Thursday, March 22, 2007

தமிழும், திராவிடமும்!

உலகின் மூத்தமொழி. கல்தோன்றி, மண்தோன்றா காலத்து மனிதர்கள் பேசி மகிழ்ந்த மொழி. ஆரியக் கலாச்சார, சமஸ்கிருத ஊடுருவல், மொகலாய உருது, பார்சி, வெள்ளையரின் ஆங்கிலேய ஊடுருவல்களையும் சமாளித்து நின்று இன்றும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி.
சமயம் மட்டுமே இம்மொழியைக் காத்தது என்ற புனையுரைகள் இணையத்தில் புனையப்பட்டு வரும் சூழ்நிலையில் இனமான திராவிட இயக்கத்தின் பங்களிப்பு இம்மொழியின் வளர்ச்சிக்கு எத்தகையது என்று விளக்க வேண்டிய அவசியம் நமக்கு இயல்பாகவே எழுகிறது.


பண்டிதர்களும், சமயத் தலைவர்களும் தங்களுக்குள்ளாகவே நம் மொழியின் பயன்பாட்டினை பிரித்து எடுத்துக் கொண்டு சமயம் பரப்ப மொழியைப் பயன்படுத்திய வேளையிலே திராவிடர் இயக்கம் மட்டுமே தமிழை பாமரருக்கும் உரிமை கொண்டதாக்கியது.


தமிழிலே புதிய சொற்களை அறிமுகப்படுத்தியதில் முன்னோடிகளாக மறைமலையடிகளாரும், திரு.வி.க.வும் மற்ற பேராசிரியர்களும் பாடுபட்ட போதிலும், அவர்களது பணி எந்த அளவுக்கு மக்களை அடைந்தது என்பது கேள்விக்குறியே. புதுத்தமிழை சாமானியனும் பயன்படுத்தலாம், படைப்புகளை உருவாக்கலாம் என்ற சூழ்நிலையை உருவாக்கியவர்கள் திராவிட இயக்க முன்னோடிகள்.


தேசிய இன உணர்வானது தேசிய மொழியையே நேசிக்கச் செய்யும் இயல்பு கொண்டது என்ற நிலையில் மண்டல மொழியான தமிழின் தனித்தன்மையை காக்கும் வேலையை திராவிடர் இயக்கம் செவ்வனே செய்தது. சமயங்கள் தமிழை வாழவைத்தது என்ற கருத்தாக்கத்தை நாமும் ஒப்புக் கொண்டாலும் கூட சமயத்தமிழால் அடித்தட்டு தமிழனுக்கு விளைந்த நன்மை என்ன என்ற நியாயமான துணைக்கேள்வியையும் நம்மால் புறந்தள்ள முடியாது.
கூடுமானவரை வடமொழிச் சொற்களை தமிழில் இருந்து அகற்றி திராவிடர் இயக்கம் மக்களுக்குத் தந்த தமிழ் உரைநடைத் தமிழாக இருந்தாலும், அத்தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய எழுச்சியினை எந்தக் கொம்பனாலேயும் மறுக்க முடியாது.


திராவிடர்கள் நடத்திய பத்திரிகைகளான குடியரசு, விடுதலை, திராவிடன், திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், தோழன், நகரதூதன், போர்வாள், தாய்நாடு, குயில், இனமுழக்கம், தென்றல், தென்னகரம், தாரகை, தன்னாட்சி, தனியரசு, மாலைமணி, நம்நாடு, பிறப்புரிமை, நக்கீரன், அண்ணா, தென்புலம், மன்றம், முல்லை, நீட்டோலை, புதுவாழ்வு, தம்பி, மக்களாட்சி, அறப்போர், அன்னை, முன்னணி, காஞ்சி, பகுத்தறிவு, உரிமை வேட்கை, மக்களரசு, தீப்பொறி, ஈட்டி, திராவிடஸ்தான், தமிழரசு, தென்னரசு, திராவிட ஏடு, அருவி, பொன்னி, ஞாயிறு, பூம்புகார், வெள்ளி வீதி, கனவு, அமிர்தம், தஞ்சை அமுதம், தென்னாடு, முன்னேற்றம், தீச்சுடர், களஞ்சியம், திருவிடம், பூமாலை, சங்கநாதம், எரியீட்டி, புரட்சிக்குயில், திருவிளக்கு ஆகியவவை எளிய உரைநடையில் புதுத்தமிழ் சொற்களை சாமானிய மக்களிடையே பரப்பியது.


வேறு வழியில்லாமல் கல்கி, ஆனந்தவிகடன், சுதேசமித்திரன் போன்ற ஆரியப் பத்திரிகைகளும் தங்களது சொந்த அடையாள நடையை மாற்றவேண்டிய கட்டாயம் இப்பத்திரிகைகளால் ஏற்படுத்தப்பட்டது. பழைய ஆனந்தவிகடன், கல்கி இதழ்களை இன்றைய இதழ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் இந்த உண்மை புலப்படும்.


இதுமட்டுமல்லாமல் சிறுகதை, நெடுங்கதை, கவிதை, நாடகம், திரைப்படம் என இலக்கியத்தின் மற்ற கூறுகளிலும் திராவிட இயக்கத்தின் அழகுத்தமிழ் அரசாட்சி மொழியின் பயன்பாட்டை அதற்குரியவர்களுக்கு கொண்டு சென்றது. துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியே பலமுறை ஒத்துக் கொண்ட ஒரு உண்மை “திராவிட இயக்கத்தினரால் தமிழர்களுக்கு நல்ல தமிழ் கிடைத்தது” என்பது.


புலவர் குழந்தையின் “இராவணக் காவியம்”, அதுவரை இருந்த இதிகாசத் தமிழ் செயற்பாட்டுக்கு மரண அடி கொடுத்தது.


புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா முதற்கொண்டு திராவிட இயக்கத்தின் கடைநிலை எழுத்தாளர் வரை இனமான எழுச்சித் தொடரினை தமிழரிடையே தொடக்கி வைத்தார்கள்.


தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் தினத்தந்தி எளியத் தமிழில் தினச்செய்திகளை தமிழருக்கு தரத் தொடங்கியது.


தமிழர்களின் வாழ்விலையில் முறையில் நடக்கும் இயல்பான நிகழ்ச்சிகளின் தலைப்புகள் தனித்தமிழில் மாற்றப்பட்டது திராவிட இயக்கம் தமிழ் மொழிக்கு செய்த மறுக்க முடியாத சாதனை எனலாம்.


விவாகசுபமுகூர்த்தப் பத்திரிகை – திருமண அழைப்பிதழ்
கர்ணபூஷனம் – காதணிவிழா
ருதுசாந்தி – மஞ்சள்நீராட்டு விழா
கிரஹப்பிரவேசம் – புதுமனை புகுவிழா
உத்தரகிரியை – நீத்தார் வழிபாடு
நமஸ்காரம் – வணக்கம்

இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் தமிழன் பயன்படுத்திய வடமொழி வார்த்தைகள் நீக்கப்பட்டு, தமிழின் அழகுச்சொற்கள் பயன்பாட்டுக்கு வர திராவிட இயக்கம் அடிகோலியது.
அதுமட்டுமா? அரசியல் மேடைகளிலும் தமிழ் கொஞ்சத் தொடங்கியது
அக்ரசானர் – அவைத்தலைவர்காரியதரிசி – செயலாளர்அபேட்சகர் – வேட்பாளர்
இவ்வாறாகத் துறைதோறும் தனித்தமிழ் வளர்ச்சி திராவிட இயக்கத்தாரால் நித்தமும் நடைபெற்றது.


வேட்பாளர் என்ற சொல்லை திமுக 1957ல் தேர்தலிலே முதன்முறையாக கலந்துகொண்ட போது தான் தமிழகத்திலே பயன்பாட்டுக்கு வந்தது. இம்மாற்றத்தை பாராட்டி அக்காலக்கட்டத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகை தலையங்கமே எழுதியது.


“சுவாமி வேதாசலம் தன் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றியபோது எதிர்த்தார்கள். மந்திரிகளை அமைச்சர்கள் என்றபோது எதிர்த்தார்கள். மகாஜனம் வேண்டாம், பொதுமக்கள் போதும் என்றபோது எதிர்த்தார்கள். உபன்யாசத்தை சொற்பொழிவு என்றபோதும் எதிர்த்தார்கள்.
இவர்கள் எங்கேயிருந்து தமிழை வாழவைக்கப் போகிறார்கள். நெருப்பு எரிகிறவரையே குளிர்தெரியாமல் இருக்கும். நெருப்பு அணைந்துவிட்டால் மீண்டும் குளிர் நடுங்க வைக்கும்.
தமிழ்மொழி மீது ஆர்வமும், சுறுசுறுப்பும் தொடர்ந்து இருந்தால் மட்டுமே தமிழ் வாழும். இல்லாவிட்டால் மீண்டும் மகாஜனம் வந்துவிடும். பொதுமக்கள் அழிந்துவிடும்” என்று பேரறிஞர் அண்ணா ஒருமுறை குறிப்பிட்டார்.


அதாவது திராவிடர் இயக்கம் என்ற நெருப்பு அணைந்துவிட்டால், மீண்டும் மணிப்பிரவாள குளிர்நடுக்கம் தமிழனுக்கு ஏற்படும் என்பதையே பேரறிஞர் சூசகமாக குறிப்பிட்டார்.
இன்றைய தேதியிலும் தமிழ்வளர்ச்சி, தமிழ் முன்னேற்றம், தமிழர் வாழ்வாதாரம் போன்ற சொற்களைக் கேட்டாலே ஒரு கூட்டத்துக்கு வலிப்புநோய் கண்டுவிடுகிறது. திராவிடர்கள் தமிழ், தமிழர் நலனில் தனித்தன்மை கெடாமல் எதைச் செய்தாலும் அக்கூட்டம் எதிர்த்து வந்திருப்பதே வரலாறு.


இந்த குள்ளநரிக்கூட்டம் எதையெல்லாம் எதிர்க்கிறதோ, அதுவெல்லாம் தமிழனுக்கு நன்மை செய்யும் விடயங்கள் என்று அறிந்துக் கொள்ளலாம். அவர்களது எதிர்ப்பு நமக்கெதிராக எப்போதெல்லாம் எழுகிறதோ அப்போதெல்லாம் நாம் சரியான பாதையில் வீறுநடை போட்டு வருகிறோம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

1 comment:

iggyabbett said...

The new casino at Bally's in South Africa goes live with
The new 시흥 출장마사지 casino 제주 출장마사지 at Bally's in South 익산 출장마사지 Africa goes live with the first ever live entertainment 강원도 출장마사지 experience, with the 포항 출장샵 new Live