Tuesday, January 16, 2007

திமுகவின் வெகுஜன அரசியலுக்கான மற்றுமொரு உத்தி

தமிழில் பெயரிட்டுள்ள பழைய திரைப்படங்களுக்கும் கேளிக்கை வரிவிலக்கு அளித்து மீண்டும் ‘தமிழ்ச் சேவை’யை நிறைவேற்றி இருக்கிறது தமிழகஅரசு. இது போன்ற சலுகைகளுக்கும் மக்களின் வாழ்க்கைக்குமுள்ள முரண்பாடுகளை விமர்சகர்களும், பத்திரிகைகள் சிலவும் சிறுபான்மையாக எழுப்பிக் கொண்டிருக்கையில், மறுபுறமாக சினிமாத் துறையினர் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழாவை ‘அரங்கேற்றி’ பிரம்மாண்டமான முறையில் ‘காட்சியின்பம்’ வழங்கிக் கொண்டிருக்கின்றனர். பெயர்களும் ஆட்களும் மட்டுமே மாறியிருக்க அடுத்தடுத்த முதல்வர்களுக்கு ஒரே மாதிரியாக பாராட்டு விழாவை நடத்தி வருவதை (தனது அரசியல் தேவை கருதி) ஜெயா டி.வி.யும் ஒளிபரப்ப சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நடிக்கத் தெரிந்தவர்கள் திரைப்படத்துறையினர் என்பதை பார்க்க முடிந்தது. இன்றைக்கு தமிழகத்தில் அக்கறைப்பட வேண்டிய விசயமாக சினிமாவை ஆக்கிவிட்ட சன், ஜெயா தொலைக்காட்சிகள் சினிமாவையே நிலவும் உண்மையாக ஆக்கிவிட்ட காலம் இது. திராவிட இயக்கத்தின் ஒரே தொடர்ச்சியாக தன்னை அறிவித்துக் கொள்ளும் தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியும் ‘ஆயுதபூஜை” அன்று சினிமாத் துறையினர் ‘குறை’களை சன் டி.வி. மூலம் கேட்டுக்கொண்டிருந்தார்.

பெரியாரிடமிருந்து பிரிந்து அதிகாரத் தளங்களை நோக்கி பயணப்பட தி.மு.க. அனைத்து சாதியினர்க்கும் தமிழர் எனும் அடையாளம் தருவதன் மூலம் சாதி கடந்த அணி திரட்சியை சாத்தியமாக்கியது. பண்பாட்டு அடையாளங்களும் பிரதானமான மொழியை அதன் ஆற்றல் கருதி உணர்வுப் பூர்வமான கருவியாக மாற்றிய போது அக்கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது. எளிதில் உணர்ச்சியை பிடித்திழுக்கும் போக்கில் கையாண்டதாலேயே தமிழை அறிவியல் தன்மையோடும், மக்கள் தேவைக்கேற்பவும் சிந்திக்க அவ்வியக்கம் மறந்தது. என்றாலும் தமிழை குறியீட்டுக் கருவியாக இன்றுவரை அவ்வியக்கம் தனக்காக கையாண்டு வருகிறது. அப்படியான குறியீட்டுத் தேவைக்காகவே தமிழ்த் திரைப்படங்களுக்கு சலுகைகளை அவ்வியக்கம் தமிழின் பெயரால் கோடிக் கணக்கில் இன்றைக்கு வாரி வழங்கியுள்ளது. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டும் தமிழ் நூல்கள் பற்றிய துறைவாரியான பட்டியல்களோ, அறிவியல் மயமாக்கப்பட்ட ஆய்வுகளோ, கணினி வழியிலான எளிய நடைமுறைகளோ இன்றுவரை கொணரப்படவில்லை. கல்வெட்டுகளும், செப்பேடுகளும் ஏடுகளும் அச்சுக்கு வராமல் ஏராளமாய் கிடக்கின்றன. அவைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளன. தமிழ் இலக்கிய, இலக்கண மற்றும் வரலாற்றுத் தளங்களில் விடை கிடைக்காத கேள்விகளை கிடைத்துள்ள பல்வேறு தரவுகளின் அடிப்படையில் சரியாக்கும் போக்குகள் ஏதுமில்லை. கலைப்பொருட்களும், பாரம்பரிய நினைவுச்சின்னங்களும் பாதுகாப்பின்றி அழியும் நிலைகளை எட்டி வருகின்றன.

இவை தவிர தமிழ் நீதிமன்ற மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் மாறிட உளப்பூர்வமான அக்கறையோடு திராவிட இயக்கங்கள் செயற்படவில்லை. அதற்கான சட்டப்பூர்வமான ஆணைகளை இவைகள் ஆட்சியிலிருக்கும் காலங்களில் பிறப்பிக்க வில்லை. தமிழ் ஆட்சிமொழியாவதற்கு தடையாய் நிற்கும் மைய அரசின் போக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்த்து போராடுவதும், நிர்பந்திப்பதும் இல்லாமல் தமிழை அதிகாரத்திற்கான கருவியாகப் பயன்படுத்தின திராவிட இயக்கங்கள் என்று இக்கட்டுரை வாதிடுகிறது. தமிழுக்கு நவீனத் தன்மையை அளிப்பதற்கு மாறாக ‘காட்டு மிராண்டித் தமிழை’ நிராகரிக்கச் சொன்னார் பெரியார். தமிழை கொண்டாடியே நவீனத்தன்மையை அளிக்காமல் போனது பெரியாருக்குப் பிந்தைய திராவிட இயக்கம். ஏற்றம் பெறுவதற்கு இப்படியான வழிகளை கைவிட்டுவிட்டு வெறும் சினிமாத் தலைப்பில் தமிழை வாழவைக்க நினைக்கிறார் கருணாநிதி. உண்மையில் தமிழின் பெயரால் திரைப்படத் துறைக்கு அளித்துள்ள இச்சலுகைகளுக்கும், தி.மு.க. வளர்த்து வந்துள்ள தமிழ் எனும் குறியீட்டு அரசியலுக் கும் தொடர்புண்டு. தனக்கான தமிழ் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளவும், நிகழ்கால அரசியலை எதிர்கொள்ளவுமே இந்தச் சலுகையை கருணாநிதி அறிவித்துள்ளார் என்று சொல்ல நியாயமுண்டு.

சினிமாத்துறையினரை தொடர்ந்து தனக்கென தக்கவைத்து அதன் மூலம் வெகுஜனக் கவர்ச்சியை உருவாக்கிக் கொள்ள முனைவது கருணாநிதியின் திட்டங்களுள் ஒன்று. தி.மு.க.வின் அரசியல் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு என்று இலவச வாக்குறுதிகளையும், திரைப்படம் போன்ற கவர்ச்சி வாதங்களையும் குறிப்பிடலாம். இலவச வாக்குறுதி எனும் அரசியல் மூலம் பல தரப்பு மக்களையும் தம்பக்கம் ஈர்த்து அப்போக்கை வெகுஜனப்படுத்தினார் அண்ணாதுறை. அதே வேளையில் எம்.ஜி.ஆர் போன்ற சினிமா நட்சத்திரங்களையும் பயன்படுத்தி கொள்கைகளை பின்னுக்குத் தள்ளி விட்ட Popular Politics மேலெழுந்தது. எம்.ஜி.ஆருக்கு உருவான இந்தக் கவர்ச்சி வாதம் பின்னர் தி.மு.க.விற்கு எதிராக எழுந்து எல்லாவித மாற்று இயக்கங்களையும் மறைத்து 15 ஆண்டு காலம் தமிழகம் வித்தியாசமான போக்கில் பயணித்தது. எம்.ஜி.ஆரின் சினிமா கவர்ச்சியோடு இலவச அறிவிப்புகளும் சேர்ந்து அவரை ஒப்பற்ற நாயகனாக்கின. இந்த இரண்டு போக்குகளும் மாறி மாறி இப்போது இலவச கலர் டி.வி. இலவச நிலம் வரை வந்து நின்றுள்ளன. எனவே இலவச அறிவிப்புகளுக்கும், சினிமாக் கவர்ச்சிக்கும் பெரியாருக்குப் பிந்தைய திராவிட இயக்க வளர்ச்சிக்கும் தொடர்புண்டு. உண்மையில் இப்போக்குகள் வெகுஜனத் தன்மை கொண்டவை. வெகுஜனப் போக்கில் எவ்வித மாற்றத்தையும் செய்யாமல், அம்மாற்றத்திற்கான தியாகத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தாமல் வெகுஜனப் போக்கையே தனக்குரிய அரசியலாக மாற்றிய தன்மைதான் இது. இதுதான் இன்றைய பெரும்பாலான கட்சிகளின் போக்காக உள்ளது. வெகு மக்களிடம் புழங்கி வரும் சாதி, மதம், மூடநம்பிக்கை, தனியுடைமை போன்ற போக்குகளை எதிர்த்து அதன் மூலம் எதிர்ப்பை சம்பாதிக்காமல், அப்போக்குகளை அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டு வெகுஜன உளவியலோடு பொருந்திப் போகும் இயக்கங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன.

வெகுமக்களின் உளவியலோடு பொருந்திப்போகும் இப்போக்கிற்கு இன்றைய திராவிட இயக்கங்களும் விதிவிலக்கல்ல. தி.மு.க.வின் தோற்றத்திலேயே இதற்கான தொடக்கங்களை காண முடியும். வெகுமக்களிடம் பரவலாவதற்கு ஏதுவாக பெரியார் வழிப்பட்ட கடவுள் மறுப்பை முதலில் அவ்வியக்கம் கைவிட்டது முதல் இதனைப் பார்க்கலாம். தொடர்ந்து சாதிவாரியாக வேட்பாளர் தேர்வு, கட்சிப் பொறுப்பு நியமனம், அறிக்கைகள் போன்றவற்றை பார்க்கிறோம். மூட நம்பிக்கையினையும், சாதி ஏற்றத் தாழ்வினையும் மக்களிடம் பிரச்சாரமாக்குகிறது என்பதாலேயே புராணங்கள், பக்தி கதைகள் ஆகியவற்றிற்கு எதிராக அயோத்திதாசர் முதல் பெரியார் வரை போராடினர். இயக்கங்களை உருவாக்கினர். ஆனால் பெரியார் வழி வந்த தி.மு.க.வின் சன் டி.வி.க்கு இணையாக வேறொரு கேடுகெட்ட பிரச்சாரக் கருவியை இன்றைக்கு எடுத்துக் காட்ட முடியாது. அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள், நிகழ்ச்சிகள் என யாவும் பெண் அடிமையை, மதவாத மனப்பான்மையை நிலவும் உண்மையாக்கி, அவைகளை நிலைத்து வாழச் செய்கின்றன. ஞாயிற்றுக்கிழமையில் ஒளிப்பரப்பாகும் கல்யாண மாலை எனும் நிகழ்ச்சி சாதி, மதம் பார்த்து மணமக்களை தேர்வு செய்வதை ஒளிபரப்புகிறது. எல்லா முக்கியத் தினங்களையும் சினிமாக்காரர்களின் தினமாக்கிய சன், ஜெயா, ராஜ் போன்ற தொலைக்காட்சிகளையும் நிறுத்தினால் / மாற்றினால் ஒழிய இச்சமூகத்தில் சிறிதளவு மாற்றத்திற்கும் வழியே இருக்காது என்று தோன்றுகிறது. இது போன்றப் பிரச்சனைகளை இங்குள்ள சமூகப் பிரச்சனைகளோடு பொருத்திப் பேசாமல் ‘டிவி நிகழ்ச்சிக்காக’ காத்துக் கிடக்கும் நம் அறிவு ஜீவிகளின் நிலைமையை என்னென்பது?

அன்மையில் கருணாநிதி குடும்பத்திடமிருந்து வெளியான புதிய தினகரன் நாளிதழும் ஆன்மீகம், சோதிடம் என்பதான இதழ்களை வெளியிடுகிறது. ஏற்கனவே வெளியாகிக் கொண்டிருக்கும் குங்குமம் இதழை பிற வெகுஜன இதழ்களோடு கூட ஒப்பிட முடியாது. இவையெல்லாம் வெகுஜன மனப்பான்மையோடு ஒத்துச் சென்று தங்களை ஈடேற்றிக் கொள்ளும் போக்குதான். இதே போலத்தான் இன்றைக்கு சினிமாவையும், சினிமாத் துறையையும் கருணாநிதி பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். சினிமாத்துறைக்கு சலுகைகள் வழங்குவதும், சினிமாக்காரர்களை கட்சிகள் தேடிப்பிடித்து சேர்ப்பதும், பிரச்சாரங்களில் பயன் படுத்துவதும் இந்த வெகுஜன மனப்பான்மைக்கும், கவர்ச்சிவாதத்திற்குமான தொடர்புதான். இந்தப் பின்னணியில் வைத்து நோக்கும் பொழுது சினிமாக்காரர்களை தக்கவைத்துக் கொள்ளவும், அவர்கள் விழாவெடுத்து பாராட்டுவதை மக்களிடம் பிரச்சாமாக்கிக் கொள்ளவும் தான் கருணாநிதி இப்போக்கை மேற்கொண்டார் என்பது எளிதில் விளங்கும். ஆனால் இதில் தமிழுக்கு என்ன இடம்? என்று கேள்வி எழலாம். இங்குதான் கருணாநிதியின் நிகழ்கால அரசியல் சூட்சுமம் இருக்கிறது.

தமிழ், தமிழன் எனும் அடையாளங்களை தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் கேடயமாக அவ்வப்போது உச்சரிக்கும் கருணாநிதி தன்மீதான, தனக்கேயான தமிழ் எனும் குறியீட்டு ரீதியான அரசியலை எந்த இடத்திலும் இழக்க விரும்புவதில்லை. அவருக் கேயான தமிழ் எனும் ‘தனியுடைமையான’ அடையாளத்தைக் கேள்வி எழுப்பும் எந்தச் சக்திகளையும் அவர் வெவ்வேறு பெயர்களில் எதிர் கொள்ளாமல் போனதுமில்லை. திருமா வளவனும் ராமதாசும் தொடங்கிய தமிழ் பாதுகாப்பு இயக்கம் மற்றெவற்றையும் விட சினிமாவில் தமிழ் பாதுகாப்பு பற்றியே அதிக அழுத்தம் தந்தது. இதே காலத்தில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் நடத்திய ‘மூன்றாவது’ மொழிப் போராட்ட மாநாடு போன்றவைகளால் திராவிட இயக்க ஆட்சியில் தமிழுக்குச் செய்யப்படாத முன்னேற்றங்கள் பற்றி விமர்சிக்கப்பட்டன. இதன் வாயிலாக தமிழர் எனும் அடையாளத்தில் தங்களை அத்தலைவர்கள் பொருத்திக் கொள்ள முயன்றனர். கல்வி, மொழி, ஆட்சி மொழி ஆகியவற்றில் தமிழுக்கான இடத்தை வலியுறுத்துவதற்கும் மேலாக சினிமாவில் தலைப்பு மாற்றத்திற்கு அவர்கள் தந்த அழுத்தம் அவர்களுக்கு சினிமாக்காரர்களிடம் பரவலான எதிர்ப்பை உண்டாக்கின. தமிழ் பாதுகாப்பு இயக்கத்திலிருந்த தலைவர்களின் சாதியத் திரட்சி தேர்தலில் ஓட்டாக மாறும்போது தி.மு.க.வின் இருப்பு என்னவாகும் என்பதை அவர் உணரத் தவறவில்லை. தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவர்களின் கூட்டணி அப்போது அரசியல் கூட்டணியாக மாறும் என்பதை விமர்சகர்கள் சுட்டிக் காட்டியுள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பெயர் சூட்ட உரிமையோடு வலியுறுத்தாமல் தாய்ப்பாலுக்கு பணம் தரவேண்டியதைப் போல கேளிக்கை வரியை நீக்கியுள்ளார் முதல்வர். இப்போது தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் திட்டத்தையே இல்லாமல் ஆக்கிவிட்ட பின்பு தமிழ் பாதுகாப்புக்கு இயக்கம் எதற்கு? இது முறையாக திட்டமிடாமலும், பரவலான வேலைத் திட்டம் இல்லாமலும் இயக்கமான தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் தோல்விதான். அதோடு எதிர்காலத்தில் ஸ்டாலின் எனும் தி.மு.க.வின் தனிப்பெரும் தலைமைக்கு மாற்றாக உருவாகிவரும் ராமதாஸ், திருமாவளவன், விஜயகாந்த் ஆகியோர்களின் வளர்ச்சிக்கு எதிராக வாக்கு வங்கி அரசியலின் ஒரு பகுதிதான் இந்தச் சலுகை அறிவிப்பு. அதிலும் குறிப்பாக விஜயகாந்த் எனும் சினிமாத்துறை சார்ந்த சவாலை அத்துறை மூலமே எதிர்கொள்ள விழையும் கவர்ச்சிவாத அரசியலின் நோக்கமாகும்.

நல்ல சினிமா எனும் நோக்கத்தை சென்றடைவதிலோ, சினிமாவின் நடிகர்கள் சம்பந்தப்படாமல் தொழிலாளர்கள் நோக்கில் யோசிப்பதிலோ அக்கறை காட்டாத அரசியல் தலை வர்கள் பெரும்பிம்பங்களை எதிர்ப்பதாக / ஆதரிப்பதாக எண்ணிக் கொண்டு அப்பிம்பங்களுக்கு பின்னால் மறைந்து கிடக்கும் பேருண்மைகளை வெளிக்கொணராத விதத்தில் பெரும் பிம்ப அரசியலையே பிரதி பலிப்பவர்களாக மாறிப் போய்விட் டார்கள். சினிமா மூலமான கவர்ச்சி வாதம் எழுச்சி பெற்ற போதெல்லாம் சாதி எதிர்ப்பு அரசியலும், இடது சாரி அரசியலும் முனை மழுங்கிப் போயிருக்கிறது. ஆனால் இன்றைக்கு ஒடுக்கப்பட்ட சமூகப் பிரதிநிதிகளும், இடதுசாரி பிரதிநிதிகளும் தமிழக மக்கள் சினிமாத்துறைக்கான சலுகைக்கு எதிராக வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தாதது கூட்டணி அரசியலின் நிர்பந்தமா? என்பதே நம் கேள்வி.

நன்றி: கீற்று இணையம்

No comments: