Wednesday, January 17, 2007

வருடத்திற்கு 45,000 குழந்தைகள் காணாமல் போகின்றனர் - மனித உரிமை கழகம்.

தேசிய மனித உரிமை கழகத்தின் சமீபத்திய அறிக்கை ஒவ்வொரு வருடமும் நாட்டில் 45,000 குழந்தைகள் காணாமல் போவதாக தெரிவிக்கிறது. இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் சம்பந்தமான 10 சதவீதம் வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்படுகின்றதாகவும், காவல்துறை விசாரணையோ, பத்திரிக்கைகளின் வழி செய்தியோ இல்லாததால் காணாமல் போகும் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் கண்டுபிடிக்கப்படுவதே இல்லை எனவும் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட அரசு சாராத அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.

சமீபபத்தில் 38 குழந்தைகளின் உடல்களை கண்டெடுத்த நோய்டா சம்பவம் இவற்றில் ஒரு உதாரணம் மட்டுமே. இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகளில் அதிகமானோர் குழந்தைகளை கடத்தும் மாஃபியா கும்பல்களின் நோக்கங்களுக்கு இரையாகின்றனர். ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஆந்திரபிரதேசம், பீஹார், ஒரிஸா ஆகிய மாநிலங்களிலிருந்து அதிகம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இவர்களில் அதிகம் பேர் தலித்-ஆதிவாசி-மற்றும் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்தவர்களாகவர்கள்.

காணாமல் போகும் குழந்தைகளை, பணம் சம்பாதிக்கும் நோக்கங்களுக்காக உடலுறுப்புக்கள் விற்பனை, பாலியல் தொழில், பிச்சையெடுத்தல் போன்றவற்றில் கடத்தல்காரர்கள் ஈடுபடுத்தப்படுத்துகின்றனர். தற்போது நாட்டில் மிகுந்த பரபரப்பான நோய்டா சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கடத்திய குழந்தைகளை பாலியல் கொடுமை செய்து கொன்று, உடலுறுப்புக்களை எடுத்து விற்றதோடல்லாமல் கூடுதலாக நரமாமிசம் உண்டதாக வரும் செய்திகள் நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. வெளிப்பட்ட இச்சம்பவத்திற்குப் பின்னால் வெளிவராத எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளன என்பது யோசிக்க வேண்டிய விஷயமாகும். தேசிய மனித உரிமைக் கழகம் வெளியிட்டுள்ள காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது இத்தகைய அச்சம் அதிகரிக்கவே செய்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான அக்கிரமங்களையும், கடத்தல்களையும் சாதாரணமாக காவல்துறை தகுந்த முக்கியத்துவம் கொடுத்து விசாரிப்பது இல்லை என பரவலாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை களையும் விதமாக குழந்தைகள் காணாமல் போகும் ஒவ்வொரு வழக்கும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என சமீபத்தில் மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரபிரதேச அரசுக்கள் தங்களின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளன. குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க சட்டத்தில் தகுந்த மாற்றங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய பெண்கள்-குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சௌத்ரியும் அறிவித்துள்ளார்.

No comments: