால் வாழ முடியாது. சிந்தனை என்பது மொழியின் பாற்பட்டது. எனவே மூளை இயங்குகிற வரையில் மொழி இயங்கும். ஆகையால் மொழி என்பது உள்ளும், புறமுமாக இயங்கிக் கொண்டிருக்கிற மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு கூறு. மொழியை ஒரு கருவி என்று சொல்வது அதனைக் கொச்சைப் படுத்துவதாகும்.இடது சாரி தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று பெரியாரைக் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் இடது சாரிகளான சிங்காரவேலர், ஜீவா ஆகியோர்கள் பெரியாரோடு முரண்பட்டனரே?தலைவர்கள் பலர், அவரோடு இணைந்து பணியாற்றிய காலமும், பிரிந்து போன காலமும் உண்டு. அவர்களுக்குள் குறிப்பிடத்தகுந்தவர்கள் சிங்காரவேலரும் ஜீவாவும். பெரியாரின் சுயமரியாதை சமதர்ம திட்டத்தினுடைய சிற்பிகள், சிங்காரவேலரும், ஜீவாவும். சுயமரியாதை வரலாற்றில் சிங்காரவேலருக்கு ஓரிடம் உண்டு. அவர்கள் பிரிந்து போனது ஒரே ஒரு கட்டத்தில்தான்.

1932-ல் சோவியத் யூனியனுக்கும், ஐரோப்பாவுக்கும் போய் வந்த பிறகு பொதுவுடமைக் கொள்கைகளைப் பெரியார் முன் எடுத்தார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் கொண்டு வந்ததும், மே தினத்தைக் கொண்டாடச் சொன்னதும், பிள்ளைகளுக்கு லெனின் ஸ்டாலின் என்று பெயர் வைக்கச் சொன்னதும் பெரியார்தான்.

1936க்கு பிறகு சர்.ஏ.டி. பன்னீர் செல்வத்தின் அறிவுரைப்படி ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளை எதிர்கொள்ள வேண்டாம் என்கிற கணக்கில் பொதுவுடமைக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிங்காரவேலர் ஜீவா போன்றவர்கள் வெளியேறினார்கள் என்று படித்து இருக்கிறேன்.அன்றைய முதன்மையான தேவையாக சம உரிமையை, பொது உரிமையைக் கருதுகிறார் பெரியார். ஆனால், சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் பொதுவுடமையைக் கருதுகிறார்கள். இது பற்றிய விவாதம் நீண்ட நெடிய விவாதமாக நடந்து கொண்டே இருக்கிறது. எனினும் பெரியார் பொதுவுடமைக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னாரே தவிர, பொதுவுடமைக் கொள்கைகளை இறுதி வரை எதிர்க்கவில்லை. இறுதி வரை பெரியார் பொதுவுடமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராகவே இருந்ததைப் பார்க்க முடிகிறது.

1948, 1949 ஆண்டுகளில் பொதுவுடமைத் தோழர்கள் தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் மிகக் கொடுமையாக ஒடுக்கப்பட்ட நேரத்தில் அவர்களுக்காக குரல் கொடுத்த ஒரே இயக்கம் சுயமரியாதை இயக்கம்தான். பெரியாருக்கு சிறையிலிருந்து வெளிவந்த எம். கலியாணசுந்தரமே இது குறித்து நீண்ட கடிதத்தை எழுதி இருக்கிறார்.நீங்கள் செய்த உதவியைப் போல யாரும் செய்ததில்லை என்று பெரியாருக்கு எழுதி இருக்கிறார். பல தோழர்களுக்கு மறைமுகமாகத் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் திராவிடர் கழகத்தாரும் திராவிட இயக்கப் பற்றாளர்களும்தான். தோழர் ஜீவாவே நாகர்கோவிலில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வீட்டில்தான் தலைமறைவாக இருந்தார் என்பது பின்னாளில் அறியப்பட்ட செய்தி. அதே போல் சிங்காரவேலரும், ஜீவாவும் அவரிடமிருந்து பிரிந்து போனார்களே தவிர சுயமரியாதைக் கொள்கைகளை எதிர்க்கவில்லை. எதற்கு முன்னுரிமை என்பதிலேதான் கருத்து வேறுபாடு இருந்தது.உங்களுடைய வாழ்க்கை போராட்டம், சிறை என்றே இருக்கிறது.

உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பலன் கிடைத்து இருக்கிறதா?என்னுடைய பொதுவாழ்க்கை போராட்டமும் சிறையுமாக இருந்தது என்பது மிகையான கூற்றுதான். ஒப்பிட்ட அளவில் நாம் இந்த சமூகத்திற்கு செய்திருக்கிற செயல்கள் குறைவானவை என்பது தன்னடக்கமான சொற்கள் அல்ல. இயல்பானவை. யதார்த்தம் அதுதான். ஆனாலும் கூட உழைப்பிற்கான பலன் இந்தச் சமூகத்தில் விளைந்திருக்கிறதா என்ற வினா சரியானது. ஆனால் கூட்டி கழித்து கணக்குப் பார்க்கிற இடத்திற்கு இன்னமும் நாம் வந்து விடவில்லை என்றே எனக்கு படுகிறது. சரியாய் சொல்ல வேண்டும் என்றால் முன்னேற்றமே இல்லை என்று சொல்லி விட முடியாது. நான் குறிப்பிடுவது நம்முடைய உழைப்பிற்கு ஏற்ற விளைபயன் இல்லை என்பதுதான்.எந்த ஒரு தனி மனிதனுடைய உழைப்பும் குறிப்பிடத்தக்கதல்ல.

தமிழ்த் தேசிய இயக்கங்களும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் இது வரை ஆற்றி இருக்கிற பணிக்கு ஈடாக சமூகத்தில் முன்னேற்றங்கள் விளைந்து விட்டன என்று கூறமுடியாது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும் சரியான பார்வை இல்லை. நாங்கள் செய்திருக்கும் செயல்கள் ஓரளவுக்குச் சரியானதுதான் என்றாலும் கூடுதல் அர்ப்பணிப்பு தேவையாக இருக்கிறது. நம்மிடம் தான் குறைகள் இருக்கின்றன. மக்களிடம் இல்லை.

http://www.keetru.com/ungal_noolagam/jul06/subavee.html

5 comments:

Anonymous said...

Here is some food for thought:

Population in TN (approx. estimates)
Brahmin - 3 million (<5%)
Others - 60 million 95%
Of the 3 million brahmins - assuming a split of 50% women (1.5 million) - the balance is men (1.5 million)
it'd be reasonable to say that women are unlikely (mostly) to actively commit atrocities
Of the balance 1.5 million men - nearly 40% will be less than 17 years of age (unlikely to actively commit atrocities) - of the balance 900,000 men, nearly 500,000 of them are outside TN/India - hence unlikely to actively commit atrocities) - of the balance 400,000 nearly half of them live below poverty line and unlikely to commit atrocities (infact suffer atrocities at the hands of others!) - of the balance 200,000 some 25,000 will be at the fag end of their lives and 25,000 would have renounced worldy life and taken sanyasam - some 25,000 men would have inter married among other castes - say some 25,000 are genuinely good - hence this group of 100,000 men are unlikely to commit atrocities
So it looks like only the balance approx. 100,000 brahmin men seem to commit atrocities against which the rest of the TN seems to suffer so much that the gentry in this forum are up in their arms!!!
While most of the statistics have been completely made up by me i will not be surprised if this is closer to reality!!! If some object to non inclusion of brahmin women, using the above logic, say 100,000 women commit atrocities - total is 200,000

Some of the mis informed Dalits and most of the converted dalits and many who are in the process of being converted (hence thoroughly brain washed) keep posting this anti brahmin remarks to satisfy their internal agenda and pervert inclinations

In the process my request to these converted dalits and half baked dalits is 'PLEASE DO NOT BRING THE REST OF THE TAMIL NON BRAHMINS INTO DISREPUTE'

THIS SITE IS AVERY VALUABLE SITE FOR THE TAMIL LANGUAGE - DO NOT BRING IT TO DISRPUTE BY YOUR XENOPHOBIC REMARKS

YOU HAVE NO RIGHT TO REPRESENT THE DRAVIDIANS/TAMIZHANS - AS I KNOW THE TAMILIANS AND DRAVIDIANS ARE VERY RESPECTFUL AND DO NOT HARBOUR ILLWILL AND MALICE TO ANYONE INCLUDING BRAHMINS

Anonymous said...

Obviously a moron like Periyar will only be taken for a ride by the Communists

The idiot that Periyar was he did not know how Stalin wiped out millions and millions of innocent lives - the Russians almost wiped away the population in east european countries - the impact of which is being felt by those countries even now - broken families, crime, wide spread poverty to name a few

Am sure the great thanthai periyar wanted the same state to happen to Tamils

English spreads because it is a predominant business language - no one stops the Tamilians to be business savvy and spread tamil across the world

Infact it is the morons like Periyar who by pushing for communism and podhu udamai killed the entrepreneurialism which eventually killed the language

Anonymous said...

The tamil leaders are xenophobic and mozhi veriyans - like how the cast veriyans need to be eliminated the mozhi veriyans need to be eliminated as well

no wonder the tamils are hated throghout india for their obnoxious behavior when it comes to their xenophobic views

a few stupid leaders spoil the reputation of the entire state

Anonymous said...

how about muslims - why doesnt the dravidian leaders have the balls to speak anything against them

they are also heavily imbibed in the urdu culture - how abot Christians and dalits converting to christians - they are also slavishly aping the west - look at their marriages - the bride and the groom have started kissing in the hands - it is just a matter of time when a full blown western style christian wedding happens

Anonymous said...

if influence of west/english needs to be eliminated then religious conversions to christianity needs to be stopped as well

IF IT IS STUPID TO FOLLOW VELLAKARAN'S LANGUAGE, IS IT OK TO FOLLOW VELLAKARAN'S GOD!

if u have the balls argue with me without deleting my post