Tuesday, January 23, 2007

பயங்கரவாதத்தை எதிர்க்கும் பயங்கரவாதிகள்

பயங்கரவாதத்தை எதிர்க்கும் பயங்கரவாதிகள்
ஆனாரூனா

பயங்கரவாத எதிர்ப்பு என்கிற பெயரில் பயங்கர வாதத்துக்குப் பால் வார்ப்பது, தேசபக்தி என்கிற பெயரால் தேச நலனுக்கு எதிரான காரியங்களைத் தூண்டி விடுவது,பக்தியின் பெயரால் வழிபாட்டுத் தலங்களை நொறுக்குவது... போன்ற கேவலமான சாணக்கியத் தனங்களை மிகச் சாமர்த்தியமாகவே செய்து வருகின்றன பா.ஜ.க.வும் அதன் பரிவாரங்களும்.சிந்திக்க வாய்ப்பில்லாத அவசரகதியிலான பாமரத்தனமான உணர்ச்சிகளின் மீது பா.ஜ.க. அரசியல் நடத்தி வருகிறது.

2001 - டிசம்பர் 13 இல் இந்திய நாடாளுமன்றத் தின்மீது நடந்த தாக்குதலின் போது பாதுகாப்புப் படையினர் சிலரும் இறந்தார்கள். இறந்த படைவீரர்களுக்கு சம்பிரதாயமான விருதுகள் வழங்கப்பட்டன.ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்த விருதுகளை இறந்துபட்ட படைவீரர்களின் குடும்பத்தினர் அணிவகுத்துச் சென்று குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரியிடம் திருப்பித்தர ஏற்பாடு செய்யப்பட்டு, அப்படியே நடந்திருக்கிறது.விருதுகளைத் திருப்பித் தருவதற்கு அவர்கள் சார்பில் சொல்லப்படும் விளக்கம்: ``நாடாளுமன்றத் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக விளங்கிய முகமது அப்சலை உடனே தூக்கிலிட வேண்டும். காலம் கடத்துவது இறந்த வீரர்களை அவமதிப்பதாகும்.’’

உண்மையில் மனிதர்கள் - குறிப்பாகப் பெண்கள் யாரும் இம்மாதிரி நடந்து கொள்ளவே மாட்டார்கள்.``அப்சலைத் தூக்கிலிடுவதால் இறந்த என் கணவர் திரும்ப வந்து விடுவாரா?’’ என்றுதான் எந்தப் பெண்ணும் சொல்வார்.

சான்றாக இதோ, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருக்கிறாரே!

இதுவரை மரணமடைந்த படைவீரர்களின் மனைவிமார் எல்லோரும் இதே கோரிக்கைகளுடன் பதக்கங்களைத் திரும்பத் தருமாறு ஏற்பாடு செய்வார்களா?

சீனாவை அழிக்காமல், பாகிஸ்தானை அழிக்காமல் எங்கள் கணவருக்கு விருது அளிப்பதும், அதை நாங்கள் ஏற்பதும், இறந்துபோன வீரர்களை அவமதிப்பதாகும் என்று சொல்ல வைக்கலாமே!

இராணுவ, காவல்துறை நடவடிக்கையின்போது வீரர்கள் சிலர் இறப்பதும் இயல்பானதே!

இறந்த வீரர்களுக்கு விருது வழங்குவது உயிரோடு இருக்கும் வீரர்கள் சோர்ந்து விடாமல் இருப்பதற்கான ஓர் ஆறுதல் நடவடிக்கை. அவ்வாறு தரப்படும் விருதுகளை இப்போது திரும்பத் தருவது தான் உண்மையில் படை வீரர்களையும், அரசையும் அவமதிப்பதாகும்.விருதுகளைத் திரும்பத் தருகிறவர்கள், விருது தரப்பட்ட அன்றே, `நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் தூக்கிலிடப்படும்வரை விருதுகளை வாங்க மாட்டோம்’ என்று ஏன் சொல்ல வில்லை?

மான உணர்ச்சி இவ்வளவு தாமதமாக வருவது ஏன் என்று இறந்துபோன வீரர்களின் குடும்பத்தாரைப் பார்த்துக் கேட்கும் அளவுக்கு அவர்களைச் சிறுமைப்படுத்தியது பா.ஜ.க. வும் அதன் பரிவாரங்களும் தான்.நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் உண்மையான குற்றவாளி முகமது அப்சல் மாத்திரம்தானா?அப்சல் போன்ற பல இஸ்லாமிய இளைஞர்களை வம்புக்கிழுத்ததில் பா.ஜ.க. வுக்கு, குறிப்பாக அத்வானிக்குப் பங்கில்லையா?

விடுதலைப் போராட்டம் என்கிற முறையில் ஷேக் அப்துல்லா காலம்தொட்டு காஷ்மீருக்குள் நடந்து கொண்டிருந்த போராட்டங்களை குறிக்கோளற்ற கொலை முயற்சியாக மாற்றி இந்தியா முழுவதிலும் இழுத்து விட்டது யார்?

பாபர் மசூதியை இடித்ததில் என்ன நடந்தது?

இஸ்லாமியர்களுக்கு ஒரு வழிபாட்டுத்தலம் குறைந்தது.

இந்தியாவுக்கு நிம்மதியே தொலைந்தது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது என்று அத்வானி அடிக்கடி ஆவேசப்படுகிறார். உண்மைதான். அத்வானி கும்பல்மீது இன்னும் நடவடிக்கை இல்லாதது ஏன்?

No comments: