Tuesday, January 16, 2007

ராஜேந்தர் சர்சார் ஆய்வும் இந்திய இஸ்லாமியர் நிலையும்

ராஜேந்தர் சர்சார் ஆய்வும் இந்திய இஸ்லாமியர் நிலையும்சித்தார்த் வரதராஜன் (4.11.06) இந்து / தமிழாக்கம்: ஜீவா

இந்திய முஸ்லிம்கள் எந்த அளவுக்கு ஒதுக்கப்பட்டவர்களாக, பிற்படுத்தப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள் என்பதை நீதிபதி. ராஜேந்தர் சர்சார் ஆய்வு அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது. முஸ்லிம்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகிறது. அவர்களை திருப்திபடுத்த பெரும் முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று குறைகூறி அரசியல் லாபம் பெற்று வந்தோரை வாயடைக்கச் செய்துள்ளது.

இந்திய மக்கள் தொகையில் 17 விழுக்காடாக உள்ள முஸ்லிம்கள் நுழைய முடியாத பல தடுப்புச் சுவர்களால் தடுக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. அரசு நிர்வாகம், நிதித்துறை, காவல்துறை, தனியார் துறை என கல்வி, பொருளாதாரம், சமூகம் என அத்தனை நிலைகளிலும் முஸ்லிம்களை ஒதுக்கிப் பின் தள்ளும் கரங்களைக் காண முடிகிறது. இவை அனைத்திலும் முஸ்லிம்களின் பங்கு வெறும் மூன்று முதல் ஐந்து விழுக்காடாகவே உள்ளது. பாரதிய ஜனதாவும், சில பத்திரிகைகளும் இந்திய ராணுவத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன என்பதை வெளிப்படுத்தவில்லை சர்சார் கமிட்டி என வெறிப் பிரச்சாரம் செய்தன. அங்கும் கூட முஸ்லிம்களின் இருப்பு வெறும் மூன்று விழுக்காடே.

ஒவ்வொரு துறையிலும் முஸ்லிம்களின் பங்கு வருந்தத்தக்க அளவு குறைவாகவே உள்ளது. கல்வியில் பெரும் சமத்துவமின்மை நிலவுகிறது. ஆரம்பக் கல்வியிலும் உயர்நிலைப் பள்ளியிலும் முஸ்லிம்கள் நுழைவதும், வெளிவருவதும் தேசிய அளவைவிடவும் மிகவும் குறைவாகவே உள்ளது. கல்லூரிக் கல்வி என வரும் போது முஸ்லிம்கள் பங்கு பரிதாபமானதாகவே உள்ளது. இதே நிலைதான் வேலை வாய்ப்பிலும் நிலவுகிறது. ஒவ்வொரு துறையிலும், சமூக பொருளாதார அந்தஸ்திலும் முஸ்லிம்களின் பங்கு சமத்துவ மற்றதாக உள்ளது. உள்ளதும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பதை புள்ளி விபரங்கள் கூறுகின்றன

முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையும் பல நகரங்களில் பெருமைப்படும்படி அமையவில்லை. பல நகரங்களில் முஸ்லிம்கள் வாழாத பகுதியில் வாடகைக்கோ, விலைக்கோ முஸ்லிம்கள் வீடு பெறுவது கடினமானதாக உள்ளது. பல பத்திரிகைத் துறை முஸ்லிம்கள் கூட இத்தகைய அனுபவத்தைப் பெற்றுள்ளார்கள். முன்னாள் அமைச்சராக இருந்த ஒரு இஸ்லாமியர் தமக்கான ஒரு வீட்டைப் பெற ஒரு இந்து நண்பரின் உதவியைப் பெற வேண்டியிருந்தது. மும்பையில் முஸ்லிம்கள் நிலை இன்னும் மோசம். கடை பெறுவதிலிருந்து கடன் பெறுவது வரை முஸ்லிம் வியாபாரிகளுக்குப் பெரும் பாடுதான். எங்கும் சந்தேகக் கண்கள். பாராளுமன்றம், சட்டமன்றம், நகர சபை என அனைத்து நிலைகளிலும் முஸ்லிம்களின் பங்கு மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் இல்லை என்கிறார் இக்பால்.ஏ.அன்சாரி தமது POLITICAL REPRESENTATION OF MUSLIMS 1952-2004 நூலில். இதற்கு கேரளா மட்டுமே விதிவிலக்கு.

மக்கள் தொகை பெற வேண்டிய பங்கில் பாதியளவு பதவிகளையே முஸ்லிம்கள் பெற்று வருகின்றனர். இந்தக் குறையை மதவாதிகளே பயன்படுத்திக் கொண்டு பேதம் வளர்க்கின்றனர்.‘வன்முறைகளுக்காக போர்’ எனும் போர்வையில் ஏற்கனவே வளர்ந்து வரும் கசப்பும், பகையும், காவல்துறையின் முட்டாள் தனத்தாலும், மதச்சார்பாலும் மேலும் மோசமாக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு எனும் பெயரில் பெரும்பாலும் முஸ்லிம்களே துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.

குஜராத் கலவரமும் அதில் காவல்துறையின் ஒரு சார்பான நடவடிக்கைகளும் நாடறிந்தது. நாட்டின் பிற பகுதிகளிலும் காவல் துறையின் நடவடிக்கைகள் பலவும் ஒரு சார்பாகவே உள்ளன. இதை முடிவு கட்ட நிர்வாகமோ, நீதித் துறையோ அவசர உணர்வுடன் அணுகுவதில்லை. 2002 மும்பை வெடிப்புக்கான தீர்வு விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் 1992-93ல் நடைபெற்ற முஸ்லிம்கள் மீதான படுகொலைகள் பற்றிய தீர்வு ஏன் இன்னும் வெளிவரவில்லை? தவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தீர்ப்பு இன்னும் கிடப்பில் கிடக்கிறது.

ஊடகங்களின் பங்களிப்பு ஓரளவு உள்ளது. ஒரு சில பத்திரிகை கள் இந்திய முஸ்லிம்களின் பாட்டை வெளிக்கொணரும் போது,மற்ற பத்திரிகைகள் வெறுப்பையும், பகையையும் வளர்க்க ஒரு சார்பான செய்திகளையே முதன்மைப்படுத்துகின்றன.முஸ்லிம்களின் பின்தங்கிய நிலை பற்றியே ஒருமித்த கருத்து இல்லை. முஸ்லிம் திருமணங்கள் பற்றிய விவாதம் தொலைக்காட்சியில் காட்டப்படும் போது அது இஸ்லாமியரின் பின்தங்கிய நிலையைக் காட்டுவதாகவே உள்ளது.

அமெரிக்காவின் ஊடங்கள் யூதச் செய்திகளை வெளியிடுகின்றன. இந்தியாவில் இஸ்லாமியர்க்குப் பரிவான செய்திகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசர்வேஷன் வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதத்தில் பங்கேற்க ஒரு தொலைக்காட்சியால் அழைக்கப்பட்டார். முஸ்லிம்களுக்கு ரிசர்வேஷன் தேவையா என்பது பொருள். அவர் தான் அதற்கு எதிராகப் பேசமாட்டேன் என்றார். தொலைக்காட்சியினர் உங்கள் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அவசியம் தேவை. எனவே அதற்காகப் பேசுங்கள் என்று வற்புறுத்தினர். எனினும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. எனவே அந்நிகழ்ச்சியே நிறுத்தப்பட்டது.

ஒரு சமயம் ஒரு அறிஞர், முஸ்லிம்கள் சுய இரக்கத்தை விட வேண்டும். தாஜ்மஹாலைக் கட்டிய கைகள் அவர்களுடையன எனப் பெருமித உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். தலித்துகள் தங்களை உயர்த்திக் கொள்ள எவ்வித சுயமுற்சியும் எடுப்பதில்லை என்று எவரும் குறை கூறிவிட முடியாது. ஆனால் முஸ்லிம்களின் கல்வி இன்மைக்கும், வறுமைக்கும் முஸ்லிம்களே குறை கூறப்படுகின்றனர். படிப்பில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை கூறப்படுகிறது. அவர்களுக்கான பள்ளிகள், இடங்கள், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், புத்தகங்கள், கல்விச் செலவு, தடையான வறுமை ஆகியன நீக்கப்பட்டு விட்டனவா என்ற கேள்விக்குப் பதிலில்லை.

இந்தக் கேள்விகளின் பின்னணியில் இருந்தே பிரதமர் மன்மோகன் சிங் ராஜேந்தர் சர்சாரின் பரிந்துரைகளை கவனிக்க வேண்டும். இயல்பாக இப்போது நிலவி வரும் ஏற்றத் தாழ்வு, சமத்துவமற்ற சூழல் ஆகியனவற்றை மறந்து விடக்கூடாது.அரசுக்கு இவற்றைச் சரி செய்யும் அரசியல் தைரியம் இருக்க வேண்டும். முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையை உடனடியாக, அக்கறையுடன் அணுக வேண்டிய அவசரச் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் இதை நிறைவேற்றும் மனத் தூய்மையுடன் பி.ஜே.பி உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் பேசி ஒரு மனம் ஒத்த தேசிய அணுகுமுறையை உடனடியாகக் கண்டாக வேண்டும்.

இதற்கான முதற்தேவை கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, சுயவேலை வாய்ப்பு, கடன் ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு, இஸ்லாமியத் தலைவர்கள் எவ்விதக் குழப்பமான முடிவுகளை ஏற்கக்கூடாது. கடந்த அறுபது ஆண்டுகள் சமரசமற்ற போராட்டம், அரசியல் அணுகுமுறை, யுக்திகள் மூலமே தலித்துகள் நிலைமை இன்றைய மேம்பட்ட நிலையை எட்டியுள்ளது என்பதை முஸ்லிம் தலைவர்கள் மறந்து விடக் கூடாது. இஸ்லாமியத் தலைவர்கள் எவ்விதமான மேம்போக்கான, அலங்காரச் சலுகைகளிலும் மயங்கி விடக்கூடாது

சமத்துவமின்மையைப் போக்குவதில் எவ்வித சமரசமும் சமத்துவ வாய்ப்பும் அதன் விளைவான சமத்துவச் சூழலும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. சமத்துவ வாய்ப்பு என்பது முதலில் ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலான வேறுபாட்டை ஒழிப்பது. உறுதிப்படுத்தப்பட்ட சமத்துவம் என்பது குழந்தைகள் எவ்விதமான புறக்கணிப்புகளுக்கும் இடமின்றி, அவர்களின் திறமைகளையும், ஆற்றலையும் பயன்படுத்தும் கோட்டா எனும் ஒதுக்கீடு மூலம் இந்தியா சமத்துவ விளைவுகளுக்கு ஒப்பான சேவை செய்து வருகிறது.

ஆனால் அடிப்படைத் தேவைகளுக்கான செலவினங்கள், ஒதுக்கீடு, சமத்துவ வாய்ப்பு வழங்குவது போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தருவதில்லை. இந்த அநீதி கல்வித் துறையில் பெரிதும் வெளிப்படுகிறது. கல்வி இடை நிறுத்தம் காரணமாக தலித், பழங்குடியினர் உயர்கல்வி, பல்கலைக்கழக அளவில் குறைகிறது. பள்ளிகள் அளவில் தரமிழந்து காணப்படுகிறது.

2000ல் வெளியான ஜுலியன் பீட், ஜான் ரோமர் சமத்துவ வாய்ப்பு உண்டாக்க அமெரிக்க அரசு தனது செலவினத்தை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டியது. மக்கள் வெள்ளை -கருப்பு என நிறத்தாலும் மேல்தட்டு, அடித்தட்டு என பொருளாதார, சமூக நிலைகளால் பிரிக்கப்படுகின்றனர்.அடித்தட்டு கருப்பின மக்களுக்கான அரசு செலவினம் உயர்மட்ட வெள்ளையர்க்கு தரப்படுவது போல் ஒன்பது மடங்கு இருக்க வேண்டும் என்கிறது.

இந்தியாவில் உயர்மட்டக் கல்விக்காகக் செலவிடப்படும் தொகையில் பெரும்பகுதி மேல் தட்டு, சமூக மேலின மக்களுக்கே செலவிடப்படுகிறது. உண்மை இடஒதுக்கீடு என்பது வசதி வாய்ந்தவர்களுக்காகவே உள்ளது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும். பொருளாதார அளவீடுகளை மட்டும் கொண்டு ஏற்றத்தாழ்வுகளை முடிவு செய்ய முடியாது. ஒதுக்கப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தனிச் சலுகை அவசியம்.தொழில், வேலை வாய்ப்புகள், வாழ்விடம், தொழிற்கடன், கல்வி ஆகியவற்றில் என வேறுபாடுகள் ஒழிக்கப்பட்டு, சமத்துவ வாய்ப்பு அடித்தட்டு மக்களுக்குத் தரப்பட வேண்டும். இடஒதுக்கீடு என்ற ஒற்றை நிலையால் அரசியல் விவாதங்கள், மோதல்கள் உண்டாகலாம். முஸ்லிம்களுக்குப் பெரும் பலன் உண்டாகாது.முஸ்லிம்களுக்கான இடத்தை உறுதி செய்ய அரசுத் துறைகளும், தனியார் நிறுவனங்களும் கல்வி, வேலை வாய்ப்பு, தொழிற் பயிற்சி, தொழில் துவங்க உதவி ஆகிய பகுதிகளில் வழங்க முன்வர வேண்டும். இதுவே நாட்டின் வளர்ச்சிக்கும் துணை புரியும்.

முஸ்லிம்களுக்கும், தலித்துகளுக்கும், பழங்குடி மக்களும், பிற்படுத்தப்பட்டோரும் காலம் காலமாக அனுபவித்து வரும் சமத் துவமின்மையை ஒழிக்க அரசு சமத்துவ வாய்ப்புகளைத் தாமதமின்றி கல்வித் துறையின் அனைத்து நிலைகளிலும் உருவாக்குவது நாட்டின் அமைதியான, விரைவான முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தேவை.

No comments: