Tuesday, March 20, 2007

கனிமொழி - அரசியலுக்குத் தேவை...

இது பெண்கள் தினத்திற்காக மற்றும் நீண்ட நாட்களாக நான் எழுத ஆசைப்பட்ட விசயம்.மார்ச், 2007.

தமிழ் நாட்டு அரசியலை உற்றுப் பார்க்கின்ற பொழுது பெண் அரசியல்வாதிகள் எண்ணிக்கையில் மிகக் குறைவாகத்தான் உள்ளார்கள். நம் தமிழ் நாட்டிற்கு ஓர் பெண் முதல்வர் இருந்த பொழுதும் சராசரி பெண்களின் பங்கு மிகத் தெளிவாக, கொள்கை ரீதியாக, அரசியல் பாடங்கள் கற்றவர்களாக, ஓரளவு நம் சமுதாயத்துடன் ஒத்துப் போகக் கூடிய கருத்துக்களை உள்வாங்கிய பெண் தலைவர்கள் 33% அளவிற்கு உள்ளதா என்பது ஓர் பெருத்த கேள்விக் குறியாக உள்ளது. இந்திய அரசியலில் பெண் தலைவர்களும் சுதந்திரப் போராட்டத்தில் கூட பங்கு பெற்ற தலைவர்கள் இருந்து இருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் இருந்த பெண் தலைவர்கள் பலர் துளிகூட சுயநலம் இல்லாமல் நாட்டிற்காக சொந்த மண்ணிற்காகப் போராடி இருக்கிறார்கள் என்பதையும் வரலாற்றில் சில பக்கங்கள் சொல்லத்தான் செய்கிறது.

அப்படி நான் உற்று நோக்குகின்ற ஓர் நபர் நம் முதல்வர் கலைஞர் அவர்களின் புதல்வி கனிமொழி. முதல்வரின்மகள் என்ற காரணத்திற்காகவே அவரிடம் உள்ள பல நல்ல விசயங்களை நம் பத்திரிக்கைகள் இன்னும் மக்கள் இடத்தில் கொண்டு செல்லவில்லையோ என்று நான் பல சமயம் நினைத்துப் பார்த்து இருக்கிறேன். கனிமொழி என்ற நபரிடம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய பல விசயங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஓர் சாராசரிப் பெண்ணாக அவர் கடந்து வந்த பாதையில் ரோஜாக்களை விட முட்களைத்தான் அதிகம் பார்த்து இருப்பார் என்று நினைக்கிறேன்.கனிமொழி என்கிற ஓர் பெண், முதல்வரின் பெண் என்பதால் மாட மாளிகையில், பட்டத்து இளவரசி போல இல்லாமல் மிகச் சதாரணமாக எளிமையாக எல்லோரிடமும் பழகும் ஓர் பக்கத்து வீட்டுப் பெண் என்கிற உணர்வை ஏற்படுத்துகின்ற தோற்றம் நிச்சயம் அவர்களுக்கு அது மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் என்றுதான் தோன்றுகிறது.

நம் சமுதாயத்தில் மணவாழ்க்கை என்பது ஓரு தவிர்க்க முடியாத கட்டமைப்பு. சிலருக்கு அல்லது பலருக்கு மனமொத்த வாழ்க்கை அமைவது இல்லை. இதற்கு கனிமொழி ஒன்றும் விதிவிலக்கல்ல. முதல் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்ட பொழுதும் அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் ஓர் நல்ல வாழ்க்கையை அதுவும் மனதிற்கு பிடித்த மற்றோரு வாழ்க்கையை நல்ல படியாக அமைத்துக் கொண்டு ஓர் குழந்தைக்குத் தாயாக இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.1988 ஆண்டிலே சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் பொருளாதாரம் பயின்ற மாணவியாக இருந்த பொழுது கோவில்களுக்குச் சென்று இறைவனை வணங்கி இருக்கிறார், காலப் போக்கில் ஆலயங்களில் இறைவனைத் தேடுவதை விட இயல்பு வாழ்க்கையில் நமக்கும் மேலே ஓர் சக்தி உள்ளது என்பதைவிட, நமக்குள்தான் ஓர் சக்தி இருக்கிறது என்பதை உணர்கிறேன் என்று கூட விகடனில் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.

தமிழ் சமுதாயத்தில் அரசியல் தலைவர்களில் மறுக்க முடியாத மறைக்க முடியாத ஓரு மாபெரும் அரசியல் தலைவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். அவருடைய பல புத்தகங்களைத் தந்தை கலைஞரிடம் இருந்து வாங்கிப் படித்து மூட நம்பிக்கை, சாதி மறுப்பு, பெண் விடுதலை இவை அனைத்தையும் உள்வாங்கி வைத்து இருப்பதில் இருந்து தன்னுடைய வளர்ச்சியில் அவருக்கு ஓர் சமுதாயம் சார்ந்த அக்கறை இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.கலைஞருக்கு தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடும் மற்றும் காதலும் உள்ளதைப் போல அவரது வாரிசு கனிமொழிக்கு உள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விசயம். குறிப்பாக சங்கத்தமிழைப் படித்துவிட்டு கலைஞரிடம் விவாதம் செய்வாராம். தமிழ் இலக்கியத்தின்மேல் இப்படி ஓர் காதல் இருப்பதும் நிச்சயம் ரசிக்கப்பட வேண்டிய விசயம். அவர் கலந்து கொள்ளும் விழாகளில் தமிழ் இலக்கியம் பற்றி, பாரதி பற்றி, கம்பன் பற்றி, திருவள்ளுவர் பற்றிப் பேசுவதும் கவனிக்கப் பட வேண்டிய விசயம்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் அறிவார்ந்த, சமுதாய அக்கறை கொண்ட நபர்களும் ஆதரிக்கும் விசயம் "நம் ஈழ மக்கள் விடுதலை". நம் தாய் மொழி தமிழாக உள்ள பட்சத்தில் நம் மொழி பேசுகின்ற மக்கள் கைக்கு எட்டுகின்ற தூரத்தில் அவர்களின் சொந்த மண்ணிற்குப் போராடும் அவல நிலைக்குக்குரல் கொடுக்க ஓர் சாரசரித் தமிழ்ப் பெண்ணாக கனிமொழி இருப்பதும், பத்திரிக்கைகளில் பேசுவதும், போராட்டத்தில் பங்கு கொள்வதும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்?

சமீபத்தில் “செஞ்சோலைச் சிறார்கள்" தீக்கு இறையான பொழுது ஒட்டு மொத்தத் தமிழர்களும் வேதனைக் கண்ணீர் வடித்த பொழுது அதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கனிமொழி உடனே தமிழ் உணர்வாளர்கள், பற்றாளர்கள் பலரைத் தொலைபேசியிலும் நேரிலும் கூப்பிட்டு உண்ணாவிரதம் இருந்ததும், அதனை ஆதரித்து கொஞ்சம் கூட பயம் இல்லாமலும், கூச்சம் இல்லாமலும் ஈழ மக்கள் விடுதலை மிக முக்கியம் என்றும், நம்மைப் போல அவர்களும் தமிழர்கள் தானே என்று சொன்னதும் பச்சை தமிழச்சியாக கனிமொழி மனதளவில் உயர்ந்து காணபடுகிறார். ஒர் பெண் அதுவும் நடப்பு முதல்வரின் வாரிசு தனி ஆளாகநடு ரோட்டில் ஈழ மக்களுக்கு குரல் கொடுத்த விசயம் போற்றுதலுக்கு உரியது.

எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு வாரங்கள் முன்பு சென்னையில் “சங்கமம்” என்ற விழா எடுத்தது எத்தனை பாராட்டினாலும் தகும். கடைக் கோடி தமிழனும் பாராட்டும் விதமாக, சராசரி தமிழனின் பல இசை வடிவங்களை நகரவாழ் மக்களுக்கு எளிமையான முறையில் காட்டிய விதம் மனதாரப் பாராட்டப்பட வேண்டிய விசயம். சராசரி தமிழனின் அக்கறை இல்லாத மேல் தட்டு மக்களின் டிசம்பர் சீசனைப் பற்றி பாராட்டி எழுதும் பத்திரிக்கைகள் இந்த “சங்கமத்தை” எப்படிப் பாராட்டும்? அதனைத் தன்னம் தனி ஆளாக சளைக்காமல் கனிமொழி பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுத்த விதம் உண்மையில் மிகத் தைரியமான விசயம். இந்தத் துணிவு நிச்சயம் நம் நாட்டிற்குத் தேவை. இதுவே ஓர் உயந்த சாதியில் பிறந்த பெண் செய்து இருந்தால் எத்தனைப் பத்திரிக்கைகள் பாராட்டி, தலையில் தூக்கி வைத்து பேட்டி எடுத்து பக்கம் பக்கமாக போட்டு இருக்கும்?

இப்படிப்பட்ட கனிமொழி ஏன் அரசியலுக்கு வரக் கூடாது. கலைஞரின் வாரிசு என்பதனாலேயே எப்படி அவரை ஒதுக்க முடியும்?- ஓர் பெண்ணிய வாதியாக- ஒர் கடவுள் மறுப்பாளராக- ஓர் தீவிர தமிழ் இலக்கிய ஆர்வலராக- ஈழ மக்கள் விடுதலையை விரும்புபவராக- ஓர் தமிழ்க் கவிஞராக- நாட்டுப் புற கலைகள் மீது ஈடுபாடு உள்ளவாராக- ஓர் எழுத்தாளராக- ஓர் பெரியார்வாதியாகஇவ்வளவு சமுதாயம் சார்ந்து இருக்கும் குணங்கள் கொண்ட ஓர் பெண் ஏன் அரசியலில் ஈடுபடக் கூடாது? திமுக என்ற பேரியக்கம் லட்சகணக்கான தொண்டர்களைக் கொண்டது. பெரியாருக்குப் பிறகு, அண்ணாவிற்குப் பிறகு, கலைஞர் தலைமையில் இந்த இயக்கம் சென்று கொண்டு இருக்கிறது. அந்த இயக்கத்திற்கு புத்துணர்ச்சியாக, பெண் முன்னேற்றத்தை முன் எடுத்துச் செல்லும் விதமாக, பெண் உரிமைகளை மீட்டு எடுக்க கனிமொழி வந்தால் தவறு இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

நன்றிமயிலாடுதுறை சிவா...

No comments: