Sunday, January 21, 2007

சே குவேரா (டிசே தமிழன்)


சே குவேரா (டிசே தமிழன்)

El Che: Investigating a Legend என்ற ஆவணப்படத்தை முன்வைத்து-

சே குவேரா: அவரை நேசிப்பவர்களுக்கு மட்டுமல்ல அவரை எதிர்ப்பவர்களையும் தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் பாதித்தபடியே இருக்கின்றார். நியூயோர்க் ரைம்ஸ் குறிப்பிட்டதுமாதிரி, 'சே குவேரா அவர் வாழ்ந்த காலத்தில் அல்ல; அதற்கப்பாலான -30 வருடங்களின்பின்தான்- இன்னும் பிரபல்யமாக இருக்கின்றார்' என்ற குறிப்பு கவனிக்கத்தக்கது. கனடீய நெறியாள்கையாளரால் எடுக்கப்பட்ட El Che: Investigating a Legend என்ற இவ்வாவணப்படம், சே குவேராவின் குறிப்புக்களினூடாக மட்டுமின்றி அவரை நேரடியாகப் பரீட்சயமானவர்களின் குரல்களினூடாகவும் சே என்ற ஆளுமையைப் பதிவு செய்கின்றது.
இந்த ஆவணப்படம், சே இறந்த 30 வருடங்களின்பின், பொலிவியா அரசாங்கமும் உண்மையை ஏதோ ஒருவகையில் ஒப்புக்கொண்டு சேயைக் கொன்று புதைத்த இடத்தை அடையாளம் காட்டிய இடத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. சேயினது ஆரம்பக்குறிப்புக்களான மோட்டார் சைக்கிள் டயரிக்குறிப்புக்களிலிருந்து இப்படம் ஆரம்பித்தாலும், அந்தச் சம்பவங்களை விரைவாகக் கடந்து போகின்றது. ஏற்கனவே அந்தச் சம்பவங்கள் திரைப்படமாக்கப்பட்டதால் அப்படி நேர்ந்திருக்கலாம். சேயின் ஆளுமையில் அந்தப்பயணம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றாலும், சே பிறகு குவாத்தாமலாவில் சந்திக்கும் அரசியல் ஆளுமை மிக்க பெருநாட்டு பெண்ணுடனான (Hilda) தொடர் விவாதங்களினூடாகத்தான் அவரின் அரசியல் சித்தாந்தப் பயணங்கள் தொடங்குகின்றது. மார்க்சின் மீதான பெருவிருப்பும், ஏகாதிபத்தியம் மீதான எதிர்ப்பும் அங்கேதான் சேயில் ஆரம்பிக்கின்றது. ஹில்டாவை சே திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கின்றது.

பிறகு முதலாவது கியூபாப் புரட்சி தோல்வியில் முடிவுற்று சிறையில் இரண்டு வருடங்கள் கழித்த பிடலை மெக்சிக்கோவில் சே சந்திக்கின்றார். அதன்பின்னர் கியூபாப் புரட்சி நடக்கின்றது. கியூபாப் புரட்சி மிகக்குறுகிய காலத்தில் நடந்தது என்று நினைத்துக்கொண்டிருந்த -எனக்கு- Sierra Maestra மலைப்பிரதேசத்தில் வருடக்கணக்கில் தங்கியிருந்து, தமக்கான ஆயுதங்கள், ஆட்சேர்ப்பு, வானொலி பிரசாரம் என்று நெடிய விடயங்களை கியூபாப்புரட்சியாளர்கள் செய்திருக்கின்றார்கள் என்பது -என்னளவில்- ஆச்சர்யமாயிருந்தது. பிறகு காஸ்ரோவின் ஆணைப்படி, அவரது முக்கிய லெப்டினட்களான சேயும் இன்னொருவரும் வெவ்வேறு நகரங்களினூடாக ஹவானாவை அடைய முயற்சிக்கின்றனர். அங்கேதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த -450 கிலோமீற்றர்கள் நடந்து- சான்ரா கிளாராவை சே தனது தோழர்களுடன் வந்து சேர்கின்றார். அந்தச் சமயத்தில்தான் ஆயுதத் தளபாடங்களுடன் வருகின்ற புகைவண்டியைத் தாக்கி கைப்பற்ற, மிக முக்கிய தளமான சான்ரா கிளாராவும் பின் வீழ்கின்றது. ஒரு வைத்தியரான சே, திறம்பட போராட்டத்தை நடத்தும் ஆயுதப்போராளியாக அதில் பரிணமிக்கின்றார்.

சேயின் ஆளுமையில் கறை என -ஒரு தனி மனிதரால் நினைக்கத்தோன்றும்- பஸ்டிட்டா ஆதரவாளர்களை கழுவிலேற்றும் பணி கியூபாப்புரட்சியின்பின் நிகழ்கின்றது. 'புரட்சியின் பெயரால்..' என்று காஸ்ரோவுடன் சேர்ந்து சேயும் அவர்களுக்கான தீர்ப்பை எழுதுகின்றார். காஸ்ரோவுக்கு அடுத்த முக்கிய ஆளுமையாக சே கியூபாவில் வளர்கின்றார். எனினும் ஏகாதிபத்திய எதிர்ப்பே முக்கியம் என்பதிலும் அமெரிக்கா முதன்மையான எதிரி என்ற விவாதங்களிடையே சேயிற்கும் பிடலுக்கும் முரண்கள் எழுகின்றன. கியூபாவுடனான தங்கள் உறவு முறிந்ததற்குப் பிடலை விட சே முக்கிய காரணமென அமெரிக்காவும் குற்றஞ்சாட்டுகின்றது. பொருளாதாரத் தடை, மற்றும் கியூபாவின் முக்கிய ஏற்றுமதியான கரும்பை வாங்குவதில்லையென அமெரிக்க முடிவெடுக்க, சோவியத் ஒன்றியம் கியூபாவின் புதிய அரசுக்கு, கரும்பைத் தாங்களே இறக்குமதிசெய்து கைகொடுக்கின்றது. ஒரிடத்தில் கியூபாவில் நடந்தது என்ன என்று கேட்கப்படுகின்றபோது சே நகைச்சுவையாக so-CIA-list revolution என்று வார்த்தைகளைப் பிரித்துப் பதிலளிப்பார்.

ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் எப்போதும் களத்தில் நின்று மக்களுடன் போராட வேண்டும் என்று கூறி பலவேறு வகையான வேலைகளை ஒரு சாதாரண குடிமகனாய் நின்று செய்து, இப்படி எல்லா அமைச்சுப் பொறுப்பில் இருப்பவர்களும் களத்தில் இறங்கவேண்டும் என்று கூறவும் சே செய்கின்றார். தேசிய வங்கிகளின் தலைவராய் இருக்கும் சேயிடம் ஒரு அந்நிய நாட்டு நிருபர் are you an economist? என்று கேட்கும்போது "No, I'm a communist," என்று பதிலளிப்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். எனினும் சேயினது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தோற்றுப்போக, பிடல் தங்கள் நாட்டு புரட்சியின் தூதுவராய் பலவேறு உலகநாடுகளுக்கு சேயை அனுப்புகின்றார். அந்தச் சுற்றுப்பயணத்தில்தான் சே, குருசேவ்,மாவோ, ரிற்றோ, நாசர், நேரு போன்றவர்களைச் சந்திக்கின்றார். எனினும் திரும்பி வருகின்றபோது ஆபிரிக்காவில் நடக்கும், ஆபிரிக்கா-ஆசிய மாநாட்டில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிடுகின்றார். கம்யூனிச நாடுகள் தங்கள் லாபநட்டங்களைப் பார்த்து மூன்றாம் உலகநாடுகளுடனான வர்த்தக உறவுகள் வைத்திருக்கக்கூடாது; மேலும் அந்நாட்டுகளின் புரட்சியிற்கு தேவையான ஆயுதங்களையும் இலவசமாய் கொடுக்கவேண்டும் என்றும் கூறுகின்றார். சோவியத் ஒன்றியத்தை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், சோவியத் மீதான விமர்சனமாய் அது பலரால் பார்க்கப்படுகின்றது (இவ் ஆவணப்படுத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும், சே பின்னாட்களில் ஆகர்சிக்கப்பட்ட சீன கம்யூனிசமே, சோவியத் எதிர்ப்புக்கும் பிடலோடான பிளவுகளுக்கும் ஏதோவொரு வகையில் காரணமானது என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது). அந்த எதிரொலி பிடல் சேயை விமான நிலையத்தில் சந்திக்கும்போது படம்பிடிக்கப்பட்ட முறையிலே தெளிவாகத் தெரிகின்றது. பயணத்தின் முடிவில் கிட்ட்டத்தட்ட இருபது மணித்தியாலங்கள் எந்த கமராவும் அனுமதிக்கப்படாமல் சேயிற்கும் பிடலுக்கும் இடையில் உரையாடல் மூடிய அறையினுள் நிகழ்கின்றது. அதன்பின்னராக சே யின் இருப்பு கியூபாவின் எந்த நிகழ்விலும் இல்லாமற்போகின்றது. இற்றைவரை பிடலுக்கும் சேயிற்கும் நிகழ்ந்த தனிப்பட்ட உரையாடல் இரகசியமாகவே இருக்கின்றது.

தொடர்ந்து சேயின் இருப்பு கியூபாவில் இல்லாததால் கியூப மக்களிடையே பலவேறு வதந்திகள் சேயைப் பற்றி பரவுகின்றது. ஒருகட்டத்தில், பிடல் உண்மையை உடைக்கின்றார். சேயின் முக்கியத்துவம் பெற்ற -பிடலுக்கான கடிதம்- பொது அரங்கில் வெளியிடப்படுகின்றது. தான் தனது எல்லாப் பதவிகளிலிருந்து விலகுகின்றேன்; இனி கியூபவாசியாக தான் இருக்கப்போவதில்லையென்ற சேயின் சாட்சியம் வாசிக்கப்படுகின்றது. இதற்கு எப்படிச் சேயினது எதிர்வினை இருந்தது என்பதை அந்தக் காலத்தில் சேயுடன் கொங்கோவில் இருந்த ஒரு தோழரால் இப்படிக் கூறப்படுகின்றது: சே அந்தக் கடிதம் தனது இறப்பின் பின்னே வெளியிடப்படும் என்று நம்பிக்கொண்டிருந்தார். அந்தக் கடிதம் பொதுவில் வாசிக்கப்பட்டதை அறிந்தபோது சே கூறியது, 'ஸ்ராலினைப்போல இன்னும் பலர் தமது திருவுருவங்களை வளர்க்க பிரியப்படுகின்றார்கள் போலும்' என்பது. இது பிடல் மீதான விமர்சனம் என்பது எல்லோருக்கும் தெரியும். கொங்கோவில் சேயினது புரட்சியிற்கான திட்டங்கள் தோற்கின்றன. எனினும் சேயிற்கு தனது கடிதம் பிடலால் வாசிக்கப்பட்டதால் கியூபாவுக்கு வரவும் சங்கடமாயிருக்கின்றது. இறுதியில் சே அடுத்த திட்டத்திற்காய் பிடலிடம் வந்து சேர்கின்றார். அவரிடம் ஆளுமை மிக்க இருபது(?) கியூப வீரர்களை பிடல் ஒப்படைக்கின்றார். சே பொலிவியா போய்ச் சேருகின்றார். இலத்தீன் அமெரிக்கா முழுவதற்குமான கம்யூனிசப்புரட்சியென்ற தனது பெருங்கனவை விசாலிப்பதற்காய். எனினும் அவர் தனக்கு ஆதரவளிக்கும் என்று நம்பிய பொலிவியா கம்யூனிசக் கட்சி இவருக்கு ஆதரவு வழங்காது கைவிடுகின்றது (அக்கட்சியில் சோவியத்து கேஜிபியின் ஊடுருவல் இருந்ததாய் எங்கையோ வாசித்ததாய் நினைவு). சேயினது உடனடித்திட்டம் பொலிவியாவில் இருக்கும் அரசின் ஆட்சியை கவிழ்ப்பது அல்ல; இலத்தீன் அமெரிக்கா நாடுகளின் புரட்சியிற்கான ஒரு பெரும் தளத்தை பொலிவியாவில் அமைப்பதே அவரது முதன்மையான நோக்கமாயிருந்தது. பொலிவியா, ஐந்து இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கிடையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் வியட்நாமிய போரும் தீவிரமடைகின்றது. ஒன்று... இரண்டு... பல நூற்றுக்கணக்கான வியட்நாம்களை.... நாம் உருவாக்கவேண்டும் என்று சே பேச்சொன்றில் குறிப்பிடுகின்றார். பல வியட்நாம்களை உருவாக்குவதென்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்தவேண்டும் என்ற வகையிலும் வாசித்துணரலாம்.

சே யினது தோழர்கள் கைப்பற்றப்பட, அவர்களின் உதவி மற்றும் ஆயிரக்கணக்கான பொலிவியா வீரர்களின் சுற்றிவளைப்பில் சே காயத்துடன் பிடிக்கப்படுகின்றார். நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு இரவு சிறு பள்ளியொன்றில் தங்கவைக்கப்படும்போது மேலிடத்திலிருந்து விசாரிக்கும் பொலிவியா அதிகாரிக்கு தகவல் வருகின்றது, எந்த ஒரு சிறைக்கைதியும் உயிருடன் திருப்பிக் கொண்டுவரக்கூடாது என்று. சேயிற்கு வேட்டுக்கள் தீர்க்கப்படுவதற்கு முன் சிஐஏ அதிகாரியின் வரவு இருந்தது என்பதை பொலிவியா பொலிஸ் அதிகாரி ஆவணப்படத்தில் உறுதிப்படுத்துகின்றார். சேயின் இறுதிக்கணத்தை நேரடியாகப் பார்த்த பள்ளியாசிரியை ஒருவரும் அதில் உரையாடுகின்றார். பிறகு ஒரு பகலும் இரவும் சேயினது உடல் பொலிவியா மக்களுக்கு ஒரு 'துரோகி'யைப் போல காட்சிக்கு -எந்த மரியாதையும் இல்லாது- வைக்கப்படுகின்றது. சேயினது உயிரற்ற உடலைப் பார்க்கும்போது கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததுமாதிரியான காட்சிதான் நினைவுக்கு வருகின்றது. விழிகள் மூடாது உதடுகளில் சிரிப்பு மலர்ந்தபடிதான்... இறந்தபின்னும் சே காட்சிதருகின்றார். அந்தக் கடைசிக்கணங்களைப் பார்க்கின்ற எவரும் சே இறந்துவிட்டார் என்று கூறமுடியாதபடி சே 'உயிர்ப்புடன்' இருப்பார்.

ஆவணப்படம் என்றாலே அலுப்பூட்டும் என்று தோன்றாவண்ணம் இப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது (அல்லது சேயின் மீதான ஈர்ப்பால் அலுப்புத் தெரியவில்லையோ தெரியாது). சேயினது பல நேரடி நிகழ்வுகள் அப்படியே பதிவாக்கப்பட்டுள்ளன. ஒரு கூட்டத்தில் சே, "நானொரு கவிதை சொல்லப்போகின்றேன்" என்று சிறுவனைப் போல வெட்கமுறுவதும், பிறகு, "பயப்பிடவேண்டாம்; இது எனது கவிதையல்ல" என்று கூறியபடி கவிதையொன்றை வாசிப்பதும், சே தனது தகுதிகளை மறந்து சாதாரணமாய் இருக்க முயற்சித்திருக்கின்றார் என்பதைக் கவனிக்கலாம். சேயினது நெருங்கிய உறவுகள், முக்கிய தோழர்கள் -ஏன் பிடல் கூட சேயைப் பற்றி உரையாடுவது என- அனைத்தும் இந்த ஆவணப்படத்தில் சேர்க்கப்பட்டிருப்பது, ஏதோ சேயினது காலத்தில் நாமும் உலாவிவிட்டு வந்ததுமாதிரியான உணர்வினைத் தருகின்றது. சே தனது குழந்தைகள் மீது மிகப்பெரும் விருப்புடையவராக இருந்தார். அவரது இரண்டாவது திருமணத்தில் ஐந்து குழந்தைகள் அவருக்கு இருந்தார்கள். தனக்கு ஒன்பது குழந்தைகள் வேண்டும் அப்போதுதான் ஒரு பேஸ்போல் அணியை அமைக்கமுடியும் என்று தன்னிடம் நகைச்சுவையாக கூறுவார் என்று சேயினது துணைவியார் ஓரிடத்தில் நினைவுபடுத்தும் காட்சியும் உண்டு

ஒரு கம்யூனிசப் புரட்சியாளன் எப்படி இருப்பான் என்பதை சே தன் வாழ்வினூடாக நிரூபித்துவிட்டுப் போயிருக்கின்றார். ஒரு புரட்சியாளன் வாழும்போது அல்ல; அவன் சாகும்போதுதான் உலக மக்களுக்கு நிறைய விடயங்களைச் சொல்லிச் செல்கின்றான் என்பது சேயினது இறப்பின் பின்பான அவரது பெரும் எழுச்சி நமக்குச் சாட்சியம் சொல்கின்றது.

Thnaks to http://djthamilan.blogspot.com/2006/12/blog-post_30.html

No comments: