Tuesday, January 23, 2007

தமிழகத்தின் தவிப்பும், கேரளத்தின் வீம்பும்!

முல்லை பெரியாறு அணை
பஞ்சத்தால் வாடும் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்கள் தமிழகத்தின் தவிப்பும், கேரளத்தின் வீம்பும்!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஏராளமான தண்ணீர் வெளியேறி ரோடு, காடு, மேடு என எல்லாவற்றையும் சேதப்படுத்தி கடலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. அதைத் தேக்கி வைக்க வழி தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது தமிழக அரசு. நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் போதிய நிதி ஒதுக்காத நிலையிலும், ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குயிக் தமது சொந்த பணத்தைப் போட்டு எந்த நோக்கத்துக்காக இந்த அணையைக் கட்டி முடித்தாரோ அந்த நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தோற்கடிக்கப்பட்டு வருகிறது.

ஆம், பஞ்சத்தால் வாடும் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்காக இந்த அணை கட்டப்பட்டது. ஆனால் இன்று கேரள அரசின் பிற்போக்கான நிலையால் மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அணை கட்டி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் பலவீனமாக உள்ளது; அதிக அளவு நீரைத் தேக்கி வைக்கும் நிலையில் உடைப்பு ஏற்பட்டு கேரளத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடும்; எனவே அணையைப் பலப்படுத்தும் பணி தொடங்கி நிறைவடையும் வரை 152 அடி நீர் மட்டத்தை 136 அடியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று 1979-ல் கேரள அரசு யோசனை கூறியது. கேரள அரசின் கூற்றில் முழு உண்மை இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக அணையைப் பலப்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி அணை தற்போது பலப்படுத்தப்பட்டு புது அணை போல் உள்ளது. இதற்கு மத்திய நீர்வள ஆணைய நிபுணர்களே சான்றளித்துள்ளனர்.

ஆனால் அணையின் நீர் அளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது கேரள அரசு. 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்கலாம் என கடந்த பிப்ரவரி 27-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் சட்டை செய்யவில்லை. 1979-ம் ஆண்டு நீர் மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டதில் இருந்து அணையின் கொள்ளளவு 5 டிஎம்சி குறைந்தது. இதனால் விவசாய உற்பத்தி இழப்பு மற்றும் மின் உற்பத்தி இழப்பால் தமிழகத்துக்கு ஆண்டு தோறும் சுமார் ரூ. 150 கோடி நஷ்டம் ஏற்படுகிறது என்கிறார் இந்த அணையை அண்மையில் பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் பிரிவு மாநிலப் பொதுச் செயலாளர் துரை மாணிக்கம். அட, 152 அடி வேண்டாம்; நீதிமன்றத் தீர்ப்புப்படி 142 அடி கூட தேக்கி வைக்க அனுமதி கிடையாது என்று சண்டித்தனம் செய்கிறது கேரளம். உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும் கூட 'உன்னால் முடிந்ததைப் பார். என்னை ஒன்றும் செய்ய முடியாது' என்ற கேரள அரசின் அடாவடிப் போக்கு நீதிமன்றத் தீர்ப்பையும் சட்டத்தின் மாண்பையும் அவமதிப்பதாக உள்ளது.

சர்வ வல்லமை கொண்ட மத்திய அரசோ கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய கூட்டாட்சி தத்துவம் இங்கு கேலிக்கூத்தாக்கப்பட்டு வருகிறது. இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் காவிரிப் பிரச்சினையிலும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் சரி ஓட்டு அரசியலை மனதில் கொண்டு, மத்திய அரசு நியாயத்தின் பக்கம் நின்று உறுதியான முடிவு எடுக்கத் தவறிவிட்டது. இந்த நிலையில், தில்லியில் வரும் 29-ம் தேதி மத்திய நீர்வளத் துறை அமைச்சர் முன்னிலையில் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்ய பேச்சுவார்த்தையை ஓர் ஆயுதமாக கேரள அரசு பயன்படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த மழை காலத்துக்குள் பேச்சுவார்த்தை முடிந்து நீரைக் கூடுதலாகத் தேக்கி வைக்க வாய்ப்பில்லை.

ஆனால் விவசாயிகளின் நலனை மனதில் கொண்டு விரைவாக தீர்வு ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் இன்னும் முனைப்பாக இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையிலும் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற நிலைதான் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருவதால் காவிரிப் பிரச்சினையை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. கர்நாடகத்தில் மழை கொட்டோ கொட்டோ என கொட்டியதால் வெள்ள நீரை தமிழகத்துக்குத் திறந்துவிட்டது கர்நாடகம்.

இப்போது நீர் தேவையில்லை என்று நாம் சும்மா இருந்துவிட்டு பற்றாக்குறை வரும்போது கூச்சல் போட்டால் உடனே கிடைத்துவிடுமா என்ன? மத்திய ஆட்சியில் தமிழக ஆளும் கட்சி செல்வாக்குடன் இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி காவிரிப் பிரச்சினைக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கும் சுமுகத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒருபுறம் என்றாலும் பாசனத்துக்குப் போதிய நீர் கிடைக்காத நிலையில் கிடைக்கும் நீரைத் தேக்கி வைத்து சிக்கனமாகப் பயன்படுத்த நமது பாசன முறை-பயிரிடும் முறை ஆகியவற்றில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இதற்கிடையே அணையைப் பார்வையிடச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக கேரளத்தில் ஒரு சாரார் ஆர்ப்பாட்டம் செய்ததோடு மோசமான வார்த்தைகளில் இழிவுபடுத்தியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இத்தகைய போக்கை கேரள அரசு தொடர்ந்து அனுமதித்தால் அது இரு மாநில மக்களிடையேயான உறவை கடுமையாகப் பாதிக்கும். 1850-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் குறிப்பாக ஒருங்கிணைந்த ராமநாதபுர மாவட்டத்தில் கடும் பஞ்சம் நிலவியது. குடும்பம் குடும்பமாக பட்டினியால் மடிந்தனர். இந்த நிலையில் நீர் வள ஆதாரங்களைக் கண்டறிந்து நீர்ப்பாசனத்தை பெருக்கி வேளாண் உற்பத்தியை அதிகரிக்க ஆங்கிலேய அரசு திட்டமிட்டது. முல்லை ஆற்றையும் பெரியாற்றையும் இணைத்து அணை கட்ட திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக 1886-ம் ஆண்டு மதராஸ் ராஜ்ய நிர்வாகத்துக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே 999 ஆண்டு கால ஒப்பந்தம் ஏற்படுத்தபட்டது. அதன்படி 155 அடி உயரமும் 15.5. டிஎம்சி கொள்ளவும் கொண்ட முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டது.

அணை கட்டுமானப் பணிக்கு ஒரு கட்டத்தில் போதிய நிதியை ஆங்கிலேய அரசு வழங்காத நிலையில் அணை கட்டுமானப் பணிக்குப் பொறுப்பேற்றிருந்த ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குயிக் லண்டனில் இருந்த தனது சொந்த சொத்தை விற்று அணையைக் கட்டி முடித்தார். இன்றளவும் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பென்னி குயிக்குக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக உள்ளனர். தங்கள் குழந்தைகளுக்கு அவர் பெயரை சூட்டுகின்றனர். சுற்றுச் சூழல் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு கருதி அணையில் 104 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை எடுக்கக் கூடாது என்ற உடன்பாட்டின் அடிப்படையில் தமிழகம் 104 அடிக்கு மேல் உள்ள தண்ணீரை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இந்த அணையால் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. அதோடு குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழக எல்லையிலிருந்து சில மைல் தொலைவில் இருக்கும் பெரியாறு அணையை கேட்டுப் பெற தமிழகத் தலைவர்கள் தவறிவிட்டனர்.

அதுதான் இத்தனைக்கும் காரணம். அன்று முல்லைப் பெரியாறு அணையைக் கேட்டு வாங்கியிருந்தால் இன்று கேரளத்தின் கருணை கிடைக்காதா என விவசாயிகள் ஏங்க வேண்டியதில்லை. கடந்த பல தலைமுறைகளாக அண்ணன் -தம்பி போல தமிழகமும், கேரளமும் மிகுந்த பாசத்துடன் பழகி வந்தன. ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இவ்விரு மாநிலங்களுக்கு இடையே எழுந்த பிரச்சினை அண்மைக் காலத்தில் விசுவரூபம் எடுத்து, இரு தரப்பினரையும் பகையாளிகளைப் போல பேச வைத்து விட்டது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையைப் போல, மேலும் பல பிரச்சினைகளில் தமிழகம் -கேரளம் இடையே 'இழுபறி'யான ரீதியில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அத்தகைய பிரச்சினைகளில் சிலவற்றை இங்கே காணலாம்.

20 முறை நடந்த பேச்சு வார்த்தை பரம்பிக்குளம் -ஆழியாறு ஒப்பந்தப் பிரச்சினை 1988-லிருந்து நீடித்து வருகிறது. 6.11.2004-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையைத் தொடருகின்றன. கஜினி முகமது தொடர்ந்து படை எடுத்து வந்து வெற்றி கண்டதைப் போல, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண இதுவரை சுமார் 20 முறை பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பாலாறு, ஆழியாறு ஆகியவற்றிலும், இவற்றில் இணையும் ஆறுகளிலும் உள்ள நீரை மின்சாரம் தயாரிக்கவும், பாசனம் -குடிநீருக்குப் பயன்படுத்தவும் வகை செய்யக் கூடிய ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கும் இடையே 29.5.1970-ல் கையெழுத்தானது. 9.11.1988-ல் இந்த ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

நதி திரும்பி வருமா? பாண்டியாறு -புன்னம்புழா நதிகள் தமிழகத்தில் நீலகிரி மலையின் உயர்ந்த சிகரங்களில் தோன்றி, கூடலூருக்கு 5 கி.மீ. மேற்கே இணைகின்றன. இந்த இணைப்புக்குக் கீழே இந்நதி புன்னம்புழா என்றே அழைக்கப்படுகிறது. கேரளத்தில் நீலாம்பூர் அருகே சாளியாற்றில் கலந்து, பேபூர் என்ற இடத்தில் அரபுக் கடலில் இந்நதி சங்கமம் ஆகிறது. இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் 14 டி.எம்.சி. நீரில் குறைந்தபட்சம் 7 டி.எம்.சி.யையாவது தன் பக்கம் திருப்பி விட தமிழகம் விரும்புகிறது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த ஆற்றிலிருந்து கிழக்கு நோக்கி தண்ணீரைத் திருப்ப கேரளத்தின் ஒப்புதலைப் பெறும் முயற்சியைத் தமிழகம் மேற்கொண்டுள்ளது. புன்னம்புழா திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை பவானி ஆற்றின் கிளை ஆறான மோயாற்றில் இணைத்து, கோவை மாவட்ட விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஆறுகள் இணையுமா? தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் மகாநதி -கோதாவரி -கிருஷ்ணா -பெண்ணாறு -காவிரி -வைப்பாறு நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து, அதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது.

கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது என்பது இத்திட்டத்தின் ஒரு பகுதி. பம்பா -அச்சன்கோயில் -வைப்பாறு இணைப்புத் திட்டம் என்பது கேரளத்தில் உள்ள பம்பா -அச்சன்கோயில் ஆறுகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது ஆகும். இத்திட்டத்தினால் சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், தென்காசி வட்டங்களில் உள்ள 91,400 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் என்பது சுமார் 2.5 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 22 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பம்பா -அச்சன்கோயில் ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரில் இது 20 சதவீதம் மட்டுமே. இத்திட்டத்தின் மூலம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். இத்திட்டத்தைக் கேரள அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

கண்ணகி கோயில் யாருக்குச் சொந்தம்?
கண்ணகி கோயில் தமிழக எல்லைக்குள் உள்ளது. ஆனால், கண்ணகியை வணங்கச் செல்லும் தமிழர்களை கேரள காவல் துறையினர் தாக்கும் நிலை உள்ளது. உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள வண்ணாத்திப்பாறைக் காடு தமிழகத்தைச் சேர்ந்தது. அங்கு தான் கண்ணகி கோயில் உள்ளது. ஆனால், அக்கோயில் தனது எல்லைக்குள் உள்ளதாக கேரள அரசு கூறி வருகிறது. அத்துடன், அங்கு வழிபாடு நடத்தச் செல்லும் தமிழர்களை கேரள அரசு தடுத்து, பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே உள்ள எல்லையின் நீளம் சுமார் 830 கி.மீ. தூரம். இதில் 203 கி.மீ. தூரத்துக்குத்தான் இரு மாநிலங்களின் அதிகாரிகளும் ஆய்வு செய்து, எல்லைகளை நிர்ணயித்துள்ளனர். கேரள அதிகாரிகள் சரியாக ஒத்துழைக்காததால், எஞ்சிய தூரத்துக்கு எல்லையை வரையறுக்க முடியாத நிலை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஆங்காங்கே தமிழகத்தின் பகுதிகளைத் தனது பகுதிகள் என்று கேரளம் கூறி போலியாக உரிமை கொண்டாடி வருகிறது.

No comments: